Tuesday 29 March 2016

யாமம் : நூல் விமர்சனம்

வாசனைத்திரவியமாகவும், பூசிக் கொண்டால் வயதைக் குறைத்து உள்ளக்கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும் இயல்புடையதாய் இருக்கும் அத்தரின் பெயரே யாமம். அத்தருக்கும் கதைக்குமான உறவு குறைவே என்றாலும் இக்கதையின் களம் யாவும் இந்த அத்தரின் மணமும் அதனால் ஏற்படும் காமக்கிளர்ச்சியும் அழகிய நூல் சேலைக்குள் இருக்கும் சிறு சிறு வண்ணப்பூக்களாய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எஸ் ரா எழுத்துக்களால் மாயக்களத்தை கொடுத்திருக்கிறார். களத்தின் தொடக்கம் மனிதனின் சுவை நரம்பிற்கான மசாலாப் பொருட்களின் தேடலில் இங்கிலாந்தில் துவங்குகிறது. அந்த மசாலாக்களின் கலவைகளின் ஏகப்போக உரிமையை வைத்து ஆட்டிப்படைக்கும் டச்சு வியாபாரிகளை கண்டு பொங்கும் இங்கிலாந்து வணிகர்களின் யோசனை நம் தேசத்தின் மீது தேடுதலை தோற்றுவிக்க சூரத்தில் கால்பதிக்கிறது கிழக்கிந்திய கம்பெனி.
காலம் 17 நூற்றாண்டின் இறுதி கட்டம்.
இந்தியாவின் காதல் சின்னமான தாஜ்மாஹாலின் கட்டிய நாயகன் ஷாஜகானின் காலக்கட்டத்தில் அவர் மகளுக்கு நடந்த தீ விபத்தும் அதன் பின்னணியில் அந்த அரசுடனான கிழக்கிந்தியக் கம்பெனியின் உறவின் தொடக்கவும் எழுத்தாளரின் அழகியலோடு தொடங்கி அதன் பிறகு புற்றீசலாய் பெருகும் ஆட்சியின் சிறு விவரணையோடு நாவலின் களம் கால் பதிக்கிறது
அடுத்த கட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆழமான வேரூண்டலுக்குப்பின் அதில் அழகான இன்றைய தமிழகத்தின் தலைநகரான மதராப்பட்டிணத்தின் உருவாக்கம் கட்டமைக்கப்படுகிறது. அதற்கான புனைவுக்களம் அருமை. இந்த பட்டிணத்தில் வளரும் இந்த புற்றீசல்கள் தனது நிறவெறியை களமிறக்கி இருவேறு நகரத்தை உண்டாக்குவதாக பதிந்து அதன் அவல நிலையில் எதிர்க்கும் மக்களின் அடக்கும் பரங்கியரின் ஆளுமை நம்முள் களத்தின் கொடுமையை முன்னிறுத்துகிறது.
இந்நாவலின் சிறப்பம்சமாக இருப்பது நாவலின் களம் நான்கு குடும்ப கதைகளால் கட்டமைக்கப்படுகிறது, இக்களத்தின் கதாபாத்திரங்களாக அப்துல் கரீம் அவரது மனைவிகள் ரஹ்மானியா, வகீதா, சுரையா,வேலையாளும் மனைவிகளின் நண்பனுமாக சந்தீபாவும் காட்ட அடுத்ததாய் பத்ரகிரி அவரது மனைவி விசாலா , அவரது தம்பி திருச்சிற்றம்பலமும் மனைவியாக தையல்நாயகியும் இவர்களது பாதுகாவலராக நங்கை சித்தியும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக சற்குணமும் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். அடுத்த பாத்திரம் கிருஷ்ணப்ப கரையாளரும், அவரின் திடீர் காதலியான எலிசபெத்தும் இருக்கும் நேரத்தில் பண்டாரமுமாய் சதாசிவமும் நாயும் அவர் சந்திக்கும் பாத்திரங்களுமாய் எவ்வித தொடர்புமில்லாமல் தொடங்கும் நாவல் எப்போதும் ஏற்படும் எல்லாருக்குமான இயற்கை உணர்வான காமத்திலும் அதனை உபயோகப்படுத்தும் யாமத்திலும் பாத்திரங்களை சித்திரங்களாக ஒன்றுபடுத்தி வடிவமைத்திருக்கிறார் (பண்டாரத்தைத் தவிர). இதைத்தவிர மேற்கத்திய கதாபாத்திரங்களாக பிரான்சிஸ் டேயும் அவரது மனைவியாக கிளாரிந்தாவும் அறிமுகப்படுத்தப்பட அதன் தொடர்ச்சியில் லாம்டனும் , டோபீங்கும் மதராப்பட்டிணத்தின் நிலவரைவியலை கொடுக்கும் பாத்திரங்களாகி விடுகிறார்கள்.
ஒவ்வொரு கதைகளும் தனக்கென்றப் பாதையில் தனித்தன்மையோடு நகர்வாதாய் அமைத்திருப்பதில் எழுத்தாளனின் ஆளுமை அழகியலாய் வெளிப்பட வைக்கிறது. இது வரலாற்று நிகழ்வியல்களோடு அமைக்கப்பட்ட புனைவுக்கதை. மதராப்பட்டினத்தின் தோற்றமும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் நாவலின் பெரும்பகுதி ஆக்கிரமித்திருக்கிறது.
மதராப்பட்டிணத்தின் நிலவரைவியலில் லாம்டனோடு பங்கு பெரும் பத்ரகிரியோடு நகரும் நேரத்தில், கதைக்களம் திருச்சிற்றம்பலத்தின் மூலம் லண்டன் நகரத்தின் அழகியலையும் அங்கு அவர் மேற்கொள்ளும் கணித ஆய்வுக்களும் அதற்காய் அவருக்குக் கிடைக்க அங்கீகாரமும் நமக்கும் நமது கணித மேதையை நினைவுப்படுத்தலாம். அக்காலத்தின் சூழல்களில் ஆட்டிப்படைத்தும் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தையும் அதே நேரத்தில் அங்கு வறுமையில் வாடும் சமூகத்தின் இன்னல்களையும் அவர்களின் சந்திக்கும் கொடுமைகளையும் நிழலோவியமாக்கி மேலை நாடுகளின் ஆதிக்க மனோபாவத்தை தோலுறித்திருக்கிறார்.
திருச்சிற்றம்பலம் மூலம் அதிகாரவர்க்கத்தின் ஆளுமையைக் காட்டும் நேரத்தில் அவனுடைய நண்பனாகவும் தொடக்கத்தில் சம்போகத்தில் லண்டன் மாநகரத்தில் தொடங்கும் வாழ்க்கையை அவன் போக்கில் இயல்பாய் ஏற்படும் மாற்றத்தில் அங்குள்ள ஏழைமக்களுக்கான போராளியாக காட்டி அதனுள் சிக்கி மாயப்போகும் கதை நம்முள் தாக்கத்தைக் கொடுக்கலாம்.
இந்தியக் கண்டத்தில் தென்னிந்திய காடுகளின் அழகையும் வர்ணிக்க தவறாத ஆசிரியர் அங்குள்ள மரவீடினூடே அமையப்பெற்ற கதையும் அக்கதையின் பாத்திரங்களாய் வரும் கிருஷ்ணப்ப கரையாளரும் , எலிசபெத்தின் கதையும் அவர்களுக்குள்ளான உறவின் சரடையும் அதிலே பின்னப்பட்டொடுங்குவதும் அழகே.
இக்களம் மனித மனத்தின் சிக்கல்களையும் சூழ்நிலைகளால் ஏற்படும் தடமாற்றத்தையும் அதன் விளைவில் தோன்றும் தடுமாற்ற சிக்கல்களையும் கொண்டு எழுத்தாளர் சிலந்திக் கூடு போல பின்னி அதன் பின்னலைப் போல ஒவ்வொரு கதைகளிலும் தெளிவான விவரணைகளோடு நகர்ந்து அதன் போக்கிலான இறுதியை சந்திக்கிறது.
நாவலின் பலமாய் எழுத்தாளரும் அவருடைய எழுத்துக்கள் அமைகிறது. காலங்களின் தொடர்ச்சி நமக்கு குழப்பத்தைத் தொடுக்கலாம். தனிமனித ஒழுக்கத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி தயாரிக்கப்படும் அத்தரே உள்ளத்தின் பால் கிளர்வைத் தூண்டும் இயல்பாய் இருப்பது போல தனிமனித ஒழுக்கத்தில் நெறிகெடும் போதைய முடிவுகளின் எச்சங்கள் நம்முள் வெறுமையை ஏற்படுத்தலாம் என்ற எனக்குள் தோன்றும் நினைவுகளோடு.....



