Wednesday 2 November 2016

நூல் விமர்சனம் : பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

முக்கால் நூற்றாண்டு கடந்தும் காந்தியத்தின் கோட்பாடுகளைப் பற்றி இன்றளவும் பேசிக் கொண்டிருப்பதே காந்தியத்தின் வெற்றி.
இன்றும் காந்தியமும் காந்தியும் அதன் வழி வந்தவர்களாலும் அதன் எதிர் வழி வந்தவர்களாலும் திட்டமிடப்பட்டே புதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோவொருவிடத்தில் அவரது கொள்கைகள் புதிய செடியாக முளை விட்டுக் கொண்டே இருக்கிறது.
நானும் அதன் எதிர் வழி வந்தவர்களின் அறியாமையில் சிக்கி அதிலே புதைந்துப் போன நேரத்தில் அவரைக் குறித்தான தேடல்கள் எனது பார்வையில் புதிய எண்ண அலைகளை ஊடாக பரவச் செய்து இன்னும் அவரைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் தேடுவதற்கான வழிகளை இப்புத்தகமும் தந்ததில் பெரு மகிழ்வே.
காந்திய வழிகளுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்வதில் பெரும் முயற்சியை எடுக்கும் நேரத்தில் இப்புத்தகங்கள் அதன் வழியைச் செம்மைப் படுத்தும் என்ற நம்பிக்கை மேலோங்கச் செய்கிறது.
நம்மில் பலருக்கும் உள்ள சந்தேகம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பெயரை மட்டும் முன்னே மொழியும் போது மற்றப் வழி போராட்டக்காரர்கள் அதனுள் ஈர்த்து மறைந்துப் போவதற்கு அவர் கடைப்பிடித்த நேர்மை தவறாத நல்லறமே என்பதில் எள்ளளவும் குறைவில்லை.
சமகாலத்தில் ஹிம்சை வழிப் போராட்டங்களால் இயக்கங்களும் அதன் பின்விளைவுகளால் பல லட்ச மக்களும் தன்னுள் கொன்று அதன் வழிப் போராட்டங்கள் நீர்த்து விடச் செய்திருப்பதையும் என்னூடாக காணும் நிலையில் அக்கால காந்தியப் போராட்டங்கள் சிந்திய ரத்தம் குறைவே.
இன்றைய நோக்கில் ஆயுதக் கலாச்சாரங்கள் வெறும் இரத்தத்தைக் குடிக்கும் போராட்டங்களாய் மட்டுமே மாறும் நேரத்தில் காந்தியக் கொள்கைகள் எதிரிகளுக்கும் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தன் வச நியாய தர்மங்களை முன்னிறுத்தி மக்களைக் கொன்று தன் புகழ் தேடாமல் தன்னுள் உள்ள ஜீவாதாரத்தால் எதிரிகளைக் கட்டுபடுத்தியது மாபெரும் அறப்புரட்சியே.
ஆயுதப் போராட்டங்கள் சில இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கலாம் ஆனால் அவைகள் கொடுத்த விலைகள் மக்களில் இரத்த ஆறுகளில் புதையுண்ட நிலங்களில் ஏற்படுத்தப் பட்ட பண்பட்ட ஆட்சிகளின் மாயத்தோற்றங்களே. அதுப் போன்ற போராட்டங்கள் இந்தியாவிலும் பிரதிபலிப்பை உண்டாக்கவும் அதனின் பொருட்டு அதில் உற்சாகம் பெற்று ஆயுதப் போரட்டத்தைக் கையிலெடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலக் கொலைகளோடு தன் இயக்கங்களில் கொள்கைகளை முன்னே வைத்தப் போதிலும் பல்வேறு கலாச்சார மக்களை ஒருங்கிணைப்பதில் அந்த இயக்கங்கள் தோல்வியைத் தழுவிய போது காந்தியின் கொள்கைகள் இனம் , மதம், மொழி வேறுபாடின்றி அனைத்துச் சார் மக்களையும் ஒரு வழி இணைத்து போராட வைத்ததே இந்தியச் சுதந்திர தாகத்தின் ஊற்று நீராய் பெருக்கெடுத்து இன்று நாம் அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
காந்தியக் கொள்கைகளையும் போராட்டங்களையும் அக்கால மக்கள் ஏற்றுக் கொண்டு அதன் வழிப் போராட்டங்கள் செய்த நேரத்தில் இக்கால மக்கள் எதிர் வழிப் போராட்டக்காரர்களை மட்டும் துதி பாடி போற்றி வழிபடுவதும் அதே நேரம் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் இயக்கத்தை முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றா அந்த மாமனிதருக்கு ”மஹாத்மா” என்றப் பட்ட தகுமா? என்ற பட்டிமன்றங்களை நடத்தி கொண்டிருப்பது இன்றைய சமூகத்தின் சோதனைக் காலமே.
என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைக்காய் போராடிய அத்துனை அஹிம்சை,ஹிம்சைப் போராளிகளையும் மதிக்கும் நேரம் அவரது தனித்தனியான கொள்கைகளை ஒன்றிணைத்து விவாதத்திற்குள்ளாக்கி ஒருவரை விட மற்றவர் பெரியவர் என்று சொல்லிய வரலாறு தேவையில்லை.
சமகாலம் காந்தியைப் போற்றாவிட்டாலும் அவரின் கொள்கைகளும் அவரின் எதிர்காலத்திட்டங்களும் இன்றைய வாழ்க்கைக்கு உதவும் என்ற கண்ணோட்டத்தில் நகர்ந்துக் கொண்டிருப்பதே அந்த மாபெரும் மனிதரின் வெற்றியாகக் கருதுகிறேன். அதற்கு  இன்றைய இளைஞர்களின் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ம.பொ.சி அவர்களின் “பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்” ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை..

ஆசிரியர் : ம.பொசி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்.