Monday 8 August 2016

நூல் விமர்சனம் : முகிலினி

நாவல் : முகிலினி
ஆசிரியர் : இரா.முருகவேள்
பதிப்பகம் : பொன்னுலகம்

மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவென்பது தாய் குழந்தைக்குமான உறவைப் போலவே. அக்காலம் தொட்டே மனிதன் தன் வாழ்வுப்
பாதையை இயற்கையோடு இணைந்தே தகவமைத்து வாழக்கற்றுக்கொண்டான். இயற்கை மனிதனுக்கு கொடையாகவும் சில நேரங்களில் கொடுமையாகவும் இருந்திருக்கிறது. இயற்கையில் நிகழும் இந்த மாறுபாடு இயற்கை சமநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் இயற்கையின் உத்தியே.
காலப்போக்கில் மனிதன் தன் அதீத முயற்சியாலும் இயற்கையுடனான போராட்டத்தினாலும் அதனை தற்காலிகமாய் தன் வசப்படுத்தியுடன் அதனுடனான உறவில் சிறிது சிறிதாய் அந்நியப்பட்டு தனக்கென்ற சுயநலசார்பு வாழ்வில் அதன் சமநிலையை குலைத்து ஏற்படுத்திய நாகரீக மாற்றங்களும் தொழிற்புரட்சிகளும் மக்களின் வாழ்வை மேம்படுத்தியிருந்தாலும் அந்த முன்னேற்றப் பாதையில் நாம் மறந்து போனது இயற்கையோடான நமது இணக்கமான பந்தத்தைப் பற்றியே.
இந்த நாவலும் இதைப்பற்றிய களத்தையே கருவாய் கொண்டே எழுதப்பட்டுள்ளது. நாவலின் மொழிநடை வேகத்தையும் தடையும் கொடுக்கமால் நகருவதை ஆசிரியர் தன் எழுத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
காலக்கட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாவனி சாகர் அணையின் நிர்மாணத்தில் தொடங்கி அறுபதாண்டுகாலம் பயணித்து சமகாலத்தில் முடிவடைகிறது, நாவலின் களம் சிறுமுகை மற்றும் கோவையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகு நூலிற்கு தேவையான பருத்திக்கு பஞ்சம் ஏற்படுகிறது, சுதந்திரத்திற்கு முந்தையக் காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பருத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு தன்னிறைவைக் கொடுத்திருந்ததாய் ஆசிரியர் நினைவுப்படுத்துகிறார். அப்பஞ்சத்தைத் தவிர்க்க தென்னிந்திய ஆலை அதிபர் ஒருவரால் முயற்சியெடுக்கப்பட்டு 1953 காலக்கட்டத்தில் இத்தாலியத் தொழில்நுட்ப உதவியோடு பாவனி ஆற்றின் ஓரமாக சிறுமுகையில் ரேயான் எனப்படும் செயற்கையிழையைத் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழக அரசின் உதவியோடு தொடங்கப்படுகிறது.
தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது அதைச்சுற்றியுள்ள மக்களின் வாழ்வும் வளப்படும் என்பதில் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது.
இதில் கைவிடப்படுவது தொலைநோக்குப் பார்வையே. முதலாளிகளின் சுயசார்பினாலும் அரசின் மெத்தனப்போக்கினாலும் இப்படி ஏற்பட்ட தொழிற்சாலைகளால் மக்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி யாரும் கவலைக் கொள்வதாய் தெரிவதில்லை என்ற நிலையை முகிலினி நாவல் அழகாய் நமக்கு விளக்குகிறது.
சமகாலத்தில் நடந்த ஒரு சம்பத்தைக் கையிலெடுத்து அதனுடன் இணக்கமான கதாப்பாத்திரங்களை உருவாக்கி படிக்கும் நாமும் அதனுடன் அதன் காலக்கட்டங்களிலேயே பயணிக்க வைத்து நம்மை அதனுள் ஈர்த்து விடுவது நாவலின் பலமாய் கருதுகிறேன்.
அதே நேரத்தில் இயற்கையை மீட்டெடுக்கப் போகிறோம் என்ற போர்வையில் எப்படி இந்த முதலாளித்துவங்கள் தம்மை உருமாற்றிக் கொண்டு சுழலுக்கெற்பையான வாழ்வில் நம்மை எப்படி எல்லாம் சுரண்ட நினைக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
நாகரீக மோகத்தில் இயற்கை சமநிலையைக் கெடுத்து விட்டோம். அதற்காய் இயற்கை நம்க்கும் பேரழிவுகள் எண்ணிக்கையிலடங்கா. இதை மாற்ற நாம் என்ன முயற்சி எடுத்தோம் என்பதற்கான கேள்வி என்னுள்ளே விவாதித்துக் கொண்டே இருக்க அதை தனியொருவானாய் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்குறிக்கும் அரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் எளிமையான வாழ்க்கை என்ற விடையைத் தருவது தெளிவான புதிய உலகத்திற்கான வழியாக இருக்கலாம்.
இதுப்போன்ற நாவல்கள் இன்றைய மனிதனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையே. இக்கருத்தையும் களத்தையும் ஒட்டிய நாவல்கள் நிறைய வந்து பரவலாக எல்லா மக்களிடமும் போய் சேர வழி வகை செய்ய வேண்டும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சூழலை நம் மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க நம் குழந்தைகளுக்காய் நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விய இந்நாவல் எழுப்பும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. இதுப்போன்ற முயற்சியைக் கையிலெடுத்து அப்பணியைச் சிறப்பாய் செய்து முடித்த ஆசிரியருக்கு மனமார்ந்த பாரட்டுகளோடு...