Sunday 27 March 2016

சிறுகதை: அவள்

அந்தி சாய்ந்த பொழுது வீதிகளில் பரபரப்பு எல்லாரும் வீடு திரும்பி கொண்டிருக்கிறார்கள் வாகனங்களின் சப்தம் இடைவெளிக்காய் ஏங்கி நிற்கிறது. ஒரு பிச்சைக்காரன் கடந்து போகிறான், சாலையோர வியாபாரிகள் சத்தம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரே டீக்கடையில் கூட்டம் , தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருக்கிறது. என் மனம் சிந்திக்கிறது இவர்களிடம் தொலைக்காட்சி பெட்டி இல்லையா? ஏன் இவர்கள் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நடந்து செல்பவர்கள் என்னை முந்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை முந்த முயற்சிக்கவில்லை அறுபத்தி ஐந்து வருடங்கள் அந்த அனுபவத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. மெதுவாய் சாலையில் ஊன்றுகோலோடும் கவனத்தோடும் நடக்கிறேன்.கையில் ஊன்று தடிக்கான காரணம் அறுபதில் உடலில் ஏற்பட்ட கோளாறுக்கான பரிசு அது..
சாலையின் கவனம் என்ற நினைவை மறக்க முடியவில்லை கண்களின் தெளிவு மங்கியே இருக்கிறது. மாலையில் அவ்வளவாய் வெளிவருவதில்லை,காரணம் பாதைகளில் குழிகளே பாதைகளாக மாறிவிட்டது. மற்றொரு கையில் உணவுப் பொட்டலம் என் மனைவிக்கானது என் இரவு உணவை ஒரு தோசையோடு முடித்துவிட்டேன். முப்பது வருடமாய் அவளுக்கும் எனக்கும் பிடித்த உணவகம். வாரத்தில் இரண்டு நாட்களும் எனக்கு முடியாத நாட்களிலும் இந்த உணவகம் தான் எங்கள் தேவையை முடித்துக் கொடுக்கின்றன.. உணவகத்தின் உரிமையாளரோடான பந்தம் இப்போது அவரது மகனோடும் தொடர்கிறது. அந்த உணவகம் அவளுக்குப் பிடித்துப் போனதற்கு அவர்களின் விலையும் உணவின் ருசியும், கனிவும் தான்.. நாட்போக்கில் அவர்களின் உணவிற்கு எங்களுக்கு மட்டுமல்ல எனது குழந்தையும் அடிமை ஆகிப் போனோர்கள்..
நினைவலையில் அது மகிழ்வான தருணம் தான், சப்தம் குறையவில்லை தெற்கில் மின்னலின் தாக்கம் அதிகமாய் தெரிகிறது.. குடை மறந்து விட்டது உள்மனதிலிருந்து வெளிப்பட்டது. மறதி அந்த வயதிற்கானதே என ஞாபகப்படுத்த இயற்கை நிகழ்வுகள் தோழனாய் இருப்பதில்லை போல. காற்றின் வேகம் அகிகமாய் ஈரப்பதத்துடன் இருக்க மெலிதாய் மழை சாரலைத் துவக்க வழிப்பாதையிலிருந்து ஒதுங்க இடம் தேடினேன். நல்ல வேளை நண்பனின் புத்தகக் கடைக்கருகில் தானிருந்தேன் மெதுவாய் அந்த புத்தகக் கடைக்குள் நுழைய நண்பர் மட்டும் புத்தகத்தை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கிறார். வேறு யாருமில்லை கடையில் என்ன ஆச்சர்யம் எல்லா கடைகளும் மனிதறிவை மழுக்கி அவன் பணத்தை சூறையாடும் காலத்தில் அவன் அறிவை வாசிக்கவும் நேசிக்கவுமான இடத்தில் ஆளரவமில்லை என்பது வருத்தம் தான். எனது ஊன்றுகோலின் சப்தம் தெளிவாய் கேட்க படித்துக் கொண்டிருந்த நண்பர் புத்தகத்தை கீழே வைத்து புன்முறுவலாய் நீயும் மழைக்காய் ஒதுங்கினாயா ? என்ற அவனுக்குரிய தொனியில் கேட்டான். இனிமையான நண்பனான அவனுக்கு கிண்டல் செய்வது பிடிக்கும் எனக்கும் அவனை என்னை கிண்டல் செய்வதால் பிடிக்கும்..  மனம் அவனிடம் பேச விருப்பமில்லை, கையில் உணவுப்பொட்டலம் ஆறிக்கொண்டிருக்கிறது. அவளும் பசியோடு காத்திருப்பாள். இந்த மழைக்கும் அறிவில்லை கொஞ்சம் நேரம் கழித்து வந்தாலென்ன இல்லை எனது தவறுதான் ஏனோ இன்று பாதையில் அதிக வாகனங்கள் என்றபோது நாளை முதல் ஐந்து நாட்களுக்கான விடுமுறை என்பதை எனது நூலக நண்பனின் வாயிலாக அறிந்து கொள்ள மக்களும் நியாயமாகத் தான் வேகத்தை தொடர்கிறார்கள் எத்தனை பேர் இன்று தனிமையில் தவிக்கும் பெற்றோர்களையோ, தன் குடும்பத்தையோ, பள்ளி விடுதியில் இடைப்பட்ட சிறார்களைப் பார்க்கவோ செல்லக்கூடும். இதுப்போன்ற விடுமுறைகள் இன்று கூட்டுபந்தத்தின் மகிழ்வை கொடுக்கிறது என நினைத்திருக்கும் போதே, நண்பன் மழை நின்றது எனச் சொல்லி நினைவை கலைக்க நானும் காலை வருகிறேன் என்று சொல்லி விடைப் பெற்று வெளியே வர என்ன இது? நதிகளான  சாலை இப்படி புதிர் போட்டு வைத்திருக்கிறதே என்றெண்ணிய நேரம் அவளின் நிலை என் முன்னே ஒருக்கணம் மின்னி மறைய மெல்ல போய்விடலாம் என்ற நம்பிக்கை சாரலாய் துளிர் விட்டது. 
சாலையில் இறங்கிய போது காலில் பட்ட கழிவுநீரோ மழைநீரோ எதுவாயினும் அதன் சிலிர்ப்பு உடலெங்கும் பரவ மெதுவாய் நீர் வடிந்த சாலையை நோக்கி நடந்து கொண்டிரு்கிறேன். வாகனங்கள் குறைவதாயில்லை எனக்கும் சாலையை கடக்கும் நிலையில் திரும்பி கடக்கலாமா என்ற போது மெதுவாய் யுத்தமொன்று அரங்கேறியது அது கடப்பதற்கான நம்பிக்கைக்கும் வேண்டாமென்ற அவநம்பிக்கைக்குமாக இருக்க சாலையின் வலதுபுறம் பார்க்கிறேன் விளக்கின் ஒளியில் என் கண்கள் அவநம்பிக்கை எனும் இருட்டை நோக்கித் தள்ள கால்கள் நடுங்க இதயதத்தில் சிறிதாய் நடுக்கம் கூடியது அந்த நேரம்  தூரத்தில் ஒலித்த ஆம்புலன்சின் சத்தம் மெதுவாய் அதிகரிக்க அன்று அவள் ஆம்புலன்சில் பயணத்தைத் தொடர அவள் கையைப் பற்றி அமர்ந்திருக்க அது வேகமாய் சென்று கொண்டிருந்தது.
வேலை செய்து கொண்டிருந்தாள் அப்போது நான் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன், டமார் என்ற சப்தம் என்னவோ நடந்துவிட்டதே என எண்ணி வேகமாய் எழ முற்படுகிறேன் முடியவில்லை வயதின் பிரச்சினை இப்போது வரும் பொறுமையை ஏற்றுக்கொள்ள அடம்பிடிக்க தட்டு தடுமாறி எழுந்து விடுவதற்குள் பக்கத்து வீட்டிலிருந்த அவள் என் மனைவிக்கு மிக நெருக்கமாகி விட்டவள் கல்யாணம் முடிந்து பத்து ஆண்டுக்குள்ளே கணவனைப் பறிக்கொடுக்க சொந்த வியாபாரத்தை கவனிப்பவள் இருந்தும் வீட்டில் ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாய் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் அவளைப் பற்றி இருந்தும் இந்த நேரத்தை என் மனைவிக்காய் ஒதுக்கியுள்ளதால் இனியொரு தருணம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் கடக்க எனக்கு முன்பாகவே ஆம்புலன்சிற்கு போன் செய்து கொண்டிருக்கிறாள் மேலும் விலாசத்தையும் சொல்லி கடைசியாக மகளுக்கு உணவுக் கொடுத்திட்டு வருகிறேன் என்று முடித்து சென்ற தருணம் என் கண்களில் மெதுவாய் நீர சுரக்க துவங்கியது.
அவளின் கை என் தோளில் பட வயதின் முதிர்ச்சி உடலை தளர்த்தியதால் கண்ணயர்ந்து விட்டதை எண்ணி வருத்தம் கொள்ள நான்கு பேராக என் மனைவியை தூக்கி ஸ்டெரெச்சரில் வைத்து கொண்டு போக அவள் என் கை பிடித்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்த போது உங்கள் மகனுக்கும் தகவலைக் கொடுத்து விட்டேன் என்று மட்டும் சொல்லி வைத்தாள். நான் பேசவில்லை மெதுவாக கைப்பிடித்து லிப்டின் வழியிறங்கியவுடன் அவர்கள் எங்களுக்காய் காத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் சத்தம் மெல்ல தொடங்கி அதிகமாகி கொண்டிருக்க மனைவியோ சிந்தனையுற்று மயக்கமாயிருப்பதை பார்த்த போது மனது துடிக்க தொடங்கியது,மெதுவாய் அவளது கையை இறுகி பற்றிக் கொண்டேன். அவள் கையில் உஷ்ணமிருந்தது. மெதுவாய் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். அவளோடு கேட்டு விடலாமா என்ற நினைத்தப் போது அவளே உங்கள் பிள்ளை வேலைப் பளு அதிகமாக இருக்கிறதாம் அதனால் உடன் வர இயலாது எனச் சொல்லி விட்டார்கள், நல்ல மருத்துவமனையில் அனுமதிக்கவும், பணம் தேவையிருந்தால் அழைக்கவும் சொல்லி இருந்தான் என்ற போது இவர்கள் எனது பிள்ளை தானா என்ற சந்தேகம் எழும் போதே வண்டி மருத்துவமனை வளாகத்தினுள் கடந்திருந்திருந்தது.
மருத்துவமனை செவிலிகள் எறும்பாய் வேலைச் செய்கிறார்கள். வேகமாய் ஸ்டெரெச்சர் எங்களை கடந்துச் சென்றிருந்தது. எங்கள் இருவரையும் அவசரச்சிகிச்சைப்பிரிவின் முன் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். ஐந்து நிமிடத்தில் டாக்டர் எங்களைக் கடந்து சென்ற போது அருகிலுள்ள கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டுவிட்டது. எங்களால் இயன்றதை செய்தோம் முடியவில்லை என்பது மட்டும் தான் காதில் விழுந்தது.
அந்த கூட்டம் அலறத் தொடங்கியது. எனது இதயத்துடிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்க என்னை விட அவள் இன்னும் பரப்பரப்பாகவே இருந்தாள் நான் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டேன். அவள் அமரவில்லை. நடந்து கொண்டேயிருந்தாள். மீண்டும் அவளது கைப்பேசி அழைத்தது. அவளெடுத்து டாக்டர் வெளிவரவில்லை வந்தாள் தெரியும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு மொபைலை என்னிடம் தந்து உங்கள் மகன் தான் எனச்சொல்ல வேண்டாம் பிறகு பேசிக்கொள்கிறேன் துண்டித்து விடு என்று சொல்லிவிட்டேன். அவள் துண்டிக்காமல் கடந்து சென்று ஒரு நிமிடம் பேசிக்கொண்டிருந்தாள், பேசுவது காதில் கேட்கவில்லை. எனக்கும் அதில் ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை. மெதுவாக என்னருகில் வந்து நின்ற போது அறைக்கதவு திறக்கும் சத்தம்.
என் மனைவியைப் பரிசோதித்த மருத்துவர் மெல்ல தலைப்பட என் இதயம் துடிப்பது எனக்கு வெளியே கேட்கப்போகிறோதோ என்ற எண்ணத்துடன் நோக்கிக் கொண்டிருந்தேன். அவர் நடந்து வருவது மெதுவாக இருப்பதுப் போலத் தோன்ற என்னுள் எழுந்த கோபம் சொல்ல முடியாததாய் இருந்தது. இத்தனை அக்கறை இல்லாதவர் போலத் தோன்றுகிறாரே என்ற நினைக்கும் போது அவள் வேகமாக நடக்கத்தொடங்கியிருந்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன ஆகிவிட்டது என்ற போது மருத்துவர் கடந்து போய்க் கொண்டிருந்தார்.
நானும் தடுமாறி எழுந்துவிட்டேன் அவளை நோக்கி நடக்க அவள் கண்களில் நீர்த் துளி வழிய ஆபத்தில்லை , நல்ல நேரத்தில் கொண்டுவந்தீர்கள் அதனால் அபாயமில்லை என்ற போது எனது இருக் கைகளும் அறியாமல் கைக்கூப்பத்தொடங்க ஆம்புலன்ஸ் சத்தம் கடந்து போயிருந்தது.
வாகனங்கள் குறைவதாகத் தோன்றவில்லை கடக்க முடியவில்லை. பின்னாலிருந்து ஒரு கை என் கையைப் பிடிக்க நான் திரும்பிப் பார்க்கிறேன். சிரித்துக் கொண்டே அப்பா என்ன சாலை கடக்க முடியவில்லையா எனக் கேட்க நானும் வெகு நேரமாக நிற்கிறேன், இன்று என்னவோ சாலை அதிக களேபரமாக இருக்கிறதே என்ற போது நூலக நண்பன் சொன்ன விசயத்தையே சொல்லத் தொடங்க என்ன அம்மாவுக்கு உணவுப் பொட்டலமா ? என்று கைப்பிடித்த போது புதிய தெம்பு வந்து இளைஞனாய் என்னை உணரத்தொடங்கினேன். மெதுவாய் என்பின்னால் எல்லா வாகனங்களும் சென்று கொண்டிருக்க லாவகமாய் என்னைக் கடத்தி விட்டிருந்தான் அந்தப் பையன். அவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அவன என் மகனோடு படித்தவன் வீட்டிற்கு அடுத்த தெருவிலிருக்கிறான். படிப்பைப் பாதியில் நிறுத்தி அப்பாவின் ஒர்க்சாப்பை நடத்திக் கொண்டிருக்கிறான். மெல்ல வீடு வரை வந்து விடட்டுமா எனக் கேட்க வேண்டாம் எனச் சொல்லி உதவியதற்கு நன்றி சொன்ன போது அவன் சிரித்துக் கொண்டே உங்கள் பிள்ளை அடுத்த வாரம் வருகிறான் போல எனக் கேட்டப் போது ஆமா என்று சொல்லிய போது என் மனதில் சலனமில்லை.
ஆறுமாதம் கடந்திருந்தது. அவள் தேறி விட்டாள் உதவிக்காய் ஒரு ஆளை வைத்திருப்பதால் இப்போது சிறிது பயமில்லை. உணவு சமைக்கவும் அவள் ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தாள். ஆனால் என்னவோ அவளின் பக்குவம் அவளுக்கும் எனக்கும் சேரவில்லை அதனால் நானே சமைத்துக் கொண்டிருந்தேன். என் பிள்ளை வருவான் என எதிர்பார்த்த போது வேலைப்பளு முடியவில்லை. கூடிய சீக்கிரம் வந்து விடுகிறேன் என்ற பதில் வந்தது. இரண்டு நாளைக்கொரு தடவை போன் செய்வான், எனக்கோ அவனிடம் பேசுவதில் ஆர்வமில்லை அவள் பேசிக்கொண்டிருப்பாள். நானும் எதிர்ப்பதில்லை.
மெல்ல வீடு வந்து சேர்ந்த போது அவள் படுக்கையிலிருந்தே பதறிக் கொண்டிருந்தாள். என்ன குடை மறந்தாச்சா எனக் கேட்க  நானும் பதிலுக்கு ம் மட்டும் சொல்லி மெதுவாக சமையலைறையில் நுழைந்து அந்த தோசையை எடுத்து தட்டில் வைத்தேன் ஆறிவிட்டிருந்தது. சிறிது கஷ்டமும் கோபமுமாக மழையை சபித்து மெல்ல நடந்து அவள் கையில் கொடுத்தேன். மெதுவாய் உண்ணத்தொடங்கிய போது உணவு விடுதியில் பையன் நல்லா இருக்கிறானா என்று கேட்டுக் கொண்டே தோசை நல்லாயிருக்கு என்ற போது மனம் லேசாகத் தொடங்கியது. நாளைப்பையன் வருகிறானே. நான் சொல்லியிருக்கேன் இங்கேயே வந்து விட என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நான் கேட்டுக்கொள்ளமால் மெல்ல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாய் உணவை முடிக்க கதவு தட்டப்படும் சத்தம். அவள் வந்திருப்பாள் போய் கதவைத் திறந்து விடுங்க எனச் சொல்ல மெதுவாய் அவள் கையிலிருந்த தட்டை வாங்கி சமையலறைத் தொட்டியில் வைத்து விட்டு கதவைத் திறந்தேன்.
கதவைத் திறந்தவுடன் கொஞ்சம் பதட்டமாகவே மன்னிக்கவும் மழை வந்ததால் நேரமாகி விட்டது என்று சொல்ல பரவாயில்லமா பையன் நல்லாப்படிக்கிறானா என்று கேட்டுக் கொண்டே வழி விட அவளிடம் நல்லாப் படிக்கிறான் ஏதோ கம்பெனிலா ஆளு எடுத்திருக்காங்களாம் அடுத்த வருடம் முடித்தவுடன் வேலையாம் என்று சொல்லிக் கொண்டே மனைவியின் அறையினுள் நுழைந்தாள். காதில் மாத்திரை சாப்பிட்டாச்சா என்ற சப்தம் கேட்க நானும் இன்றைய நாளிதழின் கடைசி பக்கத்தை படிக்கத் தொடங்கியிருந்தேன். கொஞ்சம் நேரத்தில் அவர்கள் அறையில் விளக்கு அணைக்கப்பட்டது. நானும் மெல்ல எழுந்து எனதறைக்கு சென்று படுத்துக் கொண்டேன்.
அதிகாலை காலிங்பெல் சத்தம் உறக்கத்தைக் கலைத்திருந்தது. மெதுவாக எழுந்து கதவைத் திறக்க பையனும் மருமகளும் தோளில் பேரக்குழந்தை உறங்கியிருந்தான். யாத்திரை சுகமாயிருந்ததா என்று கேட்க அவனும் ம் என்று சொல்லி கொண்டே உள்நுழைய நானும் இந்த பக்கத்து அறை சுத்தப் படுத்தி வைத்திருக்கேன் என்று சொல்லி அவர்களுக்கு அறையைத் திறந்து விட்டு ஓய்வெடுக்கவும் காலையில் பேசிக்கொள்ளலாம் எனச் சொல்லி விட்டு என் அறையில் நுழைந்து படுத்தேன். நினைவுகளில் ஏதேதோ எண்ணங்கள். உறக்கம் என்னைப் பீடிக்கதொடங்கியிருந்தது.
காலை விடிந்திருந்தது. குருவிகள் சப்தம் அருகில் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டினுள் குழந்தை அடம்பிடிக்கும் சப்தம். குளித்திருந்தேன், வெளியிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்த போது தாத்தா என ஓடி கொண்டு வந்தது எனது மனைவியின் தோழியுடைய குழந்தை. அவளைப்பிடித்து அடம் பிடிக்கக்கூடாது அம்மா சொல்லறதைக் கேட்கவும் எனச் சொல்லி நானும் கொஞ்சம் வெளியே நடந்திட்டு வரேம்மா என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினேன். மைதானத்தை கடந்து போன போது தெருவோரத்தில் நாய் குரைத்துக்கொண்டிருந்தது. அதைத் தாண்டி கடந்த போது மயானத்தில் புகை அடங்கியிருந்தது. மூன்று பேர் நின்று சாம்பலை சட்டியில் நிரப்பியதைக் கண்டவுடன் மனைவியின் நினைவில் கண்கள் குளமாக மேலே ஒரு விமானம் பறந்துக் கொண்டிருந்தது.......



