Saturday 21 October 2017

தொலைந்து போன காந்தியும், காந்தீயமும்...

எது நாகரீகம் என்ற என்னுள் எழுந்த கேள்வியின்  பதிலாக இயற்கை சமநிலையை அதிகபட்சம் குலைக்காத வாழும் மனிதனின் வாழ்வியலை மேம்பட்ட நாகரீகமாக கொள்ளலாமா என்ற ஐயப்பாட்டை முன்வைக்கும் நேரத்தில் காந்தியின் வாழ்வியல் முறை இதனையொத்ததாகவே இருந்ததாய் கருதுகிறேன். அவரின் வாழ்வியல் இன்றைய சமூகத்தால் கடைப்பிடிக்க முடியாத வாழ்வியல் அல்ல. எளிமையான வாழ்வியலையும் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் சமூகத்தில் சமத்துவத்தைத் தவிர்க்காத முறையான கட்டுக்கோப்பான ஒவ்வொரு நாளும் கேள்விக்குட்படுத்திய வெளிப்படையான முறையே.

மேற்கத்திய கலாச்சார முறைகளை வன்மையாக எதிர்த்த காந்தியின் கனவு நிச்சயம் அவரது தகுதிக்கு மீறினதாய் மட்டுமே அமைந்ததாய் கருதுகிறேன். காரணம் காந்தியின் இறப்பிற்குப் பிறகு காந்தீயத்தை ஒட்டு மொத்தமாய புதைத்தவர்களின் தேசமாகி போனதும் அன்றைய தலைவர்களின் சுயநலத்தன்மையும் தொலைநோக்கு பார்வையின் குறைபாடும் மெல்ல மெல்ல மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் குகைக்குள் நம்மை மறுக்க முடியாத விதத்தில் நம்மை ஈர்த்துக் கொண்டதில் நானும் ஒருவனாய் வீர்ப்பு முட்டிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைய நாகரீகம் தனித்தன்மையால் தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் சுயநலத்தை சார்புடையதாய் மட்டுமே இருக்கும் கோலத்தில் காந்தியின் தனித்தன்மை வாய்ந்த கொள்கைகள் சுயநலத்தின் வெளிபாட்டாய் எடுத்து கொள்ள முடியாமல் அவர் காலத்தில் சமூகத்தை மேம்படுத்தி தேவைக்கதிமான எதையும் நுகராத தன்மை கொண்ட எளிமைக்குள் கொண்டு வரவுமாயிருந்தது.

இன்றைய சமூகம் நுகர்வு வெறிக்குள் சிக்கித் தவிக்கும் கனம் நம்மனம் தேடுவது காந்தி போன்றோரின் கொள்கைகளைத் தான். ஆனால் அது செயல்வடிவமாக்க முடியாமல் போனதும் நம்மனம் நமக்குள் கட்டுபடாது நவீன மோகத்தில் நம் வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளை வரையறுத்துக் கொண்டு சிறகை விரித்து பறக்க இயலாமல் விட்டில் பூச்சியாய் சுருங்கி விளக்கைத் தேடி அழியக் காத்திருக்கும் அவல நிலையில் நம் சிறகுகளைப் புதுப்பித்து பறக்க நமக்குத் தேவைப் படுவது காந்தியின் கோட்பாடுகளை கட்டமைப்பது தான்.

தேசப்பிதாவாய் போற்றிய காந்தியை மறந்த நாம், நம்மை அந்நியப்படுத்திய மண்ணின் புதல்வராகிய கில்பர்ட் முரே கவனமாய் புரிந்து தனது ஆய்வறிக்கையில் மேற்கொள் காட்டுவதாவது :

இவரது கொள்கையை தவறிழைக்காத, வன்முறையில் ஈடுபடாத ஆனல் எதிர் தரப்பினர் தாங்கள் களைப்புற்று தண்டனை வழங்கியமைக்காக வெட்கப்படும் வண்ணம் கொடுத்த தண்டனைகளையெல்லாம் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு நிற்கும் ஒரு கொள்கை.

அடுத்ததாய் வைக்கும் விமர்சனம்

புலன் உணர்வின் மகிழ்ச்சிக்காகவோ செல்வங்களுக்காகவோ தன்னுடைய வசதிக்காகவோ தன்னுடைய பதவி உயர்வுக்காகவோ எந்தக் கவலையும் கொள்ளாது, தான் எதனைச் சரி என்று நம்புகிறாரோ அதனைச் செய்வதற்கரிய உறுதிப்பாட்டுடன் இருக்கும் ஒரு மனிதரிடத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வது என்பதில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். மேலும் சொல்லும் போது நீங்கள் அவருடைய உடலை வெல்லலாமே தவிர அவருடைய ஆன்மாவை ஒன்றும் செய்துவிட முடியாது

