Wednesday 28 December 2016

நூல் விமர்சனம் : தென்னாப்பிரிக்காவில் காந்தி

நூல் விமர்சனம் : தென்னாப்பிரிக்காவில் காந்தி


21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமது வாழ்க்கை மிகவும் சுதந்திரமாக செயல்பட நம்மை அனுமதித்திருக்கிறது. இன்று நமது வாழ்வின் தேடல்கள் நம் எதிர்கால வாழ்வின் திட்டமிடலுக்காகவே இருக்கின்றன. இதே ஒரு நூறாண்டுகளுக்கு முன்னான அதே நம்மவரின் வழித்தோன்றல்களிடம் இதே அளவான சுதந்திரம் இல்லாது வெள்ளையர்களின் ஆளுமையில் அடிமைகளாய் கிடந்திருக்கிறோம். அடிமைத்தளையிலிருந்து வெளிப்படவேண்டுமென்றெண்ணம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொடர ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் உச்சத்தைத் தொடாமலே அதனுள்ளில் ஒடுங்கிப் போனது. அந்த அடிமைத் தளையை முற்றுமாயொழிக்க சாத்வீகமென்ற ஆயுதத்தைப் பிரயோகித்து எதிராளிக்கும் போரிடுபவருக்குமிடையே ரத்த வரலாற்றைப் பதியாமல் நமக்கான சுதந்திரத்தை வென்றெடுத்த மகாத்மாவைப் பற்றிய தேடுதல்கள் கொண்ட மனிதர்களுக்காகவும் இன்றைய நுகர்வு வெறியிலும் மேற்கின் கலாச்சாரத்திலும் ஊறித் திளைத்து மற்றுமொரு வடிவில் அடிமையாகிப் போன இந்த சமுதாயம் எப்படி மீளப்போகின்றது என்ற கேள்விகள் உள்ளே குடையும் நேரத்தில் மேற்கின் கலாச்சாரத்தில் தன் வாழ்வினைத் தொடங்கி தன்னை மெல்ல மெல்லறிந்து தன் கலாச்சாரத்தின் மீதாக்கம் கொண்டு வாழ்வின் நெறிமுறைகளை கடுமையாக மாற்றியமைத்து அதனையும் கண்டிப்புடன் அனுஷ்டித்து அதன் மூலம் மேற்கின் நாகரீக மாயத்தையும் உடைத்தெறிந்த ஒரு மாபெரும் மனிதனின் சுதந்திரத் தாகத்தை தாங்கி கொண்டிருக்கும் சமகால ஆய்வு நூல்.
இந்தியச் சுதந்திரப்போரை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமக்கென்ற பாணியில் முன்னெடுத்து அனைத்து இந்திய உள்ளத்தினுள்ளும் ஊடாய் புகுந்து சுயநலமில்லாத் தன்னலமிக்க ஹிம்சையற்ற போர்க்களத்தில் ஆணும் பெண்ணுமாய், மதச் சாதி இன வேறுபாடுகளை ஒடுக்கி பேராத்மாவின் வழிகாட்டுதலில் மெல்ல நிதானத்துடன் தொடங்கிய சாத்வீகப் போராட்டம் மூன்று பத்து ஆண்டுகளின் கடைசியில் நமக்கு எல்லாச் சுதந்திரத்தையும் உள்ளடக்கிய நம்மக்களால் ஆளப்படுகின்ற ஜனநாயக அரசு உருவாக பேராதரவாய் நின்ற அந்த மாபெரும் மனிதரின் இந்தியச் சுதந்திரப் போருக்கான முந்தையப் போராட்டங்களின் தொடக்க களத்தைப் பற்றிய மிகத் துல்லியமான ஆய்வே இந்த தென்னாப்பிரிக்காவில் காந்தி.
காந்தி எனும் சுயநலத்தன்மையில்லாத ஆளுமை , எதிர்த்து நிற்கும் எதிராளிகளையும் சாத்வீகத்தால் அடக்கும் திறமை , மக்கள் பணியா,  குடும்பமா எனும் நேரம் தன் குடும்பத்தை இரண்டாவதாய் மட்டுமே காணும் இந்த அதிசய மனிதரின் தொடக்க காலம் எந்தவொரு கோட்பாடுமில்லாது சராசரி இந்தியக் குடும்பத்தை ஒட்டியேத் தொடங்கி பாலியத் திருமணத்தில் கலந்து எதிர்காலத் தேவைக்காய் சாதீயத் தளையைக் கடந்து தன் எதிர்காலத் தேவைக்காய் கடல்கடந்த போது கூட காந்தியின் மனதில் இந்த போராட்டக் குணங்களோ நாம் அடிமை என்ற எண்ணமோ இல்லாத தன் தாயிற்குக் கொடுத்த சத்தியத்தை மீறாது வழக்கறிஞராய் மாறிய பின்பு தனது வாழ்வை மிகப்பெரும் கனவுகளோடு தொடங்க எண்ணிக் குறித்த தொடக்கமே தோலிவியின் விளிம்பில் தள்ளாடும் நேரம் அதிர்ஷ்ட வசமாய் வந்து சேரும் இந்த உத்யோகம் தன் எதிர்கால வாழ்வையும் அந்த முப்பது கோடி மக்களின் ஆதர்சன நாயகனாய் மாறுவோம் என்ற நோக்கமோ இல்லாதே தொடங்கியது.
