Tuesday 29 March 2016

யாமம் : நூல் விமர்சனம்

வாசனைத்திரவியமாகவும், பூசிக் கொண்டால் வயதைக் குறைத்து உள்ளக்கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும் இயல்புடையதாய் இருக்கும் அத்தரின் பெயரே யாமம். அத்தருக்கும் கதைக்குமான உறவு குறைவே என்றாலும் இக்கதையின் களம் யாவும் இந்த அத்தரின் மணமும் அதனால் ஏற்படும் காமக்கிளர்ச்சியும் அழகிய நூல் சேலைக்குள் இருக்கும் சிறு சிறு வண்ணப்பூக்களாய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எஸ் ரா எழுத்துக்களால் மாயக்களத்தை கொடுத்திருக்கிறார். களத்தின் தொடக்கம் மனிதனின் சுவை நரம்பிற்கான மசாலாப் பொருட்களின் தேடலில் இங்கிலாந்தில் துவங்குகிறது. அந்த மசாலாக்களின் கலவைகளின் ஏகப்போக உரிமையை வைத்து ஆட்டிப்படைக்கும் டச்சு வியாபாரிகளை கண்டு பொங்கும் இங்கிலாந்து வணிகர்களின் யோசனை நம் தேசத்தின் மீது தேடுதலை தோற்றுவிக்க சூரத்தில் கால்பதிக்கிறது கிழக்கிந்திய கம்பெனி.
காலம் 17 நூற்றாண்டின் இறுதி கட்டம்.
இந்தியாவின் காதல் சின்னமான தாஜ்மாஹாலின் கட்டிய நாயகன் ஷாஜகானின் காலக்கட்டத்தில் அவர் மகளுக்கு நடந்த தீ விபத்தும் அதன் பின்னணியில் அந்த அரசுடனான கிழக்கிந்தியக் கம்பெனியின் உறவின் தொடக்கவும் எழுத்தாளரின் அழகியலோடு தொடங்கி அதன் பிறகு புற்றீசலாய் பெருகும் ஆட்சியின் சிறு விவரணையோடு நாவலின் களம் கால் பதிக்கிறது
அடுத்த கட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆழமான வேரூண்டலுக்குப்பின் அதில் அழகான இன்றைய தமிழகத்தின் தலைநகரான மதராப்பட்டிணத்தின் உருவாக்கம் கட்டமைக்கப்படுகிறது. அதற்கான புனைவுக்களம் அருமை. இந்த பட்டிணத்தில் வளரும் இந்த புற்றீசல்கள் தனது நிறவெறியை களமிறக்கி இருவேறு நகரத்தை உண்டாக்குவதாக பதிந்து அதன் அவல நிலையில் எதிர்க்கும் மக்களின் அடக்கும் பரங்கியரின் ஆளுமை நம்முள் களத்தின் கொடுமையை முன்னிறுத்துகிறது.
இந்நாவலின் சிறப்பம்சமாக இருப்பது நாவலின் களம் நான்கு குடும்ப கதைகளால் கட்டமைக்கப்படுகிறது, இக்களத்தின் கதாபாத்திரங்களாக அப்துல் கரீம் அவரது மனைவிகள் ரஹ்மானியா, வகீதா, சுரையா,வேலையாளும் மனைவிகளின் நண்பனுமாக சந்தீபாவும் காட்ட அடுத்ததாய் பத்ரகிரி அவரது மனைவி விசாலா , அவரது தம்பி திருச்சிற்றம்பலமும் மனைவியாக தையல்நாயகியும் இவர்களது பாதுகாவலராக நங்கை சித்தியும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக சற்குணமும் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். அடுத்த பாத்திரம் கிருஷ்ணப்ப கரையாளரும், அவரின் திடீர் காதலியான எலிசபெத்தும் இருக்கும் நேரத்தில் பண்டாரமுமாய் சதாசிவமும் நாயும் அவர் சந்திக்கும் பாத்திரங்களுமாய் எவ்வித தொடர்புமில்லாமல் தொடங்கும் நாவல் எப்போதும் ஏற்படும் எல்லாருக்குமான இயற்கை உணர்வான காமத்திலும் அதனை உபயோகப்படுத்தும் யாமத்திலும் பாத்திரங்களை சித்திரங்களாக ஒன்றுபடுத்தி வடிவமைத்திருக்கிறார் (பண்டாரத்தைத் தவிர). இதைத்தவிர மேற்கத்திய கதாபாத்திரங்களாக பிரான்சிஸ் டேயும் அவரது மனைவியாக கிளாரிந்தாவும் அறிமுகப்படுத்தப்பட அதன் தொடர்ச்சியில் லாம்டனும் , டோபீங்கும் மதராப்பட்டிணத்தின் நிலவரைவியலை கொடுக்கும் பாத்திரங்களாகி விடுகிறார்கள்.
ஒவ்வொரு கதைகளும் தனக்கென்றப் பாதையில் தனித்தன்மையோடு நகர்வாதாய் அமைத்திருப்பதில் எழுத்தாளனின் ஆளுமை அழகியலாய் வெளிப்பட வைக்கிறது. இது வரலாற்று நிகழ்வியல்களோடு அமைக்கப்பட்ட புனைவுக்கதை. மதராப்பட்டினத்தின் தோற்றமும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் நாவலின் பெரும்பகுதி ஆக்கிரமித்திருக்கிறது.
மதராப்பட்டிணத்தின் நிலவரைவியலில் லாம்டனோடு பங்கு பெரும் பத்ரகிரியோடு நகரும் நேரத்தில், கதைக்களம் திருச்சிற்றம்பலத்தின் மூலம் லண்டன் நகரத்தின் அழகியலையும் அங்கு அவர் மேற்கொள்ளும் கணித ஆய்வுக்களும் அதற்காய் அவருக்குக் கிடைக்க அங்கீகாரமும் நமக்கும் நமது கணித மேதையை நினைவுப்படுத்தலாம். அக்காலத்தின் சூழல்களில் ஆட்டிப்படைத்தும் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தையும் அதே நேரத்தில் அங்கு வறுமையில் வாடும் சமூகத்தின் இன்னல்களையும் அவர்களின் சந்திக்கும் கொடுமைகளையும் நிழலோவியமாக்கி மேலை நாடுகளின் ஆதிக்க மனோபாவத்தை தோலுறித்திருக்கிறார்.
திருச்சிற்றம்பலம் மூலம் அதிகாரவர்க்கத்தின் ஆளுமையைக் காட்டும் நேரத்தில் அவனுடைய நண்பனாகவும் தொடக்கத்தில் சம்போகத்தில் லண்டன் மாநகரத்தில் தொடங்கும் வாழ்க்கையை அவன் போக்கில் இயல்பாய் ஏற்படும் மாற்றத்தில் அங்குள்ள ஏழைமக்களுக்கான போராளியாக காட்டி அதனுள் சிக்கி மாயப்போகும் கதை நம்முள் தாக்கத்தைக் கொடுக்கலாம்.
இந்தியக் கண்டத்தில் தென்னிந்திய காடுகளின் அழகையும் வர்ணிக்க தவறாத ஆசிரியர் அங்குள்ள மரவீடினூடே அமையப்பெற்ற கதையும் அக்கதையின் பாத்திரங்களாய் வரும் கிருஷ்ணப்ப கரையாளரும் , எலிசபெத்தின் கதையும் அவர்களுக்குள்ளான உறவின் சரடையும் அதிலே பின்னப்பட்டொடுங்குவதும் அழகே.
இக்களம் மனித மனத்தின் சிக்கல்களையும் சூழ்நிலைகளால் ஏற்படும் தடமாற்றத்தையும் அதன் விளைவில் தோன்றும் தடுமாற்ற சிக்கல்களையும் கொண்டு எழுத்தாளர் சிலந்திக் கூடு போல பின்னி அதன் பின்னலைப் போல ஒவ்வொரு கதைகளிலும் தெளிவான விவரணைகளோடு நகர்ந்து அதன் போக்கிலான இறுதியை சந்திக்கிறது.
நாவலின் பலமாய் எழுத்தாளரும் அவருடைய எழுத்துக்கள் அமைகிறது. காலங்களின் தொடர்ச்சி நமக்கு குழப்பத்தைத் தொடுக்கலாம். தனிமனித ஒழுக்கத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி தயாரிக்கப்படும் அத்தரே உள்ளத்தின் பால் கிளர்வைத் தூண்டும் இயல்பாய் இருப்பது போல தனிமனித ஒழுக்கத்தில் நெறிகெடும் போதைய முடிவுகளின் எச்சங்கள் நம்முள் வெறுமையை ஏற்படுத்தலாம் என்ற எனக்குள் தோன்றும் நினைவுகளோடு.....



No comments:

Post a Comment