Monday 21 March 2016

ஓநாய் குலச்சின்னம்- புத்தக விமர்சனம்

இந்த பூமியில் மேம்பட்ட சமூகமாக இருப்பது மனித இனமே. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னே அவன் பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி இயற்கையை எதிர்த்து தனக்கென்று தனியொரு ஆளுமையை வளர்த்து இந்த பூமியின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் அவனே இந்த பூமியை அழிக்கும் பேரழிவு சக்தியாக உருவெடுத்திருப்பதை நாம் அறிந்தே இருப்போம்.
இயற்கை எதிர்த்து என்ற வார்த்தை உபயோகமே இயற்கையை மனிதனுக்கு நேசிக்கத்தெரியவில்லை என்பதற்காகவே. மனிதனின் பண்பட்ட மூளையின் மூலம் இயற்கையை தனதாக்கிக் கொள்ளவே இந்த மனித இனம் முயற்சி செய்யும் இந்த வேளையில் உலகிலுள்ள அத்துனை உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் அதனோடு கட்டுப்பட்டே வாழ்கின்றது.
மனிதனின் அபரிமிதமான வளர்ச்சி இந்த பண்பட்ட படித்த மனிதனை இந்த இயற்கையிலிருந்து பல மைல் தூரத்திற்கு அகற்றிக் கொண்டே போய்விட்டது. இன்று பூமிக்கும் நமக்குமான பந்ததிற்குமிடையேக் கூட ஒரு ஜோடி பாத அணிகள் நம்மைப் பிரித்தே வைக்கிறது. உண்மையிலேயே இயற்கையானது ஒரு தொடர் சங்கிலிக்குள் பிணைத்தே வைத்திருக்கும் போது மனிதன் எப்படி இந்த சங்கிலித் தொடரை உடைந்தெறிந்து தனதாக்கி கொண்டதன் மூலம் அத்தனை உயிர் வாழ் ஜீவனங்களுக்கும் பூலோக எமனாகவே காட்சிக் கொடுக்கிறோம்.
அறிவியலை வளர்தெடுத்திருக்கிறோம் அதன் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கும் அத்துனைப் பொருட்களையும் நமக்கு தேவையான பொருட்களாய் மாற்றிக் கொண்டே போகிறோம். அப்படி மாற்றும் பொருட்களையும் , அது மாற்றும் போது ஏற்படும் சக்தி மிகுந்த கழிவுகளையும் உட்கிரகிக்க மறுக்கும் இந்த பூமி நமக்கு கொடுக்கும் இன்னல்கள் கணக்கிலடங்காதவையே. எனினும் அதனை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் நாம் அதை மாற்ற அறிவுப்பூர்வமாய் சிந்திக்கவே மறுக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நாவலை வாசிக்கத் தொடங்கும் முன்னே அதன் பெயர்(ஓநாய் குலச்சின்னம்) எனைச் சற்றே தடுமாற வைத்தது. அதன் உள்ளிருப்பைத் தெரியாமலையே அதனை பல மாதங்கள் எனது அலமாரியில் தூங்க வைத்தேன் என்றே சொல்லலாம். ஆம் என் மனதிலிருந்த ஓநாய்கள் மிகவும் கொடுரமானவை , தந்திரமானவை , அதன் ஊளைகளை நாய்களிடமிருந்து கேட்கும் போது மனதிற்குள் ஏற்படும் சொல்ல முடியாத பயம் ஆகியவையே.
இந்த நாவல் இயற்கைக்கும் (டெஞ்ஞர்) , மனிதனுக்கும் , மேய்ச்சல் புல்வெளிகளுக்கும், ஓநாய்களுக்கும், மேய்ச்சல் நில ஜீவராசிகளான முயல், எலி , மர்மோட் , மான், நரி , குதிரை, ஆடுகள் ,நாய்கள் போன்ற உயிர்களுக்கும் இடையே இணைக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் கதையே. ஒவ்வொரு புத்தகத்திலும் நாம் தேட நினைக்கும் அல்லது நம் மனதிற்கெட்டாத பல விசயங்கள் உள்ளடக்கியே இருக்கும். அதனை நாம் படிக்கும் போது நம் மனதில் உண்டாகும் மனக்கிளர்ச்சியை ”சொல்வதால்”காட்டமுடியாதென்றே சொல்லலாம். நிச்சயமாக இந்நாவலின் மூலம் ஓநாய்களைப் பற்றியான மிகப்பெரியதொரு தாக்கம் வாசகர்களுக்கிடையே ஏற்படலாம் என்றே நம்புகிறேன்.
நாவலின் களம் சீனப்பகுதியான உள்மங்கோலியாவின் ஓலோன் புலாக் எனும் மேய்ச்சல் நிலப்பகுதியே. நாவலின் காலக்கட்டம் கடந்த நூற்றாண்டுகளின் இறுதியில் தொடங்குகிறது. சீனாவில் ஏற்படும் கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கிருக்கும் சில மாணவர்கள் உள்மங்கோலிய நாடோடிகளின் வாழ்வியலைப் பற்றி அறிவதற்கான அனுப்பப்படுகின்றனர். அப்படி அனுப்பப்படும் மாணவர்களில் ஹேன் சென் என்ற மாணவரைச் சுற்றியே இந்தக் கதை நகரத்தொடங்கிறது, இந்நூலின் ஆசிரியரும் அவரே. இக்கதையின் காலக்கட்டம் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிகிறது. ஏறக்குறைய முப்பத்தைந்து வருடக் காலம் இந்த நாடோடி மக்களின் மேய்ச்சல் வாழ்க்கை , ஓநாய்களுடனான பந்தம், குதிரை வளர்ப்பு, ஆடுகள் மேய்ப்பு, உணவுத்தேவைக்கான வேட்டை போன்ற அனுபங்களை இந்நாவலின் மூலம் அறியலாம்.
நாடோடி மக்கள் மட்டும் வாழும் உள்மங்கோலியாவின் மேய்ச்சல் பகுதியான ஓலோன்புலாக் புரட்சி காலக்கட்டத்தில் துவங்கி எப்படி மெல்ல மெல்ல ஹேன் சீனர்களிடம் மாறுகிறது என்பதை தெளிவாகவும், படிப்பறிவே இல்லாத மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நேசிக்கும் தருணத்தில் அங்கு வரும் படித்த ஹேன் சீனர்கள் மூலம் எப்படி இந்த இடம் மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் அதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லுகிறது இந்த நாவல்.
சீனாவில் மாவோவின் செவ்வியல் புத்தகத்திற்கு அடுத்தப்படியாக விற்பனையில் சாதனைப்படைத்த நூலாகவே இருக்கிறது.
சரித்திரப் புனைவாக உருவாக்கப்பட்ட இந்நாவலில் மிக முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் பில்ஜியும் அவரது மகன் பட்டு மற்றும் அவரது மகள் கஸ்மாய் , பாயர், உல்ஜி  ஹேன்சென்னும் அவரது நண்பர்களுமே. மனித கதபாத்திரங்களைத் தவிர இதில் ஒரு ஓநாய் குட்டியும், வேட்டை நாய்களான பார், எல்லோ , எர்லாங் கும் கதை முழுதுமே மனித வாழ்வியலோடு இணைந்தே பயணிக்கிறது.
நாவலின் நாயகனாக வரும் ஹேன் சென் நாடோடி மங்கோலியர்களின் தலைவரான பில்ஜியுடன் நட்பு ஏற்படுகிறது. அதன் மூலம் ஓநாய்களை வெறுக்கும் நாயகனிடம் அதன் வாழ்வியல் முறைகளையும் அது எப்படி மேய்ச்சல் நில நாடோடிகளுக்கு உதவுகிறது என்பதையும் அதனால் ஓலோன்புலாக்கின் இயற்கை சமநிலை மட்டுப்படுத்தலையும் விளக்குகிறார். இதன் மூலம் ஓநாய்களிடம் ஏற்படும் விபரீத ஆசை ஒரு ஓநாயை எடுத்து வளர்க்க வைக்கிறது. இதன் மூலம் ஓநாய் மனிதனிடம் நாயைப் போல இணக்கமாக மாறிவிடுகிறதா அல்லது எதிரான சூழ்நிலையைப் பெறுகிறதா என்பதையொட்டி நகருகிறது கதை.
அழகான மேய்ச்சல் நிலத்தையும் அதன் பருவங்களையும் ஒவ்வொன்றையும் அழகாக விவரித்துக் கொண்டே செல்லும் நேரம் அங்கு ஓநாய்கள் தங்கள் துல்லியமான திட்டமிட்ட தாக்குதல்களால்  எப்படி தங்கள் உணவுத்தேவையைப் போக்கி கொள்வதையும் மாறுபடும் பருவச்சுழ்நிலைக்கேற்ப எப்படி தன் உணவாதாரங்களையும் சேமித்து வைக்கிறது என்பதையெல்லாம் விவரிக்கிறது.
ஓநாய்களின் தாக்குதல்களை விவரித்து நம் மனதை குலை நடுங்கச்செய்யும் நேரம் மேய்ச்சல் நில நாடோடிகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விவசாய நிலமாய் மாறும் சமயம் புதிய ஆயுதங்களும் அதனைச் சேர்ந்த ஆட்களும் அந்த ஓநாய்களைக் கொல்லுவது மனதை பிழிகிறது.
நாடோடிகளின் மேய்ச்சல் நிலங்கள் மெதுவாய் அந்நியர்களின் ஆக்ரமிப்பில் செல்லும் போது அதனை பார்த்துத் துடிக்கும் நாடோடிகளின் கடைசி தலைவன் பில்ஜியின் சோகமான மனவோட்டத்தை கடைசி நாடோடி மேய்ப்பனின் துயரங்களாக விவரிக்கிறார்.
சுதந்திரம் ,சுயநிர்ணயம் , கௌரவம் இவையெல்லாம் மனிதனின் இயல்புகளாய் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவைகளைனைத்தும் ஓநாய்களுக்கும் உண்டு என்றும் அவை எந்த காரணத்திற்காகவும் நாயைப்போலவோ, குதிரைகளைப்போலவோ மனிதனின் ஆதிக்கத்தினுள் வரும் விலங்குகளைப் போலல்லாமல் தனித்திறனும் குணமும் பெற்றது என்று தெளிவுப் படுத்துகிறார்.
”ஒரு நாயைப்போல் பின் தொடர்ந்து செல்வதை விடவும் முரண்படுவதால் ஏற்படும் வலிகளையும் சங்கடங்களையும் தாங்கி கொள்ள வளர்ப்பு ஓநாய் தயராக இருந்தது” என்பதின் மூலம் ஓநாயின் சுயநிர்ணயத்தையும் , கவுரவத்தையும் விளக்கி நெகிழவைக்கிறார்.
ஓநாய்களின் குணநலன்களையும் அதன் வாழ்வியல் முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள விருப்பமிருப்பவர்களும் இயற்கை ஆர்வலர்களுக்குமான இந்த நாவல் மிகப்பெரியத் துணையே.
சீனர்களின் எண்ணத்தில் எப்படி நாடோடி மக்களின் வாழ்வியலை ஒடுக்குகிறார்கள் என்று சொல்லும் முன்னே  அவர்களின் வாழ்வியலையும் அவர்களின் உணவு பழக்கத்தில் நாயை உணவாக்குவதற்கான காரணத்தைச் சொல்லி சீன மக்களின் அறியாமையை பகடி செய்தும் , அவர்களின் கலாச்சாரப் புரட்சியை மறைமுகமாகவே எதிர்த்துமிருக்கிறார் ஆசிரியர்.
தேவையான பிறருக்கான உதவிகள் இங்கு பகுத்தறிவு கொண்ட வளமிக்க மனிதனால் மறுக்கப்பட்டுக்கொண்டே தானிருக்கிறது. இது நம்நாட்டிற்கு எப்படி பொருந்துகிறதோ அதே போல சமுதாயத்தில் வளமையடைந்த சீனர்களின் சுய நலம் குறித்து நாடோடி மக்களின் எண்ணத்தில் ஆடுகளாகவே சித்தரிக்கப்படுகிறது. அது ஒரு ஆட்டு மந்தையில் ஓநாய் நுழைந்து  ஒரு ஆட்டை வேட்டையாடி குத்தி கிழித்துண்ணும் போது மற்ற ஆடுகளின் எண்ணம் பற்றி..
“ நல்ல வேளை ஓநாய் உன்னைத் தின்னுகிறது என்னை இல்லை, நீ செத்துவிட்டாய் அதனால் நான் பிழைத்திருக்கிறேன் என்பது போல அதன் பாவனைகள் இருக்கிறது”
மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் கோடைக்காலத்தைப்பற்றி கேள்வி பட்டபோது எனக்கேற்பட்ட பிரமிப்பும் அச்சமும் அளவிட முடியாது காரணம் அங்கு கோடைநாட்களென்பது அதிகாலை மூன்று மணியில் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை வெளிச்சம் நீண்டிருக்கும்.
நாவல் மேய்ச்சல் நில வாழ்வியல் பரிணாமங்களை ,வாழ்வியல் நிலங்களை , அவர்களின் நம்பிக்கைகளை அழகாய் எடுத்துக்காட்டுகிறது. நாவலிற்கான பலமாய் அதன் மொழிப்பெயர்ப்பு அமைகிறது. நாவல் எதையும் வைத்து குழப்பாமல் நேர்கோட்டிலேயே செல்லுகிறது. இயற்கை உணவு சங்கிலியைப்பற்றி அழுத்தமாக எடுத்துரைக்கும் நேரத்தில் அதன் விளைவுகளை முடிவில் காட்டும் போது நாவலின் முன்பக்க நாட்களின் நினைவுகள் நிழலாய் ஆடிக்கொண்டு இயற்கைப் பற்றிய மிகப்பெரிய தூண்டுதலைக் கொடுக்குமென நம்பலாம்.
இந்நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங் அவர் சீனாவின் ஜியாங்குவில் 1946 ம் ஆண்டு பிறந்த இவர் கலாச்சாரப்புரட்சியின் காரணம் 1967 களின் சீனாவின் ஆட்சியிலிருக்கும் உள்மங்கோலியாவிற்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்கு 11 ஆண்டு காலம் தங்கி இருந்து அம்மக்களின் வாழ்வியலை அறியும் அவர் அதன் பிறகு சீனாவிற்கு சென்று தன் படிப்பை தொடர்ந்து கல்வித் துறையாளராக பணியாற்றி 2006 ல் ஓய்வுப் பெறுகிறார். இந்நாவலை 1999 ல் தொடங்கி 2003 ல் முடித்திருக்கிறார். இந்நாவல் சீனமொழியிலிருந்து ஆங்கிலத்தில் ”Wolf Totem" என்ற பெயரில் கோல்ட்ப்ளாட்டும் தமிழில் சி,மோகன் அவர்களும் மொழிப்பெயர்த்துள்ளனர். இந்நூலை அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது..

Friday 11 March 2016

பட்ட விரட்டி - காலித் ஹொசைனி தமிழில் எம்.யூசுப் ராஜா

இது ஒரு பக்குவப்படாத சுயசார்பு எண்ணம் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்வில் பிறப்பின் முதலே தன்னுடன் இருக்கும் ஒரு ஏழை நட்பில் ஏற்படுத்தும் துரோகத்திற்கும் அதை மறைத்து தப்பித்துக் கொள்ள நினைத்து அதன் மூலம் ஏற்படும் குற்றவுணர்வின் மேலெழுச்சியால் பிராயச்சித்தம் தேடவுமான போராட்டமே பட்டவிரட்டியின் முக்கிய கதைக்களம்.
2003 ல் "The kite Runner" என்ற பெயரில் வந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். நாவலின் ஆசிரியர் காலித் ஹொசைனி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆப்கானில் பிறந்து பின்னர் தந்தையின் பணி காரணமாக ஈரானிலும் பிரான்சிலும் வளர்ந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.  இந்த நூலை தமிழில் பட்ட விரட்டி எனும் பெயரில் எம்.யூசுப் ராஜா மொழிப் பெயர்த்துள்ளார். 2012 ல் எதிர் வெளியீட்டின் மூலம் முதல் பதிப்பாய் வெளிவந்துள்ளது. நாவலின் மொழிப் பெயர்ப்பை மிக அழகாய் செய்துள்ளார் என்றே நம்புகிறேன் காரணம் வாசிப்பின் போது எந்த இடத்திலும் மொழிப் பிரச்சினையின் குறுக்கீடில்லாமல் மனதின் அடி ஆழத்தில் சலனத்தைக் கொடுத்து நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது.
நாவலின் களம் ஆப்கானிலும் , அமெரிக்காவிலும் , சிறிதளவு பாகிஸ்தானிலுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது இருவருக்குமான நட்பையும், தந்தை மகனின் உறவையும், ஆப்கானின் அரசியல் மாற்றத்தையும் வலைப்பின்னலாகக் கொண்டு நகருகிறது. நாவலின் தொடக்கத்தில் அமீர், ஹசன், அமீரின் அப்பா, ரஹீம் கான், அலி, சனேபருடன் ஆப்கானின் வாசிம் அக்பர் கான் பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாவலின் வரும் அமீர் கதைச் சொல்லியாக கதை முழுதையையும் சொல்லி முடிக்கிறார்.
உலகிலேயே மிகவும் விசமான ஆயுதம் பொறாமையே அது எல்லோரிடத்திலும் புதையுண்டு உறங்கி கொண்டிருக்கும். அதை தட்டி எழுப்புவது. ஆழ்ந்த தூக்கத்தில் விட்டுவிடுவதும் மனிதனின் பக்குவமும் பகுத்தறிவதுமே. அது இல்லாது போகும் பட்சத்திலும் மனம் பிறழ்ந்து சூழலில் வளரத்தொடங்கினால் ஏற்படும் விளைவுகள் கடலலைப் போல ஓயாமல் மனதை ஆட்டி படைப்பதும் ஒரு நேரத்தில் எரிமலைப் போல வெடித்து சிதறி ஒட்டுமொத்த சூழ்நிலைகளேயே சிதைத்து விடுகிறது.
சிதைக்கப்பட்ட குடும்பமாகவே கதையில் அலியின் குடும்பம் வலம் வருகிறது. அதன் முதல் பலியாடாக அலியும் அதன் பின் ஹசனும் , அவனது மனைவியும் கடைசியாக ஹசனின் மகன் ஷொஹ்ராப்பும் அடையாளம். அதற்கு காரணம் அவர்கள் பிறந்த ஹசாரா இனச்சூழலே. ஆப்கானின் ஆளும் வர்க்கமாகவும் , உயர்ந்த குடும்பத்தினருமாக பஸ்டூன் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். இந்த பஸ்டூன் இனத்தவர்கள் ஹசரா இனத்தவர்களை ஆளுமை செய்யும் போது மனித எண்ணத்தின் ஓட்டத்தில கற்பனைக்கெட்டாத விதத்தில் தலிபான்களால் இன்னலுக்குள்ளாக்கப்படுகின்றனர். ஒட்டு மொத்த ஹசாராக்களையும் அவர்கள் குவியல் குவியலாக கொன்று குவிப்பதாக சொல்லுகிறார்.
ஆளுமை இனமான பஸ்டூன் இனவெறியனிலிருந்து ஹசரா இனத்தைப்பற்றி
“ நீ ஒரு அசிங்கமான வளர்ப்புப் பிராணி போலத்தான், முதலாளி சலிப்படையும் போது விளையாடவும் . கோபமாக இருக்கையில் உதைக்கவுமான பிராணிதான் நீ . அதைவிட மேலாக எண்ணி உன்னை நீ ஏமாற்றி கொள்ளாதே”
ஆப்கான் வீதிகள் இரத்தக் குவியலுக்குள் குளிப்பதற்கு முதற்புள்ளி ரஷ்யர்களாலே துவங்கி வைக்கப்படுகிறது. ஆப்கானின் முடியாட்சி வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கம்யூனிச அரசும் அதன் பின் ரஷ்யப்படை உள்நுழைவும் பின்னர் ரஷ்ய கைப்பாவை அரசை எதிர்ந்த முஜாகிதீன்களும் என ஆப்கானின் களம் போர்க்களத்திலேயே சிக்கித் தவிக்கிறது.
ரஷ்யர்களை உணர்வு ரீதியாக எதிர்த்ததும் ,தலிபான்கள் ஆட்சி அமைக்கும் போது அதை வீதிகளில் ஆப்கான் மக்கள் கொண்டாடியதும் நினைவாக ஆகும் முன்னரே அவர்களின் மதரீதியான அடக்குமுறை துவங்கியது. மேலும் ஆப்கானில் போரினால் தந்தைமார்களை கிட்டாத ஒரு அபூர்வ பொருளாக்கி இருந்தது எனும் போது நிராதரவாய் விடப்பட்ட அந்நகரத்தின் நிலை வெளிப்படுகிறது,
தலிபான்கள் ஆட்சியில் தகப்பன் இல்லாத பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் பிச்சையெடுக்க வைக்கப்படுவார்கள் எனவும் , உணவுகள் கிடைக்காமல் அனாதை விடுதிகளில் கிடத்தப்படுவார்கள் என்றும், நல்லொழுக்க அமைச்சக சட்டத்தின் மூலம் பெண்கள் உரக்கப் பேசக்கூடாதென்ற சட்டம் அமல்படுத்தப்படுமென்றும், கசல் பாடகர்கள் கொல்லப்படுவார்கள் என்றும், ஹசாரா இனம் வேறறுக்கப்படுமென்றும், விளையாட்டை சத்தமிடமால் பார்க்கவேண்டும் என்றும், அறிந்திருக்கவில்லை. ஏனோ ஆசிரியர் அவர்களுக்குதவிய அமெரிக்காவைப்பற்றிய தகவல்களை தரவில்லை என்பது கொஞ்சம் முரணே.
நாவலை ஆசிரியர் போர்களத்தின் வன்மையால் மட்டும் நிரப்பவில்லை , அதில் தந்தையும் மகனிற்குமான உறவில் நடக்கும் சம்பவங்களை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளார். பிறந்த பிறகு வேலையாளின் குழந்தையான ஹசன் தனது முதல் சொல்லாக அவனது பால்ய கால நண்பனாக அறிமுகமானும் அமீரின் பெயரையே உச்சரிக்கிறான் எனச் சொல்லி நட்பின் ஆழத்தை அதன் மூலம் நமது ஆழ்மனதில் பதியப் போடும் அதே நேரம் அறியாமையால் கதை சொல்லியான அமீர் அவன் நட்பைப் தவறாக பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஓட்டத்தில் எப்படி எரிமலையாய் வெடிக்கிறது என்பதைக் காணலம்.
ஆப்கான் நகர வீதிகளும், காலச்சூழ்நிலையில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும் அழகாய் வருணிக்கிறார் ஆசிரியர். நாவலின் பெயரான பட்டவிரட்டிக்கான கதைக்களம் அருமை. பட்டவிரட்டியில் ஹசனின் சாமர்த்தியத்தை விளக்கும் நேரத்தில் கதை பட்டம் பறக்கவிடும் விழாவிற்கு பிறகு முற்றிலுமான வேறொரு தளத்திற்கு மாற்றப்படும்போது நம் மனதில் அடி ஆழத்தை அசைத்து நமது கண்ணில் நீர் வருமா எனப் பரீட்
சித்துப் பார்த்து விடுகிறார் கதைச் சொல்லி.
களம் ஆப்கானை விட்டு பாகிஸ்தானுக்கும் அதன் பின் அமெரிக்காவிற்கும் நகருகிறது. சொத்துக்களை விட்டு அகதிகளாய் போகும் அமீரும் தந்தையும் நாட்டிலிருந்து தப்பும் போதைய சம்பவங்கள் மெய்சிலிர்க்கவும் மனதை நெருடவும் செய்கிறார். அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் அமீரின் வாழ்வும் அழகிய காதலுமாய் நகர்ந்து ஒரு கதை ஆசிரியனாய் பரிமளிக்கத் தொடங்கும் நேரத்தில் தந்தையின் நண்பன் மூலம் தொலைபேசி செய்தி வருகிறது.
கதை சொல்லியான அமீர் ரஹீம்கானை சந்திக்கிறார். அவர் சொல்லும் ரகசியம் அமீரின் வாழ்வில் ஒட்டு மொத்த எண்ண ஓட்டங்களையும் சிதைக்கிறது. அவரின் அறிவுறுத்தலின் படி ஹசனின் மகனான ஷொஹ்ராப்பை தேடி ஆப்கானிற்குள் நுழையும் அமீர் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களுடன் கதை நகர்ந்து சென்று முடிகிறது.

நூல் : பட்டவிரட்டி
ஆசிரியர் : காலித் ஹுசைனி
தமிழில் : எம்.யூசுப் ராஜா
வெளியீடு : எதிர் வெளியீடு





Tuesday 8 March 2016

நூல் விமர்சனம் : அடர் மௌனம் - சா.சோபனா ....

பெண்ணின் கருவறைக்குள்ளே அடர் மௌனமாய் பத்து திங்களிருந்து வரும் குழந்தையின் அழுகையைப் போலல்லாமல் எரிமலையாய் வெடித்துணர்த்துகிறது தோழர் சோபனா அவர்களின் கவிதை தொகுப்பு.  அடர் மௌனம் என்ற பெயருடன் இந்த கவிதை தொகுப்பு விடியலின் மழை வாசல் தெளிக்க வரிகளின் புன்சிரிப்போடு வரவேற்று தூறல் நினைவுகளாய் காதலை பதியவைத்து தொடங்குகிறார்.
கவிதைகளின் படைப்பென்பது நினைவலைகள் நதியின் ஓட்டத்தில் பயணிக்கும் நேரமே. தடைகளால் நதியின் ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பைப் போலவே சில கவிதைகள் சிலப் பெண்களுக்குள்ளே அலுவலக சுமைகளாலும் வீட்டுச் சூழல்களாலும் வடிவம் பெறாமலே எழுதாத கவிதையாய் ஒடுங்கி விடுவதாய் சொல்லி வாசகர்களைத் தனது கவிதைக்குள்ளே ஈர்க்கத் தொடங்குகிறார்.
இன்றளவும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்ணின் ஆளுமையை சிதைத்து தன்னாளுமையை நிறைவேற்றி தான் தான் எல்லாமே எனச் சொல்லியும் உனக்கு ஒன்றுமே தெரியாது எனச்சொல்லி பெண்மையின் ஆளுமையை சிதைத்து ஒடுக்கும் நேரம் அந்த குடும்பத்தை தவிக்க விட்டு தன்னையொடுக்கும் நிலையில் அந்த ஒன்றுமே தெரியாத தாய் தனியொருவராய் நின்று சாதிக்கும் போது  அம்மாக்களுக்கு ஒன்றுமே தெரியாது தான் என்று பகடியாய் சொல்லி பெண்ணினத்தைத் தூக்கி பிடிக்கிறார்.
வாழ்வியலின் வெற்றியென்பதே  விட்டுக்கொடுத்தலில் தான் என்பதை இரும்புக்கண்ணியும் இற்று விழுமாம் விட்டுக் கொடுத்த கணம் எனச்சொல்லி விட்டுக்கொடுத்தலை அழுந்த பதிக்கும் அதே நேரம் விட்டுக் கொடுத்தலை வாழ்வியலிலிருந்து சற்றே நகர்த்தி சமூக கோப்புக்குள்ளே செலுத்தி அதனை ஆளுமைக்கான தந்திரமாய் வரைமுறைப்படுத்தி இந்த உலகம் மேலே பறக்கும் பறவையோடு ஓப்பிட்டு எல்லா மனிதர்களும் இந்தப் பறவையைப் போலப் பறக்கும் உரிமையுண்டு என ஆளுமையை ஆள வைக்குமிடம் சிலிர்க்க வைக்கிறது, 
அகம் ஒன்று நினைக்க புறமொன்று செய்ய தன்னிலையை நடிப்பினுள் ஆழ்த்துவதும் அலைபேசியை விட அணிகலன் உனக்கு அழகு எனப்பசப்பி இந்த விரிந்த உலகில் அவளை வீட்டிற்குள் சுருக்க நினைப்பதும் , சந்தேகத்தின் சாவியால் யாருமில்லை என நினைத்து அவளின் என்னக் குவியலின் குடிலுக்குள் திருடனாய் புகுந்து  நிதானித்து திறக்கும் மனதை அறிந்து அதை வெளிக்காட்டி தன் துணையை பாவத்திற்குள் அடைக்கிறார் கவிஞர்.
வீட்டிற்குள்ளே அடைப்பட்டிருக்கும் பெண்மையின் விசும்பல்களையும் மகிழ்வுகளையும் வெளிக்கொணர காத்துக் கிடந்து கண்ணில் படும் நேர வெளிப்படுத்தல்களில் பல ஆணாதிக்க எண்ணம் கொண்ட மனிதர்கள் ம் என்ற ஒற்றை வார்த்தையிலே மனத்தை ஒடுக்கி தன்னை ஆளுமை சமூகத்தின் குள்ள நரித்தனமான  மனோபாவத்தை தொலைந்த பொழுதுகளாய் நம்மில் நுழைத்து விடுகிறார்.
நதியின் நியதி கடலில் கலப்பதே வாழ்வின் நியதியும் அதுப்போலத்தான் என்ற ஓப்பீடு அருமை. 
சுயமதிப்பீடு இல்லாத இடத்தில் எந்த பொருளும் தனிநிகர் தன்மையை அடைவதில்லை. கவிஞரும் தனது கவிதைகளை சுயமதிப்பிடுகிறாரோ என்பதை ஆறிப்போன தேநீராய் எனும் போது அவருள்ளினுள் தனிநிகர் தன்மையுள்ள கவிதைகள் தவித்துக் கொண்டிருக்கின்றன என்றே எண்ணத் தோனுகிறது.
அவரது கவிதைகள் சமகாலத்தை ஒட்டியே நடைப் போடுகிறது. காலம் நவீனமாகி , காட்சிகளும் நவினமாகி போன நேரத்தில் மனித சமூகத்தில் உள்ளிருப்புகளில் ஊறி புறையோடி கிடக்கும் சாதி வெறி அதன் போக்கிலேயே வளந்திருப்பதையும் அதன் ஆதிக்கம் அன்பால் ஒன்று சேரும் விளிம்புநிலை மனிதர்களின் உறவுகளைப் பிரிக்க எனச் சொல்லி சாதீயத்தின் தீயப் பக்கத்தை வெளிக்கொணர்ந்த் விதம் அருமை.
சமகாலப் பிரச்சினைகளை மட்டுமே அலசிப் போட்டிருக்கிறது தோழரின் கவிதைகள். மதுவின் தீமைகளையும், அகங்காரத்தையும் , பெண்ணடிமைத் தனத்தையும் , விட்டுக்கொடுத்தலையும் , சந்தேகத்தின் தீமையையும் , சாதீயத்தின் பாதிப்பையும் முதல் முயற்சியிலேயே வெளிக்கொணர்ந்து போரளிய கவிஞர் என்ற முத்திரையைப் பெற்று விட்டார். அவரின் தேடலிலிருந்து சமூக அவலங்களை வெளிக்கொணர்ந்து போராடும் குணத்தை நம் இதயத்திற்குள்ளும் பொறுத்த முயற்சித்திருக்கிறார். இதுப் போன்ற கவிதைகள் நம்முள் நிலைத்து ஒடுங்காமல் இன்றைய இளைய சமூகத்திற்கும் சென்றடையும் நேரம் இத்தொகுப்பினுள்ள அவலங்களைப் போலல்லாமல் மாற்றத்தை கொண்ட சமூகத்தின் ஏற்றத்தை வெளிப்படுத்தும் மகிழ்வு கவிதைகளாக அடுத்த தொகுப்பு வெளிவரட்டும் என்ற நினைவியலோடு அடர் மௌனத்திலிருந்து வெளியேறும் எளிய வாசகனாய்....

