Monday 18 July 2016

நூல் விமர்சனம் : இடக்கை

நாவல் : இடக்கை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை
நாவலைப்பற்றி…….
கை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மனிதனின் இரு கைகளில் ஒன்று வலக்கையாகவும் , மற்றொன்று இடக்கையாகவும் அறியப்படுகிறது, பொதுவான விமர்சனமாய் மனித சமூகத்தில் வலக்கைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இடக்கைக்கும் எப்போதும் கிடைப்பதில்லை( இடக்கை பழக்கம் கொண்டவர்களைத் தவிர) இடக்கை எனும் போதே மனித மனதினுள் இழிவு என்ற எண்ணம் தானாகவே தோன்றுவது இயல்பாய் அமைந்த நேரத்தில் ”இடக்கை” என்ற தலைப்பைக் கொண்டே நாவலின் வரவு எனக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அதை வாங்கத்தூண்டியது.
இதற்கும் இந்நாவலுக்குமான என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வியோடே படிக்கத் தொடங்கிய போதே இதன் முக்கிய கருத்தாக்கத்தை நம்முள் ஆழமாய் பதித்துவிடுகிறது. இந்நாவல் இல்லாதவர்களின் வாழ்வையும், அவர்களின் இயலாமையையும் அதனால் ஏற்படும் இழிநிகழ்வுகளையும், நீதிகளின் மறுபக்கத்தையும் அதன் இயல்பானத் தோற்றத்தை ஒரு கானல் நீராக்கி எளிய மனிதனின் தாகத்தை போக்கும் சாதனமாய் இருப்பதையும் பற்றி விரிவாயும் அழுத்தமாயும் பேசுகிறது.
நாவலின் காலம் ஒளரங்கசீப்பின் அந்திமக் கால வரலாற்றுக்கதையை வேராய் பற்றி சமகால பிரச்சினைகளின் கதாபாத்திரங்களை அக்காலப் பாத்திரங்களின் புனைவகளாய் உட்புகுத்தி வேறுபாட்டைக் கொணராமல் ஒன்றரக்கலந்து நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்கிறது.
ஆசிரியரின் சிறப்பாக கதை ஒரு தளத்தில் தொடங்கி நேர்கோட்டில் சென்று முடியாமல் பல்வேறு கதாபாத்திரங்களை புகுத்திக் கதைக்குள் கதையாக விரிந்து அதன் பாதையில் பயனித்து முடிவில் நாவலின் முக்கியக் கதாபாத்திரத்தின் தொடக்கத்திற்கு முற்றுப்புள்ளியைக் குறீயீட்டால் உணர்த்தி முடித்து வைக்கிறார்.
எதனடிப்படையில் இது குறீயீடாக மாறுகிறது என்பது நாவலின் முக்கிய கதாபாத்திரமான தூமகேது சிறுபான்மை இனத்தில் பிறந்து ஒளரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குள் உட்படும் சிற்றரசனான பிஷாட மன்னன் ஆளும் சத்கர் மாநிலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ஆட்டுத்தோலைத் திருடினான் என்ற பொய்யான குற்றம் சாட்டப்பட்டு காலாச் சிறையில் தள்ளப்படுகிறான். இவனுடைய ஏழ்மையும், பிறந்த சாதியும், இவனுக்கெதிராக அத்துனை சாட்சியங்களையும் வரவேற்கிறது. இவனது சமூகம் இந்த அதிகார வரம்பின் அக்கிரமத்தை எதிர்க்க முடியாமல் அடங்கி ஒதுங்கி சிதறும் நிலையில் சமகால நீதி எப்படி உள்ளவனுக்கு ஒரு விதமாகவும்  இல்லாதவனுக்கு ஒரு விதமாகவும் கொடுக்கப்படுகிறது என்பதை புனைவோடு நகர்த்திச்செல்லுகிறார். சிறையினுள் அவனுக்கு பெரும்பான்மை சாதியினரால் ஏற்படும் சொல்ல முடியாத துயரத்தின் விளிம்பில் அதே உயர்நிலை சாதியன் ஒருவரின் உதவியால் தன்னை சிறையிலிருந்து விடுவித்து புதிய மனிதனாய் பரிணமிக்க உதவிகிறார். அதன் பிறகான