Sunday 28 February 2016

A Thousand Splendid Suns By Khaled Hosseini

          


காலித் ஹொசைனியின் “A Thousand Splendid Suns " நாவல் வாசித்து முடித்தாயிற்று. ஆனால் அதன் தாக்கம் மனதின் ஆழ்மனதினூடே கடந்து ஒவ்வொரு அணுக்களையும் அழச்செய்கிறது என்பதே நாவலின் சிறப்பம்சம்.
நாவலின் சூழல் ஆப்கனின் தலைநகரான காபூலை மையமாக கொண்டே பின்னப்பட்டுள்ளது, நாவலில் இரு பெண்களின் துக்க மயமான வாழ்வினூடே ஆப்கானிஸ்தான் என்ற சபிக்கப்பட்ட பூமியின் 30 ஆண்டுகால வரலாறு புனையப்பட்டுள்ளது.
சோவியத் ஆக்ரமிப்பின் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் அதன் மூலம் மக்களிடையே ஏற்பட்ட கம்யூனிச ஆட்சி எதிர்ப்பும் சோவியத்தின் பின் வாங்கலும் அதன் பின் ஆப்கனின் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு இனக் குழுக்கள் அரங்கேற்றிய போராட்டங்களின் மக்கள் அனுபவித்த துன்பங்களூடே கடந்து செல்கிறது.
Sudeeran S's photo.மரியம் , லைலா என்ற இருப் பெண்களின் வாழ்வியல் முறையில் இந்த கதை சொல்லப்படுகிறது, அழகான காதல் , பிரிவு, வரைமுறை தாண்டிய திருமணம், ஆணாதிக்க வெறி , குடும்பத்தின் இழப்பு , ஏமாற்றம் , பல்வேறு உள்நாட்டுக் கலவரங்களால் நாட்டிற்குள்ளும் , வீட்டிற்குள்ளும் ஏற்படும் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள் என விரிகிறது.
ஒரு கட்டத்தில் இருப் பெண்களும் வீட்டை விட்டுத் தப்பியும் அங்கு நடைபெறும் காட்டுமிராண்டி ஆட்சி அவர்களை நாட்டை விட்டனுப்புகிறதா என்பதையும் அந்த பெண்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பைக் கொடுக்க முயல்கிறது எனக் காட்டுவது இதயத் துடிப்பை அதிகமாக்கும் இடங்கள்.
தலிபான்களின் ஆட்சி முறை எப்படி பெண்களையும் மக்களின் உண்மையான சுதந்திரத்தையும் பறித்ததையும் அவர்களின் காட்டுமிராண்டித் தனமான ஆட்சியை தோலுரித்து காட்டியிருக்கிறது,
காபூலின் நாய்கள் மனிதப் பிணத்தின் ருசியை அறிந்து விருந்தாக்கி கொள்கிறது என்ற வாசக மூலம் அங்கு நடந்த மனித இனத்தின் எல்லை மீறல்களால் தெருவெல்லாம் கிடந்த பிணக்குவியல்களை சொல்லும் போது எண்ணம் நாவலைத் தாண்டி பயமும் நடுக்கமும் கொள்ளச்செய்கிறது.
ஆப்கன் பெண்கள் தங்களை காத்துக் கொள்ள தங்களை தாங்களே தற்கொலைக்குள்ளாக்குவதும். ஆண்கள் கவுரவத்தின் பேரிலும் தன் குடும்பத்தைக் ராணுவத்திடம் கற்பழிப்பிலிருந்து காக்க தன் மனைவிகளையும் சொந்த குழந்தைகளையும் கொன்று தன்னுயிரைப் போக்குவதைப் பற்றியும் எழுதி மனித மிருகங்களின் அவலத்தைக் காட்டுகிறார்.
நாவல் துக்கத்தைப் போர்த்தியிருந்தாலும் எந்த தடையில்லாமால் கடந்து செல்வதற்கு உறுதுணையாய் இருப்பது நாவலின் உயிருள்ள பாத்திரங்களாக கடைசி வரை நம் மனதினூடே பயனிக்கும் இரு அழகான் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் தான். மேலும் அழகான காதலும் , பிரிவும், அந்த காதல் நிறைவேறுகிறதா என்ற தாக்கமும் நாவலின் கடைசி கட்டத்தின் மிகப்பெரிய திருப்பு முனைகளாகக் கட்டங்களாக அமைகிறது.
நாவல் எந்த்வொரு அமைப்பையோ , இனத்தையோ தழுவாமல் இன்றைய காலச்சூழலில் பெண்ணிற்கும் , மனித இனத்திற்கும் நடக்கும் கொடுமையை வெளிப்படுத்தியிருப்பதும் இதுப் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் சமூக சூழல் மாற்றங்கள், அநாதைகளாக்கப்படும் குழந்தைகள் , வீடுகளையும் தன் சொத்துக்களையும் இழந்து அந்நியர்களாகவும் அகதிகளாகவும் சொந்த மண்ணை விட்டும் அந்நிய மண்ணில் அநாதைகளாக்கப்படாமலிருக்கவும் மனிதநேயம் வளர்க்க இந்த நாவல் ஒரு அபாய சங்கை முழங்கியிருக்கிறது.....

No comments:

Post a Comment