நூல் : அடர் மௌனம் கவிதைகள்
ஆசிரியர் : சா. சோபனா

Monday 7 March 2016

தமிழக தேர்தல் களம் ....

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இன்னும் முறையான கூட்டணிகள் அமையாமல் அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளே குழப்பிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பாமரன் இங்கு குழம்பி போயிருக்கும் இந்த சூழ்நிலையில் கட்சி கூட்டணிகளுக்கான குழப்பங்கள் மிகப் பெரிய மாயப்பிம்பத்தை கொண்டே இருக்கின்றன.
இப்போது செயல்படும் அரசு செயல்படாமலேயே தங்கள் சாதனைகளை அள்ளி வீசி இருக்கிறது, அவர்களின் சாதனைகளுக்கு அரசுப் போக்குவரத்தின் பராமரிப்பையும், சாலைகளின் பராமரிப்பையும் வைத்தே  உடனே சொல்லி விடலாம். இதற்கு முந்தைய இருந்த அரசோ தான் செய்த அத்துணை தவறுகளையும் மறந்து தாங்களும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் களம் புகுந்திருக்கிறது, உண்மையைச் சொல்லப்போனால் இந்த இருப் பெரும் திராவிடக் கட்சிகளின் நிலைமையும் இன்று பரிதாபத்துக்குரியதாகவே எண்ணத்தோனுகிறது.
திராவிடக்கட்சிகளின் வீழ்ச்சியின் தொடக்கம் குறிக்கப்படுகிறதா என்ற உறுதிப்பாட்டை நாம் முன் வைக்க முடியுமா என்று சொன்னால் தமிழக மக்களை வைத்து நாம் எதையும் கணித்திட முடியாது. அதே நேரத்தில் கூட்டணிகளின் அமைப்பைப் பொறுத்து ஆளும் கட்சிக்கான சாதக பாதக அம்சங்கள் அமையும் என்றே கருதுகிறேன்.
இந்த தேர்தல் ஊழலாலும் ,வாரிசு அரசியலாலும் பாதிக்கப்பட்டு பொலிவிழந்த கட்டுமரக்கட்சிக்கான பயங்கரமான போட்டிக் களமாகவே இருக்கும் அவ்வளவு எளிதாக அவர்களின் பிரச்சினைகளை மறக்கவியலாத நிலையில் அவர்கள் தங்களுக்கான இடத்திற்காக கடுமையாக போராட வேண்டிவரும்.
அதே நேரத்தில் நால்வர் கூட்டணி தங்கள் திட்டங்களைத் தொடங்கி மிக வேகமாக களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டத்திற்கும் இன்று கூட்டம் சேருகிறது. ஆனால் இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதும் சந்தேகமே. காரணம் அவர்களின் கூட்டணி மேலோட்டமே சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. இவர்கள் கூட்டணி தேர்தலுக்குப் பின் ஒன்றாக செயல்பட முடியுமா என்பதும் கேள்விக் குறியே. காரணம் கொள்கை அளவில் பல முரண்பாடுகளைக் கொண்ட இந்த அணிகள் தேர்தலுக்குப் பின் தன் கூட்டணிகளை மாற்றாமல் இருப்பார்களா என்பதே காலத்தின் பின்னோக்கிய கூட்டணி மாற்றக் கதைகளாய் நம்மிடம் இருக்கிறது,
கடந்த இரு தேர்தல்களிலும் ஒன்றில் தனித்தும் மற்றொன்றில் கூட்டணியுடனும் களம் கண்டு தனக்கென்று ஒரு தனியிடத்தை தக்க வைத்த மற்றுமொரு திராவிட பெயரை கொண்ட கட்சியில் இன்றைய சூழலில் தலைவரின்(கேப்டனின்) பேச்சால் இன்றைய ஓட்டு சதவீதம் எப்படி இருக்கும் எனக் கணித்தால் குறைவானதாக இருக்குமா அல்லது கூடுதலா அல்லது முந்தைய தேர்தலைப் போல தனது இடங்களை தக்க வைக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே, ஆனாலும் அந்த கட்சியை அவ்வளவு எளிதாக இந்த களத்திலிருந்து மாற்றி நிறுத்த முடியாது என்பதை சிலக் கட்சிகள் அவர்களிடம் காட்டும் கரிசனமே இதற்கு கட்டியம் சொல்லும். இவர்களின் கூட்டணியாகவோ அல்லது தனித்தோ நிற்கும் நேரத்தில் ஏற்படும் சாதக பாதக அம்சங்களை ஆளப்போகிற அல்லது எதிராக அமரப்போகிற கட்சிகளில் பிரதிபலிக்கலாம். தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் இன்னும் திடமான முடிவு எடுக்காமலிருப்பது அந்த கட்சியின் தடுமாற்றத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி ஏதோ ஒரு ஆட்சியில் கூட்டணி அமைத்து ஆட்சி பீடத்தில் ஒட்டி கொண்டிருந்த பாட்டாளிகளின் பெயரைக் கொண்ட கட்சி கடந்த முறை தவறான கூட்டணியில் இடம் பிடித்து தன் பலத்தை முழுவதுமாக இழந்த நிலையில் இந்த முறை தனியாக களம் காணுகிறது. இதன் பலம் இன்று அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே. ஆனால் அந்த பலத்தை மிகப்பெரிய சாதீய பிம்பத்தால் மறைத்துக் கொண்டிருப்பது பலவீனமே. எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு தார்மீகக் கொள்கை இருக்கும் பட்சத்தில் அந்த கொள்கைகளை பெயரளவில் கொண்டால் அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாய் தேசிய அளவில் இப்போது ஆளும் கட்சியின் மாநிலக் நிலையின் பலம் என்பது மிகவும் பரிதாப நிலையிலேயே உள்ளது. காரணம் அவர்களின் தலைமையும் தவறான கொள்கைகளும். தலைமைளின் தவறான பேச்சுக்களும், ஆட்சி பீடத்தில் \நடந்தேறிக் கொண்டிருக்கும் ஒவ்வாத சூழல்களும் தான். இவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் கேள்வியில் வைத்துக் கொண்டாலும் ஆளும் கட்சியில் கூட்டணி அமைப்பதற்கான சூழல்களும் காணப்படுகிறது, அதற்கு ஆளும் தலைமையில் இருக்கும் தலைவருக்கு சட்ட சிக்கலுக்காய் அமையலாம்.
அதைத் தவிர அல்லறை சில்லறைக் கட்சிகளெல்லாம் தனியே நிற்பதென்பது அவர்களின் அதீத நம்பிக்கையை மட்டுமே பிரதிபலிக்கும் மேலும் அவர்களின் டெபாசிட் தொகை தேர்தல் ஆணையத்திற்கு நிதியாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
மேலும் இன்று தமிழகத்தின் தேர்தல் களம் இன்று யாருக்குமே அருதிப்பெரும்பான்மையைக் கொடுக்காத களமாகவே காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகள் நம்மைப் போன்ற தமிழக மக்களுக்கு ஒரு போதாத காலமே. நல்லத் தலைமையைப் பார்க்க முடியாத இடத்தில் எந்த தலைமையை நம்பி ஓட்டுப் போடுவது நோட்டாவிற்கா ?
நோட்டாவை பொறுத்தமட்டில் அது அதிகாரமில்லா ஒரு சின்னமே அது சினம் கொண்டு அரசியல்வாதிகளை தாக்குமளவிற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை,அப்படி வழங்கப்படும் பட்சத்திலும் அதன் அதிகாரத்தின் மூலம் நோட்டா அதிக வாக்குகள் பெரும் சூழ்நிலையிலும் அங்கு போட்டியிட்ட அத்துனை வாக்காளர்களும் தகுதியிழப்பு செய்யப்படுவார்களானால் கட்டாயம் இந்த தேர்தல் கள்த்தில் பல அரசியல் வியாதிகள் காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளது, அதனை விடுத்த இன்றைய நோட்டா என்பது வாயை இறுக்கிக் கட்டிய பாம்பிற்கு இணையே. நாடு நலம் பெற வேண்டுமென்றால் நல்லத்தலைமையோடுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும் அப்படியான மக்களின் தலைவர்  யார் இன்று  தமிழகத்தில் என்ற ஐயத்தோடு .......