அவனது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் சிரமமாக்க் காட்டியிருந்தாலும் சாதியினடிப்படையிலான துயரம் கொண்டதாய் இல்லாமல் நகர்ந்து அவனது குடும்பத்தை கால இயலாமல் ஒடுங்கும் நேரத்தில் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகான அரசியல் மாற்றங்களும், அவன் குடும்பத்தைத் தேடி உயிரை ஒடுக்கலாம் எனும் கட்டத்தில் அந்நகரில் நடக்கும் தர்கா ஊர்வலத்தில் கிடைக்கும் நீரும் உணவும், ஒளரங்கசீப்பின் குல்லாவும் , சாமந்திப் பூ மாலையுமாய் கதை முடிகிறது. தர்காவை நோக்கிய பயணம் அவனுக்கான புதிய ஆரம்பக் குறியீடாக இருக்கலாமோ என்ற எண்ணத்தை எனக்குள் தோன்ற வைக்கிறது.
நாவலில் மற்றுமொரு ஆழமான கதாபாத்திரமாய் வருவது ஒளரங்கசீப்பின் அந்தரங்க உதவியாளாய் பணிபுரியும் அஜ்யா எனும் கதாபாத்திரம். இவர் ஒரு அரவாணி. இவரின் ஆரம்பமும் அந்திமமும் துயரமிக்கதாய் இருப்பினும் இவருக்கான இடைப்பட்ட வாழ்க்கைக் காலம் பேரரசரின் கீழான பணி என்ற பெருமையையும், ஒளரங்கசீப்பின் உயிலில் அவருடைய பெயரும் உட்படுத்துமளவிற்கான நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய ஆளுமையாக வருகிறார்.
அரசரின் நிழலாய் இருந்த காரணமே அவளது அந்திமக்காலத்தை துயர்மிக்கதாய் மாற்ற காரணமாய் இருந்து விடுகிறது. கடைசிக்காலத்துயரத்தை வாசிக்கும் நேரம் நம்முள் மனம் கனம் கொள்வதை உணர முடிகிறது.
நாவலின் களம் பல்வேறுபட்ட தளங்களை தன்கையில் புனைவாக்கி சதுரங்க விளையாட்டை தொடர்கிறது. இது அரசியல், நீதி, சாதீயம், மொகலாயப் அரசின் வீழ்ச்சி, அதன் பின்னான காலனி ஆதிக்கம் என எல்லா நிலைகளையும் தொட்டிருப்பதும் தத்துவார்த்த அடிப்படையிலான கருத்தியல்களை கொண்ட நாவலாய் பரிமளிப்பதும் பெரும் பலத்தைக் கொடுக்கிறது.
நாவலின் பலத்தைப் பற்றி சொல்லும் நேரத்தில் எழுத்துப் பிழைகளால் உயிரோட்டமான கதாபாத்திரத்தின் பெயரை  இரண்டு இடங்களில் மாற்றியிருப்பதும், வரலாற்று நிகழ்வுகளின் சில வெளிப்படையான தவறுகளும், ஒரு குறிப்பிட்ட சாதீயின் பெயரை வெளிப்படுத்தி நாவலை சாதீயக் குறியீடுக்குள் கொண்டு வர நினைப்பதும் , இசைக்கலைஞர்களையே பிடிக்காத ஒளரங்கசீப் போருக்குப் போகும் போது தன்னுடன் இசைக்கலைஞர்களை கூட்டி செல்வதாய் சொல்வதும் முரண்
சமக்காலத்து எழுத்தாளர் என்பதால் சமகால சமூகப்பிரச்சினைகளை உட்புகுத்த நினைக்கும் நேரத்தில் இன்றைய சாதீயத்தின் கொடுமையை யார் செய்கிறார்கள் என்பதை மாற்றி பழங்கதையை உட்புகுத்தி இன்றைய நிலைமையை மறைப்பதாய் தோற்றம் கொள்ள வைக்கும் நேரத்தில் மண்புழுவின் கதை மூல இன்றைய நீதியை நேர்மையாக பகடி செய்திருப்பது போற்றுதலுக்குரியது.
நாவலின் மொழிநடையும் சிறிது விமர்சனத்திற்குட்படுவதாய் தோன்றுகிறது. காரணம் மொழிபெயர்ப்பு நாவல்களின் மொழிநடை சில இடங்களில் கொண்டிருப்பதாக  இருக்கிறது.

நாவலின் பலவீனத்தைத் தவிர்த்து நோக்கும் போது நாவலானது இன்றைய சமகால விவகாரங்களை வரலாற்றின் நிகழ்வில் புனைவுகளாய் புகுந்து நம்முள் இன்றைய காலத்தின் மாற்றத்தின் தேவைக்கான கருத்துக்களாய் ஆணியாய் உறைய வைக்க முயற்சிக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை…