Friday 11 March 2016

பட்ட விரட்டி - காலித் ஹொசைனி தமிழில் எம்.யூசுப் ராஜா

இது ஒரு பக்குவப்படாத சுயசார்பு எண்ணம் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்வில் பிறப்பின் முதலே தன்னுடன் இருக்கும் ஒரு ஏழை நட்பில் ஏற்படுத்தும் துரோகத்திற்கும் அதை மறைத்து தப்பித்துக் கொள்ள நினைத்து அதன் மூலம் ஏற்படும் குற்றவுணர்வின் மேலெழுச்சியால் பிராயச்சித்தம் தேடவுமான போராட்டமே பட்டவிரட்டியின் முக்கிய கதைக்களம்.
2003 ல் "The kite Runner" என்ற பெயரில் வந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். நாவலின் ஆசிரியர் காலித் ஹொசைனி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆப்கானில் பிறந்து பின்னர் தந்தையின் பணி காரணமாக ஈரானிலும் பிரான்சிலும் வளர்ந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.  இந்த நூலை தமிழில் பட்ட விரட்டி எனும் பெயரில் எம்.யூசுப் ராஜா மொழிப் பெயர்த்துள்ளார். 2012 ல் எதிர் வெளியீட்டின் மூலம் முதல் பதிப்பாய் வெளிவந்துள்ளது. நாவலின் மொழிப் பெயர்ப்பை மிக அழகாய் செய்துள்ளார் என்றே நம்புகிறேன் காரணம் வாசிப்பின் போது எந்த இடத்திலும் மொழிப் பிரச்சினையின் குறுக்கீடில்லாமல் மனதின் அடி ஆழத்தில் சலனத்தைக் கொடுத்து நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது.
நாவலின் களம் ஆப்கானிலும் , அமெரிக்காவிலும் , சிறிதளவு பாகிஸ்தானிலுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது இருவருக்குமான நட்பையும், தந்தை மகனின் உறவையும், ஆப்கானின் அரசியல் மாற்றத்தையும் வலைப்பின்னலாகக் கொண்டு நகருகிறது. நாவலின் தொடக்கத்தில் அமீர், ஹசன், அமீரின் அப்பா, ரஹீம் கான், அலி, சனேபருடன் ஆப்கானின் வாசிம் அக்பர் கான் பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாவலின் வரும் அமீர் கதைச் சொல்லியாக கதை முழுதையையும் சொல்லி முடிக்கிறார்.
உலகிலேயே மிகவும் விசமான ஆயுதம் பொறாமையே அது எல்லோரிடத்திலும் புதையுண்டு உறங்கி கொண்டிருக்கும். அதை தட்டி எழுப்புவது. ஆழ்ந்த தூக்கத்தில் விட்டுவிடுவதும் மனிதனின் பக்குவமும் பகுத்தறிவதுமே. அது இல்லாது போகும் பட்சத்திலும் மனம் பிறழ்ந்து சூழலில் வளரத்தொடங்கினால் ஏற்படும் விளைவுகள் கடலலைப் போல ஓயாமல் மனதை ஆட்டி படைப்பதும் ஒரு நேரத்தில் எரிமலைப் போல வெடித்து சிதறி ஒட்டுமொத்த சூழ்நிலைகளேயே சிதைத்து விடுகிறது.
சிதைக்கப்பட்ட குடும்பமாகவே கதையில் அலியின் குடும்பம் வலம் வருகிறது. அதன் முதல் பலியாடாக அலியும் அதன் பின் ஹசனும் , அவனது மனைவியும் கடைசியாக ஹசனின் மகன் ஷொஹ்ராப்பும் அடையாளம். அதற்கு காரணம் அவர்கள் பிறந்த ஹசாரா இனச்சூழலே. ஆப்கானின் ஆளும் வர்க்கமாகவும் , உயர்ந்த குடும்பத்தினருமாக பஸ்டூன் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். இந்த பஸ்டூன் இனத்தவர்கள் ஹசரா இனத்தவர்களை ஆளுமை செய்யும் போது மனித எண்ணத்தின் ஓட்டத்தில கற்பனைக்கெட்டாத விதத்தில் தலிபான்களால் இன்னலுக்குள்ளாக்கப்படுகின்றனர். ஒட்டு மொத்த ஹசாராக்களையும் அவர்கள் குவியல் குவியலாக கொன்று குவிப்பதாக சொல்லுகிறார்.
ஆளுமை இனமான பஸ்டூன் இனவெறியனிலிருந்து ஹசரா இனத்தைப்பற்றி
“ நீ ஒரு அசிங்கமான வளர்ப்புப் பிராணி போலத்தான், முதலாளி சலிப்படையும் போது விளையாடவும் . கோபமாக இருக்கையில் உதைக்கவுமான பிராணிதான் நீ . அதைவிட மேலாக எண்ணி உன்னை நீ ஏமாற்றி கொள்ளாதே”
ஆப்கான் வீதிகள் இரத்தக் குவியலுக்குள் குளிப்பதற்கு முதற்புள்ளி ரஷ்யர்களாலே துவங்கி வைக்கப்படுகிறது. ஆப்கானின் முடியாட்சி வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கம்யூனிச அரசும் அதன் பின் ரஷ்யப்படை உள்நுழைவும் பின்னர் ரஷ்ய கைப்பாவை அரசை எதிர்ந்த முஜாகிதீன்களும் என ஆப்கானின் களம் போர்க்களத்திலேயே சிக்கித் தவிக்கிறது.
ரஷ்யர்களை உணர்வு ரீதியாக எதிர்த்ததும் ,தலிபான்கள் ஆட்சி அமைக்கும் போது அதை வீதிகளில் ஆப்கான் மக்கள் கொண்டாடியதும் நினைவாக ஆகும் முன்னரே அவர்களின் மதரீதியான அடக்குமுறை துவங்கியது. மேலும் ஆப்கானில் போரினால் தந்தைமார்களை கிட்டாத ஒரு அபூர்வ பொருளாக்கி இருந்தது எனும் போது நிராதரவாய் விடப்பட்ட அந்நகரத்தின் நிலை வெளிப்படுகிறது,
தலிபான்கள் ஆட்சியில் தகப்பன் இல்லாத பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் பிச்சையெடுக்க வைக்கப்படுவார்கள் எனவும் , உணவுகள் கிடைக்காமல் அனாதை விடுதிகளில் கிடத்தப்படுவார்கள் என்றும், நல்லொழுக்க அமைச்சக சட்டத்தின் மூலம் பெண்கள் உரக்கப் பேசக்கூடாதென்ற சட்டம் அமல்படுத்தப்படுமென்றும், கசல் பாடகர்கள் கொல்லப்படுவார்கள் என்றும், ஹசாரா இனம் வேறறுக்கப்படுமென்றும், விளையாட்டை சத்தமிடமால் பார்க்கவேண்டும் என்றும், அறிந்திருக்கவில்லை. ஏனோ ஆசிரியர் அவர்களுக்குதவிய அமெரிக்காவைப்பற்றிய தகவல்களை தரவில்லை என்பது கொஞ்சம் முரணே.
நாவலை ஆசிரியர் போர்களத்தின் வன்மையால் மட்டும் நிரப்பவில்லை , அதில் தந்தையும் மகனிற்குமான உறவில் நடக்கும் சம்பவங்களை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளார். பிறந்த பிறகு வேலையாளின் குழந்தையான ஹசன் தனது முதல் சொல்லாக அவனது பால்ய கால நண்பனாக அறிமுகமானும் அமீரின் பெயரையே உச்சரிக்கிறான் எனச் சொல்லி நட்பின் ஆழத்தை அதன் மூலம் நமது ஆழ்மனதில் பதியப் போடும் அதே நேரம் அறியாமையால் கதை சொல்லியான அமீர் அவன் நட்பைப் தவறாக பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஓட்டத்தில் எப்படி எரிமலையாய் வெடிக்கிறது என்பதைக் காணலம்.
ஆப்கான் நகர வீதிகளும், காலச்சூழ்நிலையில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும் அழகாய் வருணிக்கிறார் ஆசிரியர். நாவலின் பெயரான பட்டவிரட்டிக்கான கதைக்களம் அருமை. பட்டவிரட்டியில் ஹசனின் சாமர்த்தியத்தை விளக்கும் நேரத்தில் கதை பட்டம் பறக்கவிடும் விழாவிற்கு பிறகு முற்றிலுமான வேறொரு தளத்திற்கு மாற்றப்படும்போது நம் மனதில் அடி ஆழத்தை அசைத்து நமது கண்ணில் நீர் வருமா எனப் பரீட்
சித்துப் பார்த்து விடுகிறார் கதைச் சொல்லி.
களம் ஆப்கானை விட்டு பாகிஸ்தானுக்கும் அதன் பின் அமெரிக்காவிற்கும் நகருகிறது. சொத்துக்களை விட்டு அகதிகளாய் போகும் அமீரும் தந்தையும் நாட்டிலிருந்து தப்பும் போதைய சம்பவங்கள் மெய்சிலிர்க்கவும் மனதை நெருடவும் செய்கிறார். அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் அமீரின் வாழ்வும் அழகிய காதலுமாய் நகர்ந்து ஒரு கதை ஆசிரியனாய் பரிமளிக்கத் தொடங்கும் நேரத்தில் தந்தையின் நண்பன் மூலம் தொலைபேசி செய்தி வருகிறது.
கதை சொல்லியான அமீர் ரஹீம்கானை சந்திக்கிறார். அவர் சொல்லும் ரகசியம் அமீரின் வாழ்வில் ஒட்டு மொத்த எண்ண ஓட்டங்களையும் சிதைக்கிறது. அவரின் அறிவுறுத்தலின் படி ஹசனின் மகனான ஷொஹ்ராப்பை தேடி ஆப்கானிற்குள் நுழையும் அமீர் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களுடன் கதை நகர்ந்து சென்று முடிகிறது.

நூல் : பட்டவிரட்டி
ஆசிரியர் : காலித் ஹுசைனி
தமிழில் : எம்.யூசுப் ராஜா
வெளியீடு : எதிர் வெளியீடு





No comments:

Post a Comment