Sunday 6 March 2016

கிரிக்கெட் : வெற்றிக்கான புதிய ஒளி


போட்டிக்கான களத்தினுள் தோல்வியும் வெற்றியும் உட்புதைந்தே காணப்படுகின்றது. தேடுபவர்களின் கூட்டு முயற்சியைப் பொறுத்தும், காலச் சூழல்களின் தன்மைக்கேற்பவும், சிறிதளவு அதிர்ஷ்டமும் கலந்தே ஒரு வெற்றிக்கான கனியே உள்ளிலிருந்து தனதாக்கி கொள்வதற்கான சிற்ந்த வாய்ப்பாகவே அமையும். இது விளையாட்டிற்கான பதிவே. நேற்றைய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசை வென்ற விதம் பாராட்டுக்குரியதே. பங்களாதேஷ் அணியைப் பற்றி சொல்லும் போது இன்றைய காலச்சூழலில் எல்லாப் பெரிய அணிகளுக்கும் சவால் விடும் அணியாகவே வளர்ந்துள்ளது. எதிர்காலத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பிரமாண்டமாக உருவெடுக்கும் என்பதை அவர்களின் ஆட்டத்திறன் வளர்ந்த விதத்தின் மூலம் அறியலாம்

ஒரு போட்டியில் நம்பிக்கை என்பதே வெற்றிக்கான களத்தை அடைவதற்கான மிகச்சிறந்த வழி என்றாலும் அதீத நம்பிக்கையும் மிகத் தவறான வழியே. பங்களாதேசிடமிருந்த அதீத நம்பிக்கையும், நேற்றைய டாசில் தோல்வியும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பைப் பறிக்க செய்தது என்றே சொல்லலாம்.

ஆசிய கோப்பைக்கான தொடக்கத்தில் ஆடுகளம் புல்லால் நிறைந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்பதும் பத்து நாட்கள் முடிவில் ஆடுகளத்தின் புட்கள் மறைந்து பேட்டிங்கிற்கு சாதகமான சூழலை கொண்டு வந்ததும் நேற்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு போட்டியாக அமைந்தது.
சச்சின் டெண்டுல்கர் விளையாட்டிலிருந்து நீங்கியப் பிறகு அணியின் தலைமைக்கானப் போட்டி தொடங்கியது என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று. அதன் விளைவு ஆட்டத்தின் முடிவுகளை வெகுவாய பாதித்ததும்,டெஸ்ட் போட்டிகளிலிருந்து தன்னை அதிரடியாக விடுவித்துக் கொண்ட தோனி அதன் பிறகு ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி தலைமை ஏற்று ஆடி வருகிறார்.
தோனியின் தலைமையில் இன்னுமொரு வெற்றியுடன் ஆசிய கோப்பைகளை அதிக முறை வென்ற அணி என்ற புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். தோல்வியின் போது தோனியை விமர்சித்தவன் என்ற முறையிலும் இன்றைய வெற்றிகளைப் பார்க்கும் போதும், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் முதல் நான்கில் தோல்வியை தழுவியப் போதும் அவர்களைப் பாராட்டவே தோன்றுகிறது.. காரணம் அந்த தோல்விகளில் அவர்கள் போராடிய விதம் ஆறுதலே.
கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட தோனியே தன் சுயத்தை இழந்து காணப்பட்ட போட்டிகளும் உண்டு.. அதற்கான முழுக்காரணமும் குழுவிலிருந்த உட்பூசலே இதற்கு வீராட் கோலி மிக முக்கியமான இடத்திலிருந்தார் என்பது எனது தனிப்பட்ட வாதமே. மேலும் அவரது சொந்த வாழ்க்கையின் ஏற்பட்ட மாறுதல்கள் அவரது விளையாட்டில் மிகப் பெரிய மாறுதலையும் விளையாட்டிலிருந்த வேகம் குறைந்தும் காட்டியது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

கோலியின் தவறுகள் இப்போது திருத்தப்பட்டிருக்கின்றன சுயமறிந்து விளையாடத் தொடங்கியிருப்பதும் அவரது விளையாட்டில் ஊக்கம் கூடியிருப்பதும் போட்டியின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையே, அதே நேரம் தோனியும் தன் சுய கவுரவத்தை விட்டுக்கொடுத்து சில் முன்னணி விரர்களை (யுவராஜ், ஹர்பஜன்) அணியில் கொண்டு வந்ததும், எப்போதும் போலுள்ள பந்து வீச்சாளர்களை நம்பாமல் புதிய வீரர்களுக்கு (பூம்ரா, பாண்டிய ) கொடுத்த வாய்ப்பும் வீணாகமல் புதிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.


இந்த அணியின் கூட்டு முயற்சி தொடருமானால் வரப்போகும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கான பிரகசமான வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். இருப்பினும் நம் அணி நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது , நம்பிக்கையையும் , கூட்டு முயற்சியுமே.. அதை விடுத்த அதீத நம்பிக்கை ஏற்படுமானால் மீண்டுமொரு சரிவிற்கு பாதையை ஏற்படுத்தலாம்.


Remember Me By Sophie Kinsella ....

Remember Me ? By Sophie Kinsella
Published : 2008 by bantam
Language : English
pages        : 444

          27 வயதாகும் பெண்ணின் கடைசி மூன்றாண்டு நினைவுகள் சிறு விபத்தின் மூலம் இழக்கும் பெண் எதிர்காலத்தை எப்படி சமாளிக்கிறாள் என்பதே கதையின் கரு. கதையின் ஓட்டம் லண்டன் மாநகரை மையப்படுத்தி நகருகிறது. தனது 24 ம் வயதில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியான லெக்சிக்கு மூன்று நண்பர்கள். அவர்களுடன் வார விடுமுறை தொடக்கத்தில் சந்திப்பை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கால் இடறி கீழே விழுகிறாள். அதன் பிறகு கண் விழிக்குமிடம் ஆஸ்பத்திரி அறையில்.
         நினைவுகள் காலிடறி விழுந்ததற்காய் இருக்கிறோம் இன்றைய தகப்பனாரின் ஈமசடங்கில் கலந்து கொள்ள முடியாதா என்ற ஏக்கத்தில் தவிக்கும் போது மருத்துவர் கூறும் செய்தி லெக்சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதன் பிறகு கதைக்களமும் மிக வேகமாக நகரத்தொடங்கிறது. முதலில் அதை மறுக்கும் லெக்சி அதன் பின் நடக்கும் சம்பவங்களின் கோர்வைகள் தான் மூன்றாண்டின் நினைவுகளை இழந்துவிட்டதை உறுதி படுத்துகிறது.
          தான் வேலை செய்த இடத்திலேயே மிக உயரிய பதவியை அடைகிறாள். அளவுக்கு மீறிய பணம், கணவன், அவர்கள் தத்தெடுக்கும் குழந்தை இவையனைத்தையும் கேள்வி படும் நேரம் அதை நம்ப மறுக்கும் அவளின் மனது புகைப்பட வீடியோ ஆதாரங்களின் உதவியுடன் நம்பத் தொடங்கும் அந்த நேரத்தில் புதிய காதலனாக கணவனின் நிறுவனத்தில் ஒப்பந்தமாகும் ஆர்கிடெக்கின் ரூபத்தில் வெடிக்கிறது.
           ஒன்றுக்குமே லாயக்கில்லாத நானெப்படி அதே நிறுவனத்தில் உயர்பதவி அடைந்தேன் , என்னுடைய பழைய காதலனை எப்படி கைவிட்டேன், தன் நண்பர்களை எப்படி வெறுத்தேன்  எனக் குழம்பித் தவிக்கும் நிலையில் தன் புதிய பதவிக்கும் மறதியின் மூலம் வரும் ஆபத்தையும் எதிர் கொள்ளத் துவங்குகிறாள்.
             எல்லா பக்கத்திலிருந்தும் சந்தேகங்கள் அவள் மனதை வாட்டி எடுக்கும் நிலையில் அவளின் முன் நிலை திரும்ப கணவனும் காதலனும் நண்பர்களும் உதவத் தொடங்குகிறார்கள். இதன் மூலம் தன் நினைவைத் திரும்ப பெறுகிறாளா ?  என்பதோடு தன் வாழ்வை கணவனோடா ?  காதலனோடா ?யாரைத் தேர்வு செய்து வாழ்வை துவங்குகிறாள் என்பதோடு கதை நிறைவு பெறுகிறது.
               கதை எந்த இடத்திலும் நிற்காமல் எளிதாய் பயணம் செய்கிறது. கதையில் அறிமுகப்படுத்தப்படும் குழந்தை அதற்கப்புறம் காணாமல் போகிறது. மிகச் சாதரணமாக அறிமுகமாகும் நாயகி எப்படி திடிரென மிகப்பெரிய கம்பெனியில் உயர்பதவியை அடைகிறாள் என்பதற்கான ஆதாரஙகள் மிகவும் தெளிவானதாக இல்லை. எளிமையான ஆங்கில நடை நாவலிற்கு பலம் சேர்க்கிறது. ஆங்கில மொழியில் படிக்கத்தொடங்க நினைக்கும் வாசகர்கள் இதை வாசிக்க முயற்சிக்கலாம்...