என்று சொல்லி பெருமை சேர்க்கும் சமயம் இன்று முற்போக்குவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் படித்த நம் அறிஞர்கள் மூடநம்பிக்கையை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தி அதின் விளைவுகளால் தங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை வளர்க்கும் செயலைக் கண்கூடாக காண்கிறோம். அவர்களின் அறிவானது தவறுகளை கண்டுபிடிக்க முடியாததும் நம்பிக்கைக்குரியதாகவும் அடையாளப்படுத்தி இன்றைய இளைஞர்களுக்கான தவறான பாதையையும் புரிதலையும் ஏற்படுத்திக் கொடுக்கும் மேல்நாட்டு இசங்களை நம்முள் செலுத்தி இயற்கையின் சம நிலைகளை குலைத்து இன்று சாக்குப் போக்கு சொல்லி காந்தியையும் அவரது கொள்கைகளையும் குழப்பி புரிய வைக்கிறோம் என்ற பெயரில் புதைத்த வரலாறு மட்டுமே நம்முன் சாட்சியமாக உள்ள நேரத்தில்
நம் கடமை என நினைப்பது இது போன்ற சதியின் விளைவுகளில் விதியென்று சொல்லி சிக்காமால் பரந்து பட்ட பார்வையின் உச்சத்தில் அவர்களின் பகுத்தறிவு பித்தலாட்டங்களைப் பின்னுக்குத் தள்ளுவது காலத்தின் கட்டாயமாகப் படுகிறது. அதற்கு நமக்கு மிகத் தேவை காந்தியின் வாழ்வியல் கொள்கைகள் தான். ஆனால் அது இன்று எழுத்துக்குள் மற்றும் சுருங்கியும், காலத்தின் கட்டாயம் என்ற போக்கில் கண்காட்சிப் பொருளாகவும் மாற்றப்பட்டுள்ள சிந்தனைகளை தவிர்ப்போம்.

காந்தீயத்தைத் துடைந்தெறிந்த பிறகான இன்றைய மக்களின் நிலை மகிழ்வையும், மனிதநேயத்தையும் வளர்க்காமல் மாயா லோகத்தின் நாகரீகப்பிடியில் தடம் புரண்டு நாளும் நேரமும் உற்றம் சுற்றம் மறந்து நுகர்வுப் பசிக்காய் பணம் தேடி அலைந்து அதன் சேற்றில் நம் மொத்த வாழ்வியலையும் அடகு வைத்து உறக்கம் தொலைத்து நிம்மதிக்காய் மனோ தத்துவ மருத்துவரின் மாத்திரையில் வாழ்வை செலுத்தும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இன்று பகுத்தறிவு என்ற பெயரில் நாம் இன்று தகர்க்க நினைப்பது இந்திய மரபின் மேம்பட்ட வாழ்நிலையிலுள்ள நம்பிக்கை சித்திரங்களையும் கலாச்சாரத்தையும் தான். ஓங்கி உயர்ந்த கற்சிலைகளாய் வளர்ந்து நிற்கும் நமது கலாச்சாரத்தின் பின் நிகழ்வுகளை பற்றி ஆராய்ந்தறிந்து அவற்றை வளர்க்காமல் ரத்தக் களறியால் வளர்ந்து தொய்ந்துப் போன இசங்களின் பின்னால் நாம் இளைஞர்களை செலுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

அன்று ஆங்கிலேயன் சூழ்ச்சியில் வாழ்வின் இழிநிலையிலிருந்த சமூகத்தின் மக்களை வாழ்வியலை மேம்படுத்த புறப்பட்ட தலைவர்களையும், ஒரு குறிப்பிட்ட சாதியை முன்னிறுத்தி தன் ஒட்டு மொத்த வாழ்வையும் அந்த சாதியின் சமூகத்தை கருவறுக்க சபதம் மேற்கொண்ட தலைமைகளையும், பன்னெடுங்காலமாய் ஆங்கிலேய சாம்ராஜ்யாத்தில் அடிமை புழுக்களாய் உழன்ற மக்களை சுதந்திர காற்றை சுவைக்கச் செய்து சின்ன பின்னமாய் சிதறிப் போன நமது சமஸ்தானங்களை பெரும் பாடு பட்டு ஒன்று படுத்திய நிலையில் மொழி, மதத்தின் பேரால்  இன்று அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் தேச விரோதிகளை நாம் தலைவர்களாய் கொண்டாடும் நிலையில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தம் மக்களின் உரிமைக்காய் குரல் கொடுத்து தோளோடு தோளாய் அவர்களது வாழ்வின் வழியில் தன் வாழ்வை தகவமைத்து தனக்கென்ற ஓரிடத்தை எளிமையின் பிரமாண்டத்தில் கட்டி வாழ்ந்த நமது மகாத்மாவை சுட்டு புதைத்த நேரத்திலேயே நமது அகமனத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டிலுள்ள தீமைகளை  அக்னி ஜூவாலையாய் முன் கொணர்ந்து அதனுள் அவரது கொள்கைகளை இட்டு கொழுத்தி மாயக் குளிரில் தம் உடலை வெப்பப் படுத்திக் கொண்டிருக்கிற மனோபாவத்தை மறந்து தொலைந்துப் போன காந்தீயத்தையும் காந்தியையும் சமகாலத்தில் நீரோட்டத்தில் சங்கமிக்கும் வகையில் மீட்டுருவாக்கம் செய்யம் பணியை கடமையாக உணர்ந்து தொடங்குவோம்...

No comments:

Post a Comment