Monday 7 March 2016

தமிழக தேர்தல் களம் ....

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இன்னும் முறையான கூட்டணிகள் அமையாமல் அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளே குழப்பிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பாமரன் இங்கு குழம்பி போயிருக்கும் இந்த சூழ்நிலையில் கட்சி கூட்டணிகளுக்கான குழப்பங்கள் மிகப் பெரிய மாயப்பிம்பத்தை கொண்டே இருக்கின்றன.
இப்போது செயல்படும் அரசு செயல்படாமலேயே தங்கள் சாதனைகளை அள்ளி வீசி இருக்கிறது, அவர்களின் சாதனைகளுக்கு அரசுப் போக்குவரத்தின் பராமரிப்பையும், சாலைகளின் பராமரிப்பையும் வைத்தே  உடனே சொல்லி விடலாம். இதற்கு முந்தைய இருந்த அரசோ தான் செய்த அத்துணை தவறுகளையும் மறந்து தாங்களும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் களம் புகுந்திருக்கிறது, உண்மையைச் சொல்லப்போனால் இந்த இருப் பெரும் திராவிடக் கட்சிகளின் நிலைமையும் இன்று பரிதாபத்துக்குரியதாகவே எண்ணத்தோனுகிறது.
திராவிடக்கட்சிகளின் வீழ்ச்சியின் தொடக்கம் குறிக்கப்படுகிறதா என்ற உறுதிப்பாட்டை நாம் முன் வைக்க முடியுமா என்று சொன்னால் தமிழக மக்களை வைத்து நாம் எதையும் கணித்திட முடியாது. அதே நேரத்தில் கூட்டணிகளின் அமைப்பைப் பொறுத்து ஆளும் கட்சிக்கான சாதக பாதக அம்சங்கள் அமையும் என்றே கருதுகிறேன்.
இந்த தேர்தல் ஊழலாலும் ,வாரிசு அரசியலாலும் பாதிக்கப்பட்டு பொலிவிழந்த கட்டுமரக்கட்சிக்கான பயங்கரமான போட்டிக் களமாகவே இருக்கும் அவ்வளவு எளிதாக அவர்களின் பிரச்சினைகளை மறக்கவியலாத நிலையில் அவர்கள் தங்களுக்கான இடத்திற்காக கடுமையாக போராட வேண்டிவரும்.
அதே நேரத்தில் நால்வர் கூட்டணி தங்கள் திட்டங்களைத் தொடங்கி மிக வேகமாக களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டத்திற்கும் இன்று கூட்டம் சேருகிறது. ஆனால் இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதும் சந்தேகமே. காரணம் அவர்களின் கூட்டணி மேலோட்டமே சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. இவர்கள் கூட்டணி தேர்தலுக்குப் பின் ஒன்றாக செயல்பட முடியுமா என்பதும் கேள்விக் குறியே. காரணம் கொள்கை அளவில் பல முரண்பாடுகளைக் கொண்ட இந்த அணிகள் தேர்தலுக்குப் பின் தன் கூட்டணிகளை மாற்றாமல் இருப்பார்களா என்பதே காலத்தின் பின்னோக்கிய கூட்டணி மாற்றக் கதைகளாய் நம்மிடம் இருக்கிறது,
கடந்த இரு தேர்தல்களிலும் ஒன்றில் தனித்தும் மற்றொன்றில் கூட்டணியுடனும் களம் கண்டு தனக்கென்று ஒரு தனியிடத்தை தக்க வைத்த மற்றுமொரு திராவிட பெயரை கொண்ட கட்சியில் இன்றைய சூழலில் தலைவரின்(கேப்டனின்) பேச்சால் இன்றைய ஓட்டு சதவீதம் எப்படி இருக்கும் எனக் கணித்தால் குறைவானதாக இருக்குமா அல்லது கூடுதலா அல்லது முந்தைய தேர்தலைப் போல தனது இடங்களை தக்க வைக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே, ஆனாலும் அந்த கட்சியை அவ்வளவு எளிதாக இந்த களத்திலிருந்து மாற்றி நிறுத்த முடியாது என்பதை சிலக் கட்சிகள் அவர்களிடம் காட்டும் கரிசனமே இதற்கு கட்டியம் சொல்லும். இவர்களின் கூட்டணியாகவோ அல்லது