Tuesday 8 March 2016

நூல் விமர்சனம் : அடர் மௌனம் - சா.சோபனா ....

பெண்ணின் கருவறைக்குள்ளே அடர் மௌனமாய் பத்து திங்களிருந்து வரும் குழந்தையின் அழுகையைப் போலல்லாமல் எரிமலையாய் வெடித்துணர்த்துகிறது தோழர் சோபனா அவர்களின் கவிதை தொகுப்பு.  அடர் மௌனம் என்ற பெயருடன் இந்த கவிதை தொகுப்பு விடியலின் மழை வாசல் தெளிக்க வரிகளின் புன்சிரிப்போடு வரவேற்று தூறல் நினைவுகளாய் காதலை பதியவைத்து தொடங்குகிறார்.
கவிதைகளின் படைப்பென்பது நினைவலைகள் நதியின் ஓட்டத்தில் பயணிக்கும் நேரமே. தடைகளால் நதியின் ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பைப் போலவே சில கவிதைகள் சிலப் பெண்களுக்குள்ளே அலுவலக சுமைகளாலும் வீட்டுச் சூழல்களாலும் வடிவம் பெறாமலே எழுதாத கவிதையாய் ஒடுங்கி விடுவதாய் சொல்லி வாசகர்களைத் தனது கவிதைக்குள்ளே ஈர்க்கத் தொடங்குகிறார்.
இன்றளவும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்ணின் ஆளுமையை சிதைத்து தன்னாளுமையை நிறைவேற்றி தான் தான் எல்லாமே எனச் சொல்லியும் உனக்கு ஒன்றுமே தெரியாது எனச்சொல்லி பெண்மையின் ஆளுமையை சிதைத்து ஒடுக்கும் நேரம் அந்த குடும்பத்தை தவிக்க விட்டு தன்னையொடுக்கும் நிலையில் அந்த ஒன்றுமே தெரியாத தாய் தனியொருவராய் நின்று சாதிக்கும் போது  அம்மாக்களுக்கு ஒன்றுமே தெரியாது தான் என்று பகடியாய் சொல்லி பெண்ணினத்தைத் தூக்கி பிடிக்கிறார்.
வாழ்வியலின் வெற்றியென்பதே  விட்டுக்கொடுத்தலில் தான் என்பதை இரும்புக்கண்ணியும் இற்று விழுமாம் விட்டுக் கொடுத்த கணம் எனச்சொல்லி விட்டுக்கொடுத்தலை அழுந்த பதிக்கும் அதே நேரம் விட்டுக் கொடுத்தலை வாழ்வியலிலிருந்து சற்றே நகர்த்தி சமூக கோப்புக்குள்ளே செலுத்தி அதனை ஆளுமைக்கான தந்திரமாய் வரைமுறைப்படுத்தி இந்த உலகம் மேலே பறக்கும் பறவையோடு ஓப்பிட்டு எல்லா மனிதர்களும் இந்தப் பறவையைப் போலப் பறக்கும் உரிமையுண்டு என ஆளுமையை ஆள வைக்குமிடம் சிலிர்க்க வைக்கிறது, 
அகம் ஒன்று நினைக்க புறமொன்று செய்ய தன்னிலையை நடிப்பினுள் ஆழ்த்துவதும் அலைபேசியை விட அணிகலன் உனக்கு அழகு எனப்பசப்பி இந்த விரிந்த உலகில் அவளை வீட்டிற்குள் சுருக்க நினைப்பதும் , சந்தேகத்தின் சாவியால் யாருமில்லை என நினைத்து அவளின் என்னக் குவியலின் குடிலுக்குள் திருடனாய் புகுந்து  நிதானித்து திறக்கும் மனதை அறிந்து அதை வெளிக்காட்டி தன் துணையை பாவத்திற்குள் அடைக்கிறார் கவிஞர்.
வீட்டிற்குள்ளே அடைப்பட்டிருக்கும் பெண்மையின் விசும்பல்களையும் மகிழ்வுகளையும் வெளிக்கொணர காத்துக் கிடந்து கண்ணில் படும் நேர வெளிப்படுத்தல்களில் பல ஆணாதிக்க எண்ணம் கொண்ட மனிதர்கள் ம் என்ற ஒற்றை வார்த்தையிலே மனத்தை ஒடுக்கி தன்னை ஆளுமை சமூகத்தின் குள்ள நரித்தனமான  மனோபாவத்தை தொலைந்த பொழுதுகளாய் நம்மில் நுழைத்து விடுகிறார்.
நதியின் நியதி கடலில் கலப்பதே வாழ்வின் நியதியும் அதுப்போலத்தான் என்ற ஓப்பீடு அருமை. 
சுயமதிப்பீடு இல்லாத இடத்தில் எந்த பொருளும் தனிநிகர் தன்மையை அடைவதில்லை. கவிஞரும் தனது கவிதைகளை சுயமதிப்பிடுகிறாரோ என்பதை ஆறிப்போன தேநீராய் எனும் போது அவருள்ளினுள் தனிநிகர் தன்மையுள்ள கவிதைகள் தவித்துக் கொண்டிருக்கின்றன என்றே எண்ணத் தோனுகிறது.
அவரது கவிதைகள் சமகாலத்தை ஒட்டியே நடைப் போடுகிறது. காலம் நவீனமாகி , காட்சிகளும் நவினமாகி போன நேரத்தில் மனித சமூகத்தில் உள்ளிருப்புகளில் ஊறி புறையோடி கிடக்கும் சாதி வெறி அதன் போக்கிலேயே வளந்திருப்பதையும் அதன் ஆதிக்கம் அன்பால் ஒன்று சேரும் விளிம்புநிலை மனிதர்களின் உறவுகளைப் பிரிக்க எனச் சொல்லி சாதீயத்தின் தீயப் பக்கத்தை வெளிக்கொணர்ந்த் விதம் அருமை.
சமகாலப் பிரச்சினைகளை மட்டுமே அலசிப் போட்டிருக்கிறது தோழரின் கவிதைகள். மதுவின் தீமைகளையும், அகங்காரத்தையும் , பெண்ணடிமைத் தனத்தையும் , விட்டுக்கொடுத்தலையும் , சந்தேகத்தின் தீமையையும் , சாதீயத்தின் பாதிப்பையும் முதல் முயற்சியிலேயே வெளிக்கொணர்ந்து போரளிய கவிஞர் என்ற முத்திரையைப் பெற்று விட்டார். அவரின் தேடலிலிருந்து சமூக அவலங்களை வெளிக்கொணர்ந்து போராடும் குணத்தை நம் இதயத்திற்குள்ளும் பொறுத்த முயற்சித்திருக்கிறார். இதுப் போன்ற கவிதைகள் நம்முள் நிலைத்து ஒடுங்காமல் இன்றைய இளைய சமூகத்திற்கும் சென்றடையும் நேரம் இத்தொகுப்பினுள்ள அவலங்களைப் போலல்லாமல் மாற்றத்தை கொண்ட சமூகத்தின் ஏற்றத்தை வெளிப்படுத்தும் மகிழ்வு கவிதைகளாக அடுத்த தொகுப்பு வெளிவரட்டும் என்ற நினைவியலோடு அடர் மௌனத்திலிருந்து வெளியேறும் எளிய வாசகனாய்....

நூல் : அடர் மௌனம் கவிதைகள்
ஆசிரியர் : சா. சோபனா

2 comments: