Monday 21 March 2016

ஓநாய் குலச்சின்னம்- புத்தக விமர்சனம்

இந்த பூமியில் மேம்பட்ட சமூகமாக இருப்பது மனித இனமே. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னே அவன் பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி இயற்கையை எதிர்த்து தனக்கென்று தனியொரு ஆளுமையை வளர்த்து இந்த பூமியின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் அவனே இந்த பூமியை அழிக்கும் பேரழிவு சக்தியாக உருவெடுத்திருப்பதை நாம் அறிந்தே இருப்போம்.
இயற்கை எதிர்த்து என்ற வார்த்தை உபயோகமே இயற்கையை மனிதனுக்கு நேசிக்கத்தெரியவில்லை என்பதற்காகவே. மனிதனின் பண்பட்ட மூளையின் மூலம் இயற்கையை தனதாக்கிக் கொள்ளவே இந்த மனித இனம் முயற்சி செய்யும் இந்த வேளையில் உலகிலுள்ள அத்துனை உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் அதனோடு கட்டுப்பட்டே வாழ்கின்றது.
மனிதனின் அபரிமிதமான வளர்ச்சி இந்த பண்பட்ட படித்த மனிதனை இந்த இயற்கையிலிருந்து பல மைல் தூரத்திற்கு அகற்றிக் கொண்டே போய்விட்டது. இன்று பூமிக்கும் நமக்குமான பந்ததிற்குமிடையேக் கூட ஒரு ஜோடி பாத அணிகள் நம்மைப் பிரித்தே வைக்கிறது. உண்மையிலேயே இயற்கையானது ஒரு தொடர் சங்கிலிக்குள் பிணைத்தே வைத்திருக்கும் போது மனிதன் எப்படி இந்த சங்கிலித் தொடரை உடைந்தெறிந்து தனதாக்கி கொண்டதன் மூலம் அத்தனை உயிர் வாழ் ஜீவனங்களுக்கும் பூலோக எமனாகவே காட்சிக் கொடுக்கிறோம்.
அறிவியலை வளர்தெடுத்திருக்கிறோம் அதன் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கும் அத்துனைப் பொருட்களையும் நமக்கு தேவையான பொருட்களாய் மாற்றிக் கொண்டே போகிறோம். அப்படி மாற்றும் பொருட்களையும் , அது மாற்றும் போது ஏற்படும் சக்தி மிகுந்த கழிவுகளையும் உட்கிரகிக்க மறுக்கும் இந்த பூமி நமக்கு கொடுக்கும் இன்னல்கள் கணக்கிலடங்காதவையே. எனினும் அதனை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் நாம் அதை மாற்ற அறிவுப்பூர்வமாய் சிந்திக்கவே மறுக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நாவலை வாசிக்கத் தொடங்கும் முன்னே அதன் பெயர்(ஓநாய் குலச்சின்னம்) எனைச் சற்றே தடுமாற வைத்தது. அதன் உள்ளிருப்பைத் தெரியாமலையே அதனை பல மாதங்கள் எனது அலமாரியில் தூங்க வைத்தேன் என்றே சொல்லலாம். ஆம் என் மனதிலிருந்த ஓநாய்கள் மிகவும் கொடுரமானவை , தந்திரமானவை , அதன் ஊளைகளை நாய்களிடமிருந்து கேட்கும் போது மனதிற்குள் ஏற்படும் சொல்ல முடியாத பயம் ஆகியவையே.
இந்த நாவல் இயற்கைக்கும் (டெஞ்ஞர்) , மனிதனுக்கும் , மேய்ச்சல் புல்வெளிகளுக்கும், ஓநாய்களுக்கும், மேய்ச்சல் நில ஜீவராசிகளான முயல், எலி , மர்மோட் , மான், நரி , குதிரை, ஆடுகள் ,நாய்கள் போன்ற உயிர்களுக்கும் இடையே இணைக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் கதையே. ஒவ்வொரு புத்தகத்திலும் நாம் தேட நினைக்கும் அல்லது நம் மனதிற்கெட்டாத பல விசயங்கள் உள்ளடக்கியே இருக்கும். அதனை நாம் படிக்கும் போது நம் மனதில் உண்டாகும் மனக்கிளர்ச்சியை ”சொல்வதால்”காட்டமுடியாதென்றே சொல்லலாம். நிச்சயமாக இந்நாவலின் மூலம் ஓநாய்களைப் பற்றியான மிகப்பெரியதொரு தாக்கம் வாசகர்களுக்கிடையே ஏற்படலாம் என்றே நம்புகிறேன்.
நாவலின் களம் சீனப்பகுதியான உள்மங்கோலியாவின் ஓலோன் புலாக் எனும் மேய்ச்சல் நிலப்பகுதியே. நாவலின் காலக்கட்டம் கடந்த நூற்றாண்டுகளின் இறுதியில் தொடங்குகிறது. சீனாவில் ஏற்படும் கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கிருக்கும் சில மாணவர்கள் உள்மங்கோலிய நாடோடிகளின் வாழ்வியலைப் பற்றி அறிவதற்கான அனுப்பப்படுகின்றனர். அப்படி அனுப்பப்படும் மாணவர்களில் ஹேன் சென் என்ற மாணவரைச் சுற்றியே இந்தக் கதை நகரத்தொடங்கிறது, இந்நூலின் ஆசிரியரும் அவரே. இக்கதையின் காலக்கட்டம் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிகிறது. ஏறக்குறைய முப்பத்தைந்து வருடக் காலம் இந்த நாடோடி மக்களின் மேய்ச்சல் வாழ்க்கை , ஓநாய்களுடனான பந்தம், குதிரை வளர்ப்பு, ஆடுகள் மேய்ப்பு, உணவுத்தேவைக்கான வேட்டை போன்ற அனுபங்களை இந்நாவலின் மூலம் அறியலாம்.
நாடோடி மக்கள் மட்டும் வாழும் உள்மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதியான ஓலோன்புலாக் புரட்சி காலக்கட்டத்தில் துவங்கி எப்படி மெல்ல மெல்ல ஹேன் சீனர்களிடம் மாறுகிறது என்பதை தெளிவாகவும், படிப்பறிவே இல்லாத மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நேசிக்கும் தருணத்தில் அங்கு வரும் படித்த ஹேன் சீனர்கள் மூலம் எப்படி இந்த இடம் மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் அதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லுகிறது இந்த நாவல்.
சீனாவில் மாவோவின் செவ்வியல் புத்தகத்திற்கு அடுத்தப்படியாக விற்பனையில் சாதனைப்படைத்த நூலாகவே இருக்கிறது.
சரித்திரப் புனைவாக உருவாக்கப்பட்ட இந்நாவலில் மிக முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் பில்ஜியும் அவரது மகன் பட்டு மற்றும் அவரது மகள் கஸ்மாய் , பாயர், உல்ஜி  ஹேன்சென்னும் அவரது நண்பர்களுமே. மனித கதபாத்திரங்களைத் தவிர இதில் ஒரு ஓநாய் குட்டியும், வேட்டை நாய்களான பார், எல்லோ , எர்லாங் கும் கதை முழுதுமே மனித வாழ்வியலோடு இணைந்தே பயணிக்கிறது.
நாவலின் நாயகனாக வரும் ஹேன் சென் நாடோடி மங்கோலியர்களின் தலைவரான பில்ஜியுடன் நட்பு ஏற்படுகிறது. அதன் மூலம் ஓநாய்களை வெறுக்கும் நாயகனிடம் அதன் வாழ்வியல் முறைகளையும் அது எப்படி மேய்ச்சல் நில நாடோடிகளுக்கு உதவுகிறது என்பதையும் அதனால் ஓலோன்புலாக்கின் இயற்கை சமநிலை மட்டுப்படுத்தலையும் விளக்குகிறார். இதன் மூலம் ஓநாய்களிடம் ஏற்படும் விபரீத ஆசை ஒரு ஓநாயை எடுத்து வளர்க்க வைக்கிறது. இதன் மூலம் ஓநாய் மனிதனிடம் நாயைப் போல இணக்கமாக மாறிவிடுகிறதா அல்லது எதிரான சூழ்நிலையைப் பெறுகிறதா என்பதையொட்டி நகருகிறது கதை.
அழகான மேய்ச்சல் நிலத்தையும் அதன் பருவங்களையும் ஒவ்வொன்றையும் அழகாக விவரித்துக் கொண்டே செல்லும் நேரம் அங்கு ஓநாய்கள் தங்கள் துல்லியமான திட்டமிட்ட தாக்குதல்களால்  எப்படி தங்கள் உணவுத்தேவையைப் போக்கி கொள்வதையும் மாறுபடும் பருவச்சுழ்நிலைக்கேற்ப எப்படி தன் உணவாதாரங்களையும் சேமித்து வைக்கிறது என்பதையெல்லாம் விவரிக்கிறது.
ஓநாய்களின் தாக்குதல்களை விவரித்து நம் மனதை குலை நடுங்கச்செய்யும் நேரம் மேய்ச்சல் நில நாடோடிகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விவசாய நிலமாய் மாறும் சமயம் புதிய ஆயுதங்களும் அதனைச் சேர்ந்த ஆட்களும் அந்த ஓநாய்களைக் கொல்லுவது மனதை பிழிகிறது.
நாடோடிகளின் மேய்ச்சல் நிலங்கள் மெதுவாய் அந்நியர்களின் ஆக்ரமிப்பில் செல்லும் போது அதனை பார்த்துத் துடிக்கும் நாடோடிகளின் கடைசி தலைவன் பில்ஜியின் சோகமான மனவோட்டத்தை கடைசி நாடோடி மேய்ப்பனின் துயரங்களாக விவரிக்கிறார்.
சுதந்திரம் ,சுயநிர்ணயம் , கௌரவம் இவையெல்லாம் மனிதனின் இயல்புகளாய் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவைகளைனைத்தும் ஓநாய்களுக்கும் உண்டு என்றும் அவை எந்த காரணத்திற்காகவும் நாயைப்போலவோ, குதிரைகளைப்போலவோ மனிதனின் ஆதிக்கத்தினுள் வரும் விலங்குகளைப் போலல்லாமல் தனித்திறனும் குணமும் பெற்றது என்று தெளிவுப் படுத்துகிறார்.
”ஒரு நாயைப்போல் பின் தொடர்ந்து செல்வதை விடவும் முரண்படுவதால் ஏற்படும் வலிகளையும் சங்கடங்களையும் தாங்கி கொள்ள வளர்ப்பு ஓநாய் தயராக இருந்தது” என்பதின் மூலம் ஓநாயின் சுயநிர்ணயத்தையும் , கவுரவத்தையும் விளக்கி நெகிழவைக்கிறார்.
ஓநாய்களின் குணநலன்களையும் அதன் வாழ்வியல் முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள விருப்பமிருப்பவர்களும் இயற்கை ஆர்வலர்களுக்குமான இந்த நாவல் மிகப்பெரியத் துணையே.
சீனர்களின் எண்ணத்தில் எப்படி நாடோடி மக்களின் வாழ்வியலை ஒடுக்குகிறார்கள் என்று சொல்லும் முன்னே  அவர்களின் வாழ்வியலையும் அவர்களின் உணவு பழக்கத்தில் நாயை உணவாக்குவதற்கான காரணத்தைச் சொல்லி சீன மக்களின் அறியாமையை பகடி செய்தும் , அவர்களின் கலாச்சாரப் புரட்சியை மறைமுகமாகவே எதிர்த்துமிருக்கிறார் ஆசிரியர்.
தேவையான பிறருக்கான உதவிகள் இங்கு பகுத்தறிவு கொண்ட வளமிக்க மனிதனால் மறுக்கப்பட்டுக்கொண்டே தானிருக்கிறது. இது நம்நாட்டிற்கு எப்படி பொருந்துகிறதோ அதே போல சமுதாயத்தில் வளமையடைந்த சீனர்களின் சுய நலம் குறித்து நாடோடி மக்களின் எண்ணத்தில் ஆடுகளாகவே சித்தரிக்கப்படுகிறது. அது ஒரு ஆட்டு மந்தையில் ஓநாய் நுழைந்து  ஒரு ஆட்டை வேட்டையாடி குத்தி கிழித்துண்ணும் போது மற்ற ஆடுகளின் எண்ணம் பற்றி..
“ நல்ல வேளை ஓநாய் உன்னைத் தின்னுகிறது என்னை இல்லை, நீ செத்துவிட்டாய் அதனால் நான் பிழைத்திருக்கிறேன் என்பது போல அதன் பாவனைகள் இருக்கிறது”
மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் கோடைக்காலத்தைப்பற்றி கேள்வி பட்டபோது எனக்கேற்பட்ட பிரமிப்பும் அச்சமும் அளவிட முடியாது காரணம் அங்கு கோடைநாட்களென்பது அதிகாலை மூன்று மணியில் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை வெளிச்சம் நீண்டிருக்கும்.
நாவல் மேய்ச்சல் நில வாழ்வியல் பரிணாமங்களை ,வாழ்வியல் நிலங்களை , அவர்களின் நம்பிக்கைகளை அழகாய் எடுத்துக்காட்டுகிறது. நாவலிற்கான பலமாய் அதன் மொழிப்பெயர்ப்பு அமைகிறது. நாவல் எதையும் வைத்து குழப்பாமல் நேர்கோட்டிலேயே செல்லுகிறது. இயற்கை உணவு சங்கிலியைப்பற்றி அழுத்தமாக எடுத்துரைக்கும் நேரத்தில் அதன் விளைவுகளை முடிவில் காட்டும் போது நாவலின் முன்பக்க நாட்களின் நினைவுகள் நிழலாய் ஆடிக்கொண்டு இயற்கைப் பற்றிய மிகப்பெரிய தூண்டுதலைக் கொடுக்குமென நம்பலாம்.
இந்நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங் அவர் சீனாவின் ஜியாங்குவில் 1946 ம் ஆண்டு பிறந்த இவர் கலாச்சாரப்புரட்சியின் காரணம் 1967 களின் சீனாவின் ஆட்சியிலிருக்கும் உள்மங்கோலியாவிற்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்கு 11 ஆண்டு காலம் தங்கி இருந்து அம்மக்களின் வாழ்வியலை அறியும் அவர் அதன் பிறகு சீனாவிற்கு சென்று தன் படிப்பை தொடர்ந்து கல்வித் துறையாளராக பணியாற்றி 2006 ல் ஓய்வுப் பெறுகிறார். இந்நாவலை 1999 ல் தொடங்கி 2003 ல் முடித்திருக்கிறார். இந்நாவல் சீனமொழியிலிருந்து ஆங்கிலத்தில் ”Wolf Totem" என்ற பெயரில் கோல்ட்ப்ளாட்டும் தமிழில் சி,மோகன் அவர்களும் மொழிப்பெயர்த்துள்ளனர். இந்நூலை அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது..

No comments:

Post a Comment