Sunday 3 April 2016

நூல் விமர்சனம் : வால்காவிலிருந்து கங்கை வரை

நூல் : வால்காவிலிருந்து கங்கை வரை
ஆசிரியர் : ராஹுல் சங்கிருத்தியாயன்
பதிப்பகம் : தமிழ் புத்தகாலயம்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்குள்ளான மனிதவாழ்க்கையை சித்தரித்துக் காட்டும் ஒரு வரலாற்று ஆய்வு நூல். ஆய்வு நூலில் புனைவுகள் இருக்கலாமா என்பது தர்க்கத்திற்குரிய வாதமாக இருந்தாலும் அதன் கற்பனைகளை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் வாசகர்களின் மனநிலையைப் பொறுத்ததே. இந்நூல் ஒரு இடதுசாரியின் பார்வையிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது, நூலானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே 1944 ல் வெளிவந்துள்ளது. மொழியின் மூலம் இந்தியில் இருந்தாலும் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு பல பதிப்புகளையும் கண்டிருப்பதே இந்த நூலின் தனிச்சிறப்பெனலாம். தமிழில் 1949 ம் ஆண்டு கண, முத்தைய்யா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கால அறிவியல் வளர்ச்சியில் மூலம் மனித நாகரீகம் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அந்த சமயத்தில் ஆசிரியரின் பணி அளவிட முடியாததாகவே கருதுகிறேன், கற்கால மனித இனத்தின் தோற்றம் பற்றியும் , அவர்கள் எதனடிப்படையில் தங்கள் குழுக்களையும் வாழ்வியல் முறைகளையும் அமைத்துக் கொண்டார்கள் என்ற கற்பனையோடு கலந்த ஆய்வோடு நகரத்தொடங்கிறது.
மதம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதையும் அக்காலத்தில் எப்படி இயற்கை வழிபாட்டிலிருந்து உருவ வழிப்பாட்டிற்கான முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தேவர்கள் அசுரர்களும் உருவான கதைகளையும் சொல்லி நகரத்தியிருக்கிறார்.
இந்நாவல் ஒவ்வொரு காலக்கட்டத்திற்குமான கதாப்பாத்திரங்களை அதன் வழித்தோன்றலுக்குள்ளாகவே படைத்து மனிதனின் வேர்களை வகைப்படுத்தியுள்ளார்.
ஆரிய சமூகம் , அடிமை வம்சம்,  இந்தோ ஆரிய வரலாறு,  மொழிகளின் தோற்றம் என விரிந்துக் கொண்டே செல்லும்  நாவலின் பலமாய் கருதுவது அதன் வாழ்வியல் முறைகளை கதாபாத்திரத்தில் நிலை நிறுத்தி அதனூடாகவே செல்வதே.
அன்றைய கம்யூனிச எண்ணத்திற்கும் இன்றைய கம்யூனிச எண்ணத்திற்குமான பொருத்தப்பாடுகளை இதில் காண முடிகிறது, அதன் வழி இந்து மதம் எல்லா விதத்திலும் நிரகரிக்கப்படுகிறது, பவுத்தம் பாராட்டப்படுகிறது, இஸ்லாமை அரவணைத்தும் , கிருத்துவத்தை பற்றிய செய்திகள் அதிகம் இல்லாமலுமே  சார்புதன்மை அடையாளத்தோடிருப்பது இதன் பலவீனமாய் அமையலாம்.
என் புரிதலில் வரலாறு என்பதே மனித வேட்டையின் அவலமாக கருதும் நிலையில் இந்தியாவில் நடைப்பெற்ற மன்னராட்சிகளைப்பற்றியும் அதன் பின்னணிகளையும் எடுத்துக்காட்டும் வேளைகளில் இந்திய மனிதர்களின் நாகரீகத்தில் மொகலாயப் படையெடுப்புகளும், ஆங்கிலேயப் காலனி ஆதிக்கமும்  மூலமான பாதிப்புகள் தெளிவாக இல்லாத போதும் ஆங்கிலேயர்களின் கொள்ளைகளைப் பற்றிய புரிதல் விளக்கப்பட்டிருக்கிறது.
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சிப்பாய் கலகத்தையும் , காந்தியடிகளுக்குப் பின்னான சுதந்திர போராட்டத்தின் எழுச்சியையும் தொட்டு செல்வதோடு மட்டுமல்லாமல்  காந்தீயக் கொள்கையையும், அம்பேத்காரின் கொள்கைகளையும் எதிர்த்திருப்பதாய் இந்நூல் காட்டுகிறது. இந்த எதிர்ப்பு அன்றைய கம்யூனிசக் கட்சியின் நிலைப்பாடா  அல்லது தனிமனித(ஆசிரியரின்) எண்ணமா   என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மனிதக்குலத்தைப் பற்றிய தேடலுக்கான தொடக்க நிலை வாசகர்களுக்கும் இடது சாரீய சிந்தனையுள்ளவர்களுக்குமாக இந்த புத்தகம் ஆரம்பநிலைக்கான புரிதலைக் கொடுக்கலாம்.