Friday 6 May 2016

நூல் விமர்சனம் : பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்

  தனி மனித வாழ்வில் இளைஞனாய் உருவெடுத்து அந்தம் வரை தொடரும் திருமணபந்தம், குழந்தைகளோடான உறவு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் என அனைத்து சாராம்சங்களையும் எதார்த்தமான விவரணையோடு சொல்லுவதே பள்ளிகொண்டபுரம் கதையின் உட்கரு..
கதைக் களம் திருவனந்தபுரத்தின் பெயரை தாங்கி நிற்கவில்லையென்றாலும் திருவனந்தப்புர பத்மநாபக் கோவிலையையும் அதனைச் சுற்றியுமே. கதையின் காலக்கட்டம் கடந்த  நூற்றாண்டின் எழுபதுகளில் தொடங்கியும் அதற்கு முன்னே உள்ள மூன்று தலைமுறைகளைப் பற்றி நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் சிந்திப்பதே. கதையின் ஆசிரியர் நீல.பத்மநாபன். முதல் பதிப்பு 1970 ளில் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு தற்போது காலச்சுவடில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் , தேரோடும் வீதி , பைல்கள், உறவுகள் எனத் தொடர்ந்து இன்னும் பல. இலையுதிர் காலம் எனும் புதினத்திற்காய் 2007 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுள்ளார்.
கதையின் ஆசிரியர் எழுத்து நடையின் மூலம் ஒவ்வொரு இடத்தின் சூழ்நிலைகளையும், நிகழ்வுகளையும், காட்சிப்படுத்துவதில் மிளிர்கிறார். திருவனந்தப்புர பத்மநாபக் கோவிலின் விவரணைகளும் அதன் வரலாறும் அருமை. நடையின் மொழியில்  கேரள மொழியின் வாடை அதிகம் வீசியிருந்தாலும் மொழியைப்பற்றிய ஆர்வமிருந்தால் அதன் எழுத்து நடைப் பாதிப்புகளை கொடுப்பதில்லை.
கதையின் உள்ளமைப்பில் அனந்த நாயர் எனும் கதாப்பாத்திரத்தில் தொடங்கி அவரது குடும்பப் பின்னல்களிலேயே நகருகிறது, குடும்பத்தில் அவருக்கும் மனையாளுமான கார்த்தியாயினிக்குமான  உறவில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை பெண் பார்க்கும் படலத்திலேயே தொடர்ந்து பின் படிப்படியாக சந்தேகமென்ற நோயினிற்குட்கொண்டு நாயகனை ஆட்டிப்படைக்கும் ஆற்றாமையும் அதனுள் கொண்டு ஏற்படும் மோதல்களும் பின்விளைவாய் பிரிவும் பின்னர் குற்றப்பொருத்தல்களும் என விரிந்து தன் குழந்தைகளோடான மகன் மகள் உறவில் ஏற்படுத்தும் வித்யாசங்களும் மகன் தகப்பன் மீது காட்டும் அபரிமிதமான வெறுப்புச்சூழலாய் நகர்ந்தொடுங்குகிறது.
கதையின் மாந்தர்கள் ஒருவரையொருவர் குற்றம் காணும் பட்சத்தில் தனக்குள்ளான குற்றங்களை மறந்து விடுவதை கதையினூடே காணலாம்.
அத்தியாவசியத் தேவைக்கே சிரமப்படும் காலக்கட்டத்தில் தனக்கு மேல் மட்டத்திலும் அதிகாரவர்க்கத்திலும் உள்ளவரின் சூழ்ச்சியை எதிர்கொள்ள் இயலாமால் தனதாற்றாமையை பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கும் தாழ்வு மனப்பான்மைக்கு எண்ணையூற்றி தன் குடும்பத்தை தானே அறியாமல் எரியூட்டுகிறார். அதே நேரம் மனையாளின் மனோநிலையில் அவருக்கு  ஏற்படும் மாறுபாடு பந்தத்தை முறிக்கச் செய்து பெண்ணை சுயநலப்படுத்த பிரயத்தனம் செய்கிறார் கதையின் முக்கிய மாந்தரான அனந்தன் நாயர்.
அதே நேரத்தில் அனந்த  நாயரின் கோபம், அடி , காசநோய் எனக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் மனையாளுக்கு அவரை விட்டு பிரிந்து வேறொருவருடன் பந்தத்தை நீடிக்கச் செய்வதற்கான காரணம் பொருளாதாரச் சூழல் மட்டுமா என்ற எனக்குள்ள கேள்வியோடு நகர்கிறது.
உறவில் பிரிவும் அதன்பின் நடைபெறும் அசௌகரியச் சுழலும் கார்த்தியாயினியைப் பழைய வாழ்விற்கு திரும்பச் சொல்லும் நேரத்தில் கணவனின் ஆலோசனைப் படி வாழ்வை முன்னோக்கி நகர்த்தும் நேரத்தில் அனந்தநாயருக்கும் கார்த்தியாயினிக்கும் பிறந்த மகனான பிரபாகரன் நாயரிடத்தில் தாங்கள் இருவருக்குமான உறவின் முறிவின் காரணத்தை தனக்குரிய விதமாய் சொல்லி தகப்பனுக்கும் மகனுக்குமான உறவைச் சீர்குலைப்பதும் கதையின் பிழையா தெரியவில்லை.
மேலும் பிரபாகரன் நாயர் ஒட்டு மொத்தமாய் தகப்பனைக் குற்றப்படுத்தி வீழ்த்துவதும் வாழ்வைப் கேலிப் பொருளாக்கி பொருளாதார வளத்தை மையப்படுத்தி உறவுகளின் ஒழுக்கத்தை பிழைக்குள்ளாக்குவது சமகாலச் சுழலொடுப் பொருத்தப்பட்டு போகிறது.
கதை அக்காலத்தில் சாதீயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதனால் சமூகங்களுக்குள் ஏற்படும் ஆற்றாமையும் , ஒடுங்கள்களையும் , கலப்பின் வழித் தோன்றல்களையும் அதனால் ஏற்படும் சந்ததிகளின் உறவுமுறைச் சிக்கல்களையும் அதனை எதிர்கொள்ளும் மனப்போக்கும் அதற்கு ஒடுங்க பொருளாதாரச் சூழலையும், அரசியலில் கலப்பினத் திருமணங்களுக்காய் உண்டாகும் எழுச்சியுமாய் பொருத்தியிருப்பது பிரமிப்பில்.
உறவுக்குள்ளான சுயநலப்பந்தங்களால் பரஸ்பரம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் இருவருமே சமகாலத்தில் நோக்கும் சமயம் சுயநலக் குற்றவாளிகளே.
இல்லற பந்தம் என்பது நூல் பந்தமா ? புலனிச்சை போக்கியா ? சமூக பாதுகாப்பிற்காகவா ? சந்ததி உருவாக்கலா ? என்ற கேள்விகளை விட பரஸ்பரம் புரிந்து அன்பு செலுத்தி இக்கட்டான சூழ்நிலைகளில் தோள் கொடுத்து வாழும் சுயநலமில்லா வாழ்க்கையே . இதைப் பள்ளிகொண்டபுரம் சொல்லுகிறதோ இல்லையோ இன்றைய காலக்கட்டம் இக்கதையோடு பொருந்தி சுயநலவாழ்க்கையை இல்லறப்பந்தத்தோடு பொருத்தி அதன் விளைவுகளையும் ஆற்றாமையும் சொல்லியிருப்பதன் மூலம் ஆசிரியரின் தொலைநோக்குச் சிந்தனை வெற்றிக் களத்தை தொட்டுவிடுகிறது.....