Sunday 27 March 2016

சிறுகதை: அவள்

அந்தி சாய்ந்த பொழுது வீதிகளில் பரபரப்பு எல்லாரும் வீடு திரும்பி கொண்டிருக்கிறார்கள் வாகனங்களின் சப்தம் இடைவெளிக்காய் ஏங்கி நிற்கிறது. ஒரு பிச்சைக்காரன் கடந்து போகிறான், சாலையோர வியாபாரிகள் சத்தம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரே டீக்கடையில் கூட்டம் , தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருக்கிறது. என் மனம் சிந்திக்கிறது இவர்களிடம் தொலைக்காட்சி பெட்டி இல்லையா? ஏன் இவர்கள் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நடந்து செல்பவர்கள் என்னை முந்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை முந்த முயற்சிக்கவில்லை அறுபத்தி ஐந்து வருடங்கள் அந்த அனுபவத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. மெதுவாய் சாலையில் ஊன்றுகோலோடும் கவனத்தோடும் நடக்கிறேன்.கையில் ஊன்று தடிக்கான காரணம் அறுபதில் உடலில் ஏற்பட்ட கோளாறுக்கான பரிசு அது..
சாலையின் கவனம் என்ற நினைவை மறக்க முடியவில்லை கண்களின் தெளிவு மங்கியே இருக்கிறது. மாலையில் அவ்வளவாய் வெளிவருவதில்லை,காரணம் பாதைகளில் குழிகளே பாதைகளாக மாறிவிட்டது. மற்றொரு கையில் உணவுப் பொட்டலம் என் மனைவிக்கானது என் இரவு உணவை ஒரு தோசையோடு முடித்துவிட்டேன். முப்பது வருடமாய் அவளுக்கும் எனக்கும் பிடித்த உணவகம். வாரத்தில் இரண்டு நாட்களும் எனக்கு முடியாத நாட்களிலும் இந்த உணவகம் தான் எங்கள் தேவையை முடித்துக் கொடுக்கின்றன.. உணவகத்தின் உரிமையாளரோடான பந்தம் இப்போது அவரது மகனோடும் தொடர்கிறது. அந்த உணவகம் அவளுக்குப் பிடித்துப் போனதற்கு அவர்களின் விலையும் உணவின் ருசியும், கனிவும் தான்.. நாட்போக்கில் அவர்களின் உணவிற்கு எங்களுக்கு மட்டுமல்ல எனது குழந்தையும் அடிமை ஆகிப் போனோர்கள்..
நினைவலையில் அது மகிழ்வான தருணம் தான், சப்தம் குறையவில்லை தெற்கில் மின்னலின் தாக்கம் அதிகமாய் தெரிகிறது.. குடை மறந்து விட்டது உள்மனதிலிருந்து வெளிப்பட்டது. மறதி அந்த வயதிற்கானதே என ஞாபகப்படுத்த இயற்கை நிகழ்வுகள் தோழனாய் இருப்பதில்லை போல. காற்றின் வேகம் அகிகமாய் ஈரப்பதத்துடன் இருக்க மெலிதாய் மழை சாரலைத் துவக்க வழிப்பாதையிலிருந்து ஒதுங்க இடம் தேடினேன். நல்ல வேளை நண்பனின் புத்தகக் கடைக்கருகில் தானிருந்தேன் மெதுவாய் அந்த புத்தகக் கடைக்குள் நுழைய நண்பர் மட்டும் புத்தகத்தை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கிறார். வேறு யாருமில்லை கடையில் என்ன ஆச்சர்யம் எல்லா கடைகளும் மனிதறிவை மழுக்கி அவன் பணத்தை சூறையாடும் காலத்தில் அவன் அறிவை வாசிக்கவும் நேசிக்கவுமான இடத்தில் ஆளரவமில்லை என்பது வருத்தம் தான். எனது ஊன்றுகோலின் சப்தம் தெளிவாய் கேட்க படித்துக் கொண்டிருந்த நண்பர் புத்தகத்தை கீழே வைத்து புன்முறுவலாய் நீயும் மழைக்காய் ஒதுங்கினாயா ? என்ற அவனுக்குரிய தொனியில் கேட்டான். இனிமையான நண்பனான அவனுக்கு கிண்டல் செய்வது பிடிக்கும் எனக்கும் அவனை என்னை கிண்டல் செய்வதால் பிடிக்கும்..  மனம் அவனிடம் பேச விருப்பமில்லை, கையில் உணவுப்பொட்டலம் ஆறிக்கொண்டிருக்கிறது. அவளும் பசியோடு காத்திருப்பாள். இந்த மழைக்கும் அறிவில்லை கொஞ்சம் நேரம் கழித்து வந்தாலென்ன இல்லை எனது தவறுதான் ஏனோ இன்று பாதையில் அதிக வாகனங்கள் என்றபோது நாளை முதல் ஐந்து நாட்களுக்கான விடுமுறை என்பதை எனது நூலக நண்பனின் வாயிலாக அறிந்து கொள்ள மக்களும் நியாயமாகத் தான் வேகத்தை தொடர்கிறார்கள் எத்தனை பேர் இன்று தனிமையில் தவிக்கும் பெற்றோர்களையோ, தன் குடும்பத்தையோ, பள்ளி விடுதியில் இடைப்பட்ட சிறார்களைப் பார்க்கவோ செல்லக்கூடும். இதுப்போன்ற விடுமுறைகள் இன்று கூட்டுபந்தத்தின் மகிழ்வை கொடுக்கிறது என நினைத்திருக்கும் போதே, நண்பன் மழை நின்றது எனச் சொல்லி நினைவை கலைக்க நானும் காலை வருகிறேன் என்று சொல்லி விடைப் பெற்று வெளியே வர என்ன இது? நதிகளான  சாலை இப்படி புதிர் போட்டு வைத்திருக்கிறதே என்றெண்ணிய நேரம் அவளின் நிலை என் முன்னே ஒருக்கணம் மின்னி மறைய மெல்ல போய்விடலாம் என்ற நம்பிக்கை சாரலாய் துளிர் விட்டது. 
சாலையில் இறங்கிய போது காலில் பட்ட கழிவுநீரோ மழைநீரோ எதுவாயினும் அதன் சிலிர்ப்பு உடலெங்கும் பரவ மெதுவாய் நீர் வடிந்த சாலையை நோக்கி நடந்து கொண்டிரு்கிறேன். வாகனங்கள் குறைவதாயில்லை எனக்கும் சாலையை கடக்கும் நிலையில் திரும்பி கடக்கலாமா என்ற போது மெதுவாய் யுத்தமொன்று அரங்கேறியது அது கடப்பதற்கான நம்பிக்கைக்கும் வேண்டாமென்ற அவநம்பிக்கைக்குமாக இருக்க சாலையின் வலதுபுறம் பார்க்கிறேன் விளக்கின் ஒளியில் என் கண்கள் அவநம்பிக்கை எனும் இருட்டை நோக்கித் தள்ள கால்கள் நடுங்க இதயதத்தில் சிறிதாய் நடுக்கம் கூடியது அந்த நேரம்  தூரத்தில் ஒலித்த ஆம்புலன்சின் சத்தம் மெதுவாய் அதிகரிக்க அன்று அவள் ஆம்புலன்சில் பயணத்தைத் தொடர அவள் கையைப் பற்றி அமர்ந்திருக்க அது வேகமாய் சென்று கொண்டிருந்தது.
வேலை செய்து கொண்டிருந்தாள் அப்போது நான் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன், டமார் என்ற சப்தம் என்னவோ நடந்துவிட்டதே என எண்ணி வேகமாய் எழ முற்படுகிறேன் முடியவில்லை வயதின் பிரச்சினை இப்போது வரும் பொறுமையை ஏற்றுக்கொள்ள அடம்பிடிக்க தட்டு தடுமாறி எழுந்து விடுவதற்குள் பக்கத்து வீட்டிலிருந்த அவள் என் மனைவிக்கு மிக நெருக்கமாகி விட்டவள் கல்யாணம் முடிந்து பத்து ஆண்டுக்குள்ளே கணவனைப் பறிக்கொடுக்க சொந்த வியாபாரத்தை கவனிப்பவள் இருந்தும் வீட்டில் ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாய் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் அவளைப் பற்றி இருந்தும் இந்த நேரத்தை என் மனைவிக்காய் ஒதுக்கியுள்ளதால் இனியொரு தருணம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் கடக்க எனக்கு முன்பாகவே ஆம்புலன்சிற்கு போன் செய்து கொண்டிருக்கிறாள் மேலும் விலாசத்தையும் சொல்லி கடைசியாக மகளுக்கு உணவுக் கொடுத்திட்டு வருகிறேன் என்று முடித்து சென்ற தருணம் என் கண்களில் மெதுவாய் நீர சுரக்க துவங்கியது.