தென்னாப்பிரிக்காவில் இறங்கிய கணமே தன்னுள் எங்கோவொரு மூலையில் ஒடுங்கி கிடந்த அந்த போராட்டத்தை மெல்ல விழிப்படைய வைக்கும் நிகழ்வாய் அமைந்த்து அவரது இரயில் பயண நிகழ்வு. பொதுவாக காந்தியின் வாழ்க்கை வரலாறைப் படிக்கும் சமயம் நாம் அறிவது இந்த நிகழ்வும் அதற்குப் பிறகு அங்கு சுதந்திரப் போராட்ட்த்தில் கலந்துக் கொண்டார் என்றார் என்ற சிறு புள்ளியே. காந்தி ஏறக்குறைய இருபத்தி மூன்றாண்டு காலம் கழித்திருந்தும் அங்கு நடந்த நிகழ்வுகளைப் பற்றிய நீண்ட ஆய்வுகள் நம்மை எளிமையாக வந்தடையவில்லை அந்தக் குறையானது இந்த புத்தகத்தை  எழுதிய காந்தியவாதியான இராமச்சந்திரகுஹா மூலம் தீர்க்கப்பட்டது என்றே நம்பலாம்.
1915 ல் இந்தியாவிற்கும் வரும் காந்தி ஏறக்குறைய நான்காண்டுகள் கிழக்கு மேற்காய் இந்தியாவெங்கும் பயணத்தை தொடர்ந்து 1919 வாக்கில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை தம் கைக்குள் கொண்டு வரும் பேராளுமை காந்திக்கு முன் களமாய் அமைந்தது தென்னாப்பிரிக்க களமே. தென்னாப்பிரிக்க களம் காந்திக்கான இடத்தை மெதுவாய் அவரறியாமலே கட்டியெழுப்பப்படுகிறது. கூலிகள், அழுது வடிந்த , கறுத்த தோலுடைய, இந்த நாட்டிற்கு அவலட்சணம் என்றெல்லாம் நிறவெறி மற்றும் இனவெறியால் பார்க்கும் அந்த ஆதிக்க இனத்தின் போக்கை தன் போராட்டத்தின் மூலம் மாற்றி நம் மக்களையும் சக மனிதர்களென்ற இடத்திற்குக் கொண்டு வர அவருக்குத் தேவைப்பட்ட ஆண்டுகள் இரு பத்து ஆண்டுகளே. இக்கால இடைவெளியில் ஏற்பட்டப் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் சில மற்றுமே.
அந்த மாபெரும் மனிதரின் இந்த சாத்வீகப் போராட்டமும் மிகப்பெரிய கணக்கீட்டையும் அதன் பின் விளைவுகளுக்கான சரியான முன் முடிவுகளுடனுமே தொகுக்கப்பட்டது. நிதானமாக இருந்தாலும் தன் கருத்தை நிதர்சனமாக தன் எதிர் போராளிகளுக்கு வைக்கும் பாங்கும், அப்படி எடுத்த முடிவில் ஏற்படும் விளைகளை மிகத் துல்லியமாக கணக்கிட்டு அதற்கான வெற்றிடத்தை நிரப்பியும் தன் போராட்டத்தை நீர்த்துப் போகாது சிறு துளியில் தொடங்கி பெரும் வெள்ளமாக மாற்றிய ஆயுதமில்லா நிராயுதபாணியான அந்தப் படை தன்னைத் தானே வருத்திக் தன் வருந்தலுக்கான முன் காலத்தை ஆளுபவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வேறு வழியில்லை என்ற முடிவிற்கு கொண்டு கடைசியாக குறைந்தப்பட்ச சுதந்திரத்தை மெல்லப் பருகத் தொடங்குவதை இந்த ஆய்வுநூல் நம் கண் முன் நிறுத்துகிறது. அந்த போராட்டத்தின் மிக முக்கிய ஆதர்சனப் புருசனாய் காந்தி அவர்கள் பரிமளிக்கிறார்.
மேலும் இந்த நூல் காந்தியை வெளிக்காட்டும் சமயத்தில் காந்திக்கு உறுதுணையாய் இருந்தவர்களையும் அவர்களது பங்களிப்புகளையும் அவர்கள் எப்படி காந்தி எனும் ஒற்றைக் குடையின் கீழ் ஒரு கட்டுப்பாடு கொண்ட அணியாக செயல்பட்டார்கள் என்பதையும் காட்டுகிறது. காந்தியை இழந்து முக்கால் நூற்றாண்டுகளை நெருங்கி விட்டோம். அவர் வாழும் காலத்தில் அவரின் இந்த எளிமையான வாழ்வியல் கொள்கைகள் மிகப் பயங்கரமாக விமர்சிக்கப்பட்டதும் அவரின் கோட்பாடுகளை பகுந்தறிந்து எதிர்க்கிறோம் என்று சொல்லி மிகச் சரியாக இந்தியனின் மனதிலிருந்து அந்த மகாத்மாவை நீக்கப்பாடுபட்டதை நாமறிவோம்.

இன்றைய சமகாலத்திலும் மேற்கின் கலாச்சாராத்தாலும் , அறிவியலின் பெருமை என்ற சுயவிமர்சனத்தாலும் இன்றைய பூமியை சீரழித்துக் கொண்டிருக்கும் நம்மிலிருந்து இந்த காந்தி மிக வேறுப்பட்ட மனிதர் தான் காரணம் அவர் இயற்கையையும் அதனோடியைந்த வாழ்வையும் நேசித்த அவர் மேற்கின் கலாச்சாரத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் கண்மூடித்தனமாய் எதிர்த்ததோடல்லாமல் அவைதான் இந்தியாவை அழிக்கும் என்று சொன்னதை இன்றைய சமகால அழிவுகளோடு ஒத்துப் போகும் நேரம் காந்தியின் கொள்கைகள் மீளுயிர் பெறுவதை நாம் காணலாம்.
நூல் : தென்னாப்பிரிக்காவில் காந்தி
ஆசிரியார் : இராமச்சந்திர குஹா
தமிழில் : சிவசக்தி சரவணன்