தனித்தோ நிற்கும் நேரத்தில் ஏற்படும் சாதக பாதக அம்சங்களை ஆளப்போகிற அல்லது எதிராக அமரப்போகிற கட்சிகளில் பிரதிபலிக்கலாம். தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் இன்னும் திடமான முடிவு எடுக்காமலிருப்பது அந்த கட்சியின் தடுமாற்றத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி ஏதோ ஒரு ஆட்சியில் கூட்டணி அமைத்து ஆட்சி பீடத்தில் ஒட்டி கொண்டிருந்த பாட்டாளிகளின் பெயரைக் கொண்ட கட்சி கடந்த முறை தவறான கூட்டணியில் இடம் பிடித்து தன் பலத்தை முழுவதுமாக இழந்த நிலையில் இந்த முறை தனியாக களம் காணுகிறது. இதன் பலம் இன்று அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே. ஆனால் அந்த பலத்தை மிகப்பெரிய சாதீய பிம்பத்தால் மறைத்துக் கொண்டிருப்பது பலவீனமே. எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு தார்மீகக் கொள்கை இருக்கும் பட்சத்தில் அந்த கொள்கைகளை பெயரளவில் கொண்டால் அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாய் தேசிய அளவில் இப்போது ஆளும் கட்சியின் மாநிலக் நிலையின் பலம் என்பது மிகவும் பரிதாப நிலையிலேயே உள்ளது. காரணம் அவர்களின் தலைமையும் தவறான கொள்கைகளும். தலைமைளின் தவறான பேச்சுக்களும், ஆட்சி பீடத்தில் \நடந்தேறிக் கொண்டிருக்கும் ஒவ்வாத சூழல்களும் தான். இவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் கேள்வியில் வைத்துக் கொண்டாலும் ஆளும் கட்சியில் கூட்டணி அமைப்பதற்கான சூழல்களும் காணப்படுகிறது, அதற்கு ஆளும் தலைமையில் இருக்கும் தலைவருக்கு சட்ட சிக்கலுக்காய் அமையலாம்.
அதைத் தவிர அல்லறை சில்லறைக் கட்சிகளெல்லாம் தனியே நிற்பதென்பது அவர்களின் அதீத நம்பிக்கையை மட்டுமே பிரதிபலிக்கும் மேலும் அவர்களின் டெபாசிட் தொகை தேர்தல் ஆணையத்திற்கு நிதியாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
மேலும் இன்று தமிழகத்தின் தேர்தல் களம் இன்று யாருக்குமே அருதிப்பெரும்பான்மையைக் கொடுக்காத களமாகவே காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகள் நம்மைப் போன்ற தமிழக மக்களுக்கு ஒரு போதாத காலமே. நல்லத் தலைமையைப் பார்க்க முடியாத இடத்தில் எந்த தலைமையை நம்பி ஓட்டுப் போடுவது நோட்டாவிற்கா ?
நோட்டாவை பொறுத்தமட்டில் அது அதிகாரமில்லா ஒரு சின்னமே அது சினம் கொண்டு அரசியல்வாதிகளை தாக்குமளவிற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை,அப்படி வழங்கப்படும் பட்சத்திலும் அதன் அதிகாரத்தின் மூலம் நோட்டா அதிக வாக்குகள் பெரும் சூழ்நிலையிலும் அங்கு போட்டியிட்ட அத்துனை வாக்காளர்களும் தகுதியிழப்பு செய்யப்படுவார்களானால் கட்டாயம் இந்த தேர்தல் கள்த்தில் பல அரசியல் வியாதிகள் காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளது, அதனை விடுத்த இன்றைய நோட்டா என்பது வாயை இறுக்கிக் கட்டிய பாம்பிற்கு இணையே. நாடு நலம் பெற வேண்டுமென்றால் நல்லத்தலைமையோடுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும் அப்படியான மக்களின் தலைவர்  யார் இன்று  தமிழகத்தில் என்ற ஐயத்தோடு .......





No comments:

Post a Comment