அவளின் கை என் தோளில் பட வயதின் முதிர்ச்சி உடலை தளர்த்தியதால் கண்ணயர்ந்து விட்டதை எண்ணி வருத்தம் கொள்ள நான்கு பேராக என் மனைவியை தூக்கி ஸ்டெரெச்சரில் வைத்து கொண்டு போக அவள் என் கை பிடித்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்த போது உங்கள் மகனுக்கும் தகவலைக் கொடுத்து விட்டேன் என்று மட்டும் சொல்லி வைத்தாள். நான் பேசவில்லை மெதுவாக கைப்பிடித்து லிப்டின் வழியிறங்கியவுடன் அவர்கள் எங்களுக்காய் காத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் சத்தம் மெல்ல தொடங்கி அதிகமாகி கொண்டிருக்க மனைவியோ சிந்தனையுற்று மயக்கமாயிருப்பதை பார்த்த போது மனது துடிக்க தொடங்கியது,மெதுவாய் அவளது கையை இறுகி பற்றிக் கொண்டேன். அவள் கையில் உஷ்ணமிருந்தது. மெதுவாய் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். அவளோடு கேட்டு விடலாமா என்ற நினைத்தப் போது அவளே உங்கள் பிள்ளை வேலைப் பளு அதிகமாக இருக்கிறதாம் அதனால் உடன் வர இயலாது எனச் சொல்லி விட்டார்கள், நல்ல மருத்துவமனையில் அனுமதிக்கவும், பணம் தேவையிருந்தால் அழைக்கவும் சொல்லி இருந்தான் என்ற போது இவர்கள் எனது பிள்ளை தானா என்ற சந்தேகம் எழும் போதே வண்டி மருத்துவமனை வளாகத்தினுள் கடந்திருந்திருந்தது.
மருத்துவமனை செவிலிகள் எறும்பாய் வேலைச் செய்கிறார்கள். வேகமாய் ஸ்டெரெச்சர் எங்களை கடந்துச் சென்றிருந்தது. எங்கள் இருவரையும் அவசரச்சிகிச்சைப்பிரிவின் முன் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். ஐந்து நிமிடத்தில் டாக்டர் எங்களைக் கடந்து சென்ற போது அருகிலுள்ள கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டுவிட்டது. எங்களால் இயன்றதை செய்தோம் முடியவில்லை என்பது மட்டும் தான் காதில் விழுந்தது.
அந்த கூட்டம் அலறத் தொடங்கியது. எனது இதயத்துடிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்க என்னை விட அவள் இன்னும் பரப்பரப்பாகவே இருந்தாள் நான் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டேன். அவள் அமரவில்லை. நடந்து கொண்டேயிருந்தாள். மீண்டும் அவளது கைப்பேசி அழைத்தது. அவளெடுத்து டாக்டர் வெளிவரவில்லை வந்தாள் தெரியும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு மொபைலை என்னிடம் தந்து உங்கள் மகன் தான் எனச்சொல்ல வேண்டாம் பிறகு பேசிக்கொள்கிறேன் துண்டித்து விடு என்று சொல்லிவிட்டேன். அவள் துண்டிக்காமல் கடந்து சென்று ஒரு நிமிடம் பேசிக்கொண்டிருந்தாள், பேசுவது காதில் கேட்கவில்லை. எனக்கும் அதில் ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை. மெதுவாக என்னருகில் வந்து நின்ற போது அறைக்கதவு திறக்கும் சத்தம்.
என் மனைவியைப் பரிசோதித்த மருத்துவர் மெல்ல தலைப்பட என் இதயம் துடிப்பது எனக்கு வெளியே கேட்கப்போகிறோதோ என்ற எண்ணத்துடன் நோக்கிக் கொண்டிருந்தேன். அவர் நடந்து வருவது மெதுவாக இருப்பதுப் போலத் தோன்ற என்னுள் எழுந்த கோபம் சொல்ல முடியாததாய் இருந்தது. இத்தனை அக்கறை இல்லாதவர் போலத் தோன்றுகிறாரே என்ற நினைக்கும் போது அவள் வேகமாக நடக்கத்தொடங்கியிருந்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன ஆகிவிட்டது என்ற போது மருத்துவர் கடந்து போய்க் கொண்டிருந்தார்.
நானும் தடுமாறி எழுந்துவிட்டேன் அவளை நோக்கி நடக்க அவள் கண்களில் நீர்த் துளி வழிய ஆபத்தில்லை , நல்ல நேரத்தில் கொண்டுவந்தீர்கள் அதனால் அபாயமில்லை என்ற போது எனது இருக் கைகளும் அறியாமல் கைக்கூப்பத்தொடங்க ஆம்புலன்ஸ் சத்தம் கடந்து போயிருந்தது.
வாகனங்கள் குறைவதாகத் தோன்றவில்லை கடக்க முடியவில்லை. பின்னாலிருந்து ஒரு கை என் கையைப் பிடிக்க நான் திரும்பிப் பார்க்கிறேன். சிரித்துக் கொண்டே அப்பா என்ன சாலை கடக்க முடியவில்லையா எனக் கேட்க நானும் வெகு நேரமாக நிற்கிறேன், இன்று என்னவோ சாலை அதிக களேபரமாக இருக்கிறதே என்ற போது நூலக நண்பன் சொன்ன விசயத்தையே சொல்லத் தொடங்க என்ன அம்மாவுக்கு உணவுப் பொட்டலமா ? என்று கைப்பிடித்த போது புதிய தெம்பு வந்து இளைஞனாய் என்னை உணரத்தொடங்கினேன். மெதுவாய் என்பின்னால் எல்லா வாகனங்களும் சென்று கொண்டிருக்க லாவகமாய் என்னைக் கடத்தி விட்டிருந்தான் அந்தப் பையன். அவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அவன என் மகனோடு படித்தவன் வீட்டிற்கு அடுத்த தெருவிலிருக்கிறான். படிப்பைப் பாதியில் நிறுத்தி அப்பாவின் ஒர்க்சாப்பை நடத்திக் கொண்டிருக்கிறான். மெல்ல வீடு வரை வந்து விடட்டுமா எனக் கேட்க வேண்டாம் எனச் சொல்லி உதவியதற்கு நன்றி சொன்ன போது அவன் சிரித்துக் கொண்டே உங்கள் பிள்ளை அடுத்த வாரம் வருகிறான் போல எனக் கேட்டப் போது ஆமா என்று சொல்லிய போது என் மனதில் சலனமில்லை.
ஆறுமாதம் கடந்திருந்தது. அவள் தேறி விட்டாள் உதவிக்காய் ஒரு ஆளை வைத்திருப்பதால் இப்போது சிறிது பயமில்லை. உணவு சமைக்கவும் அவள் ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தாள். ஆனால் என்னவோ அவளின் பக்குவம் அவளுக்கும் எனக்கும் சேரவில்லை அதனால் நானே சமைத்துக் கொண்டிருந்தேன். என் பிள்ளை வருவான் என எதிர்பார்த்த போது வேலைப்பளு முடியவில்லை. கூடிய சீக்கிரம் வந்து விடுகிறேன் என்ற பதில் வந்தது. இரண்டு நாளைக்கொரு தடவை போன் செய்வான், எனக்கோ அவனிடம் பேசுவதில் ஆர்வமில்லை அவள் பேசிக்கொண்டிருப்பாள். நானும் எதிர்ப்பதில்லை.
மெல்ல வீடு வந்து சேர்ந்த போது அவள் படுக்கையிலிருந்தே பதறிக் கொண்டிருந்தாள். என்ன குடை மறந்தாச்சா எனக் கேட்க  நானும் பதிலுக்கு ம் மட்டும் சொல்லி மெதுவாக சமையலைறையில் நுழைந்து அந்த தோசையை எடுத்து தட்டில் வைத்தேன் ஆறிவிட்டிருந்தது. சிறிது கஷ்டமும் கோபமுமாக மழையை சபித்து மெல்ல நடந்து அவள் கையில் கொடுத்தேன். மெதுவாய் உண்ணத்தொடங்கிய போது உணவு விடுதியில் பையன் நல்லா இருக்கிறானா என்று கேட்டுக் கொண்டே தோசை நல்லாயிருக்கு என்ற போது மனம் லேசாகத் தொடங்கியது. நாளைப்பையன் வருகிறானே. நான் சொல்லியிருக்கேன் இங்கேயே வந்து விட என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நான் கேட்டுக்கொள்ளமால் மெல்ல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாய் உணவை முடிக்க கதவு தட்டப்படும் சத்தம். அவள் வந்திருப்பாள் போய் கதவைத் திறந்து விடுங்க எனச் சொல்ல மெதுவாய் அவள் கையிலிருந்த தட்டை வாங்கி சமையலறைத் தொட்டியில் வைத்து விட்டு கதவைத் திறந்தேன்.
கதவைத் திறந்தவுடன் கொஞ்சம் பதட்டமாகவே மன்னிக்கவும் மழை வந்ததால் நேரமாகி விட்டது என்று சொல்ல பரவாயில்லமா பையன் நல்லாப்படிக்கிறானா என்று கேட்டுக் கொண்டே வழி விட அவளிடம் நல்லாப் படிக்கிறான் ஏதோ கம்பெனிலா ஆளு எடுத்திருக்காங்களாம் அடுத்த வருடம் முடித்தவுடன் வேலையாம் என்று சொல்லிக் கொண்டே மனைவியின் அறையினுள் நுழைந்தாள். காதில் மாத்திரை சாப்பிட்டாச்சா என்ற சப்தம் கேட்க நானும் இன்றைய நாளிதழின் கடைசி பக்கத்தை படிக்கத் தொடங்கியிருந்தேன். கொஞ்சம் நேரத்தில் அவர்கள் அறையில் விளக்கு அணைக்கப்பட்டது. நானும் மெல்ல எழுந்து எனதறைக்கு சென்று படுத்துக் கொண்டேன்.
அதிகாலை காலிங்பெல் சத்தம் உறக்கத்தைக் கலைத்திருந்தது. மெதுவாக எழுந்து கதவைத் திறக்க பையனும் மருமகளும் தோளில் பேரக்குழந்தை உறங்கியிருந்தான். யாத்திரை சுகமாயிருந்ததா என்று கேட்க அவனும் ம் என்று சொல்லி கொண்டே உள்நுழைய நானும் இந்த பக்கத்து அறை சுத்தப் படுத்தி வைத்திருக்கேன் என்று சொல்லி அவர்களுக்கு அறையைத் திறந்து விட்டு ஓய்வெடுக்கவும் காலையில் பேசிக்கொள்ளலாம் எனச் சொல்லி விட்டு என் அறையில் நுழைந்து படுத்தேன். நினைவுகளில் ஏதேதோ எண்ணங்கள். உறக்கம் என்னைப் பீடிக்கதொடங்கியிருந்தது.
காலை விடிந்திருந்தது. குருவிகள் சப்தம் அருகில் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டினுள் குழந்தை அடம்பிடிக்கும் சப்தம். குளித்திருந்தேன், வெளியிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்த போது தாத்தா என ஓடி கொண்டு வந்தது எனது மனைவியின் தோழியுடைய குழந்தை. அவளைப்பிடித்து அடம் பிடிக்கக்கூடாது அம்மா சொல்லறதைக் கேட்கவும் எனச் சொல்லி நானும் கொஞ்சம் வெளியே நடந்திட்டு வரேம்மா என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினேன். மைதானத்தை கடந்து போன போது தெருவோரத்தில் நாய் குரைத்துக்கொண்டிருந்தது. அதைத் தாண்டி கடந்த போது மயானத்தில் புகை அடங்கியிருந்தது. மூன்று பேர் நின்று சாம்பலை சட்டியில் நிரப்பியதைக் கண்டவுடன் மனைவியின் நினைவில் கண்கள் குளமாக மேலே ஒரு விமானம் பறந்துக் கொண்டிருந்தது.......



No comments:

Post a Comment