Tuesday 2 September 2014

பாரபட்சம்

நேற்று செவ்வாய்கிழமை
வாரச்சந்தை தினம்
சாலையோரம் முழுதும்
நடைபாதை வியாபாரிகள்
கடைவிரிக்க மக்கள் 
வெள்ளமும் ஈசல் போல
அடுக்கி வைக்கப்பட்ட
காய்களின் அழகும்
வியாபாரிகள் விற்பனைக்
கூவலும் வண்டிகளின்
சப்தமும் ஆர்பாரித்து
அல்லோகலப் பட
நாட்கள் நாலு முழுதும்
போக்குக் காட்டிய
மழை பெய்கிறேன் என்ற
தொனியில் பெய்யத் தொடங்க
விதைத்தவனுக்கு சந்தோசம்
கொடுக்கும் இம்மழை
அறுவடை செய்தப்
பொருளை விற்பவனுக்கு
என்ன சுகம் தரமுடியும்
என்ற இயற்கையின்
பாரபட்சத்தை எண்ணி
சங்கடத்தில்
மழையில் நனைந்துக்
கடக்கிறேன் எனக்குரிய
காய்கள் எனது வண்டியில்
பெட்டிக்குள் பத்திரமாக

இரயில் நிலையத்தில்...

இரயில் நிலையத்தில் 
காத்து கொண்டிருக்க
காலதாமத அறிவிப்பு,
எதிர்பாராத வேளை
என்னருகில் வந்தமர்ந்தவரிடம்
வயோதிகம் ஆளுமை கொண்டிருந்தது 
வீடு கைவிட்டிருந்தது
பழுப்பேறிய வெள்ளை உடையிலும்
பார்வையின் குறை பாழடைந்த
கண்ணாடி கூட்டிலும் தெரிய
கையில் பைப்பொதி
எங்கே செல்ல என்று
அறிந்திருக்கவில்லை
அந்த சமயம் புகைவண்டி
ஒன்று வந்து நிற்கிறது
தள்ளாடி எழுந்த அந்த
முதியவரின் நடை
நத்தை பிரயாணத்தை
ஒத்திருக்க
அதைப் பார்த்த இதயங்கள்
ஒருமுறையாவது படபடத்திருக்க
வேண்டும் இருந்தும்
உதவிக்கு யாருமில்லை
முதியவரும்
நடையை விடாத நிலையில்
ஒரு பெட்டியை கடந்த போது
வண்டி அவருக்காக காத்திருக்க
மனமில்லாமல் வேகத்தைக் கூட்ட
ஒரு நிமிடம் யோசித்த
அந்த முதியவர் மீண்டும்
அதே நடையில் வந்து
என்னருகில் அமர
பேச்சுக் கொடுக்க தயக்கம்
காட்டிய மனதை குற்றம்
கொண்ட வேளையில்
நண்பனின் அழைப்பால்
அவரை விட்டு அகன்றேன்
வந்து சேர்ந்த போது
அந்த இடத்தில் அந்த
முதியவரைக் காணவில்லை
புறப்படத் தயரான புகைவண்டியின்
அறிவிப்பு என் கவனத்தை திருப்ப
படபடப்போடு என் நினைவும்
இயலாமையும்....

விளக்கும் அணைந்து போனது..

கருத்தில்லாமல்
சிந்திக்காமல்
சிதறும் வார்த்தைகளை
அடுக்கி வைத்தான்
அந்த புதுக் கவிஞன்
சில இடங்களில் 
அடித்தலும் கிறுக்கல்களும் 
எழுதிய தாளில்
கவிதையின்
வளர்ச்சியும் கவர்ச்சியும்
குறைந்தது போல தோற்றம்
இடையிடையே விடுபட்ட சொற்கள்
இணைத்து வைத்திருக்கிறான்
எழுதியதை மாற்ற முடியாது போலும்
அடித்தலும் கிறுக்கலும் கவிதையின்
உள்ளமைப்போ
விளங்கவில்லை அதன் அமைப்பு
கவிஞனின் சிந்தனை சிதறுகிறது
உரிமையான அழைப்பு அது
வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன்
பசியின் கோரம் அவன் வயிற்றில் காண
பிடிச் சோறில்
பிடித்தவனாகி விட்டான் அந்த கவிஞன்
வீட்டினுள்ளே
தண்ணீர் பருகும் சப்தம் கேட்கிறது
வந்த கவிஞன் பேனாவை
மூடி வைத்து என்னையும்
கசக்கி தூற எறிந்து விட
விளக்கும் அணைந்து போனது..

குட்டி கவிதைகள்

வயிற்றில் 
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்.....



காதல்
துன்பம் 
ஏமாற்றம் 
எதிர்பார்ப்பு 
இழப்பு 
இவையே
நவீன கவிதை



எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று.....



எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்....



பல்லாயிர ஜீவன்களையும்
விழுங்கிய பூமி
எப்போதும் போல் அழகாகவே...



மதுவும் ஆசையும் 
உலகியல் வாழ்வில் 
ஒரே மாதிரியான போதையே ..




நண்பகலில் 
நான் மட்டும் 
என் நிழல்
காலடியில் 
சிரமப்பட்டு 
கொண்டிருக்கிறது ..



வாழ்வு முன்னோக்கி
மட்டுமே என் மாற்றத்திற்கு
நான் பொறுப்பல்ல ..



பிணத்தை 
உறிஞ்சி 
வளர்ந்த மரம் 
காற்றோ
இளந்தென்றலாய் ...



நீண்ட இரவு 
நீடித்த மழை
வீதிகளில் வெள்ளம்
குளிரில் சிறுவன் 
வழி மறந்த கண்களில் 
பசியின் துக்கம்
சிந்தனையில் 
பிறப்பின் ஐயம் 
சாலைகளில் வண்டிகள் 
உண்டாக்கும் அலையில் 
அவன் உடை
நனைந்து கொண்டிருக்கிறது ..



நின்ற நிலையில் 
மாடும் ஆண் கன்றுகளும் 
கடைசி பிரயாணத்தில் ..



சிரிக்க
மறந்த
கலைஞனின் 
கைவண்ணத்தில் 
சிலைகள் 
அழகாக 
சிரிக்கிறது ..



இளமையில்
உதித்த காமம்
நீர்த்துப்போகும் 
உதிரமாய் ..



கவிதையும் 
விதையே 
மனதில் 
விதைத்தால் 
வளரும் 
மரமாய் ...



நான் 
நேசித்த
முகம்
யோசித்த 
முகமாய் ..



கையில் 
பிச்சைப் பாத்திரத்துடன்
திருமண அரங்கினுள்
நானும் ஒரு
மனிதனாய்...



நிலவு தேய்வதுமில்லை
மறைவதுமில்லை
சூனியக்காரர்களாக
சூரியனும் பூமியும்...



புரிந்து விட்டேன்
வெறுத்து விட்டேன்
மறந்து விட்டேன்
எல்லாம் இன்று 
ஒரு நாள் மட்டும்
நான் குடிக்கவில்லை
இருந்தும் உளறுவது போல்...



மறந்து போன விசயங்கள்
மறுத்து போனவை அல்ல
வெறுத்து போனவை..



உதடுகள் சிரிக்க
உண்மை..



உயிர் பிரிந்தவனின் 
அடையாளம்
பிணமாய் மட்டும்..



மதுவின் மயக்கத்தில்
தடுமாறும் கிழவனுக்கு
மூன்றாவது கால் மட்டும்
என்ன செய்ய முடியும்..



புரிந்து கொள்ளமுடியாது
வரிகளில் புதைந்து போவது
கலைஞனின் உணர்வுகளே..




செண்டை மேளம் விண்ணை முட்ட
திருமண வரவேற்பில் பொடிபறக்க
மீந்தும் உணவுக்காக வெளியே 
மனித அடையாளம் மட்டும்
வைத்திருக்கும் மனிதர்கள் ...



தொடரும் ......