Wednesday 5 October 2016

நூல் விமர்சனம் : இன்றைய காந்தி

கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர் மறையாகவும் எதிர் மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.
என்னளவில் அந்த மகாத்மாவை பற்றிய சித்திரம் பள்ளியின் வயதில் பெருமை மிக்கதாய் அமைய காலப்போக்கில் திரிந்த வரலாற்றில்  சுதந்திரப் போராட்டத்தில் அவரும் ஒருவர் என்ற கீழ்மட்ட எண்ணத்தை  தோற்றுவித்தது எனது அபாக்கியமே. தேடல் இல்லாது எதுவுமில்லை தேடலில் கிடைக்காதது எதுவுமில்லை.
மீண்டும் அவரைப் பற்றிய தேடலுக்கான தொடக்கம் ஆரம்பித்தது ஏ.கே.செட்டியாரின் பயணக்குறிப்புகளின் முழு தொகுப்பை படிக்கத் தொடங்கிய போது ஏற்பட்டது. காரணம் அந்த எளிய மனிதருக்காக இன்னொரு எளிய மனிதர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அவருக்கானத் தேடலில் செலவிட்டதே.
முதலாய் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க தொடங்கிய போதே அவரின் எளிமையையும், குழந்தைத் தனத்தையும், சுயநலச்சார்பில்லா பொது சேவகத்தையும் கண்டு வியப்பைக் கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரத்தில் பெரு வாரியான மக்களை தன் எளிமையான செயல்பாட்டால் தன்னுள் இழுத்துக் கொண்ட விதம் மனதில் அவரைப் பற்றிய ஒரு தொலைநோக்கு சிந்தனையைப் படர விட்டது. அப்படி இருந்தும் மனதில் ஒரு நெருடலாய் அவரைப் பற்றிய அவதூறுகளும் ஓடிக் கொண்டே இருக்க அந்த தேடலின் வரிசையில் காந்தியைப் பற்றிய புரிதலைக் கொண்ட ஜெயமோகனின் “இன்றைய காந்தி” யைப் படிக்கத் தொடங்கினேன்.
என்னை மட்டில் புத்தகம் எண்ணங்களை விரிவடையச் செய்ய வேண்டுமே தவிர வாத விவாதங்களுக்காய் அமைவதில் எந்த பலனும் இல்லை. காரணம் அவரவருள் ஒருவரைப் பற்றிய எண்ணத் தொகுப்புகள் அவர்களைச் சார்ந்தே கட்டி எழுப்பப்படுகின்றன. இந்த புத்தகம் காந்தியை பற்றிய புரிதலை அவருக்கே உரித்தான நடையைக் கொண்டு சொல்லுவதே.
மிக எளிமையான மனிதரைப் பற்றிய அவதூறுகளுக்கான மிகப்பெரிய விளக்கங்களை மிக அழகாய் விவரித்துக் கொண்டே செல்லுகிறது இந்த புத்தகம்.
சம கால அளவில் நோக்கும் போது காந்தியைத் தூற்றும் ஒவ்வொருவரும் அவருடையக் கோட்பாடுகளோடு ஒன்றிய அரசியலை தொடங்கியருப்பதுமே அவரது கோட்பாட்டிற்கு கிடைத்த வெற்றியே.
இந்த புத்தகத்தில் அவரின் வாழ்க்கை முறையையும் அவர்களது குழந்தைகளின் வாழ்வையும் விரித்து சொல்லி அன்றைய சமூக சூழ்தளத்தில் அவருக்கென்று தனியான யாரும் அணுக முடியாத இடத்திலிருந்தும் தனது செல்வாக்கினால் இம்மியளவு சுகத்தையும் அனுபவிக்காமல் தன்னையும் தன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் பொது வாழ்வில் ஈடுபடுத்தியது போற்றுதலுக்குரியதே.
சமகாலத்தில் எளிமையாகவே தூற்றப்படும் மனிதராகவே மாற்றி வைத்திருக்கும் அத்துனை அறிவு ஜீவிகளையும் அவர் உயிரோடிருந்தால் மனமார ஆசிர்வதித்திருப்பார் என்பதே நிதர்சனம். தொடர்புகள் ஏதும் இல்லாத காலத்தில் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாத பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சாரக் குழுவை தனது எளிமையான யுக்தியால் இரத்தம் சிந்தாமல் எதிரியை எதிர்க்காமல் அவர்களோடிணங்கிய ஒரு போராட்டத்தை வகுத்து அதில் வெற்றியும் பெற்று அதற்கான வெகுமதியாய் அவருக்கு நாம் கொடுத்துக் கொண்டிருப்பது என்ன என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை.
போட்டி கலாச்சாரத்தை வளர்த்து விட்டு இன்று நாகரீகம் என்ற பெயரில் நுகர்வு கலாச்சாரத்தைப் பெருக்கி அதனூடாகவே நமது சமூகத்தில் நமது அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டிக்கொண்டிருக்கும் இந்த மாயக் கலாச்சாரத்தின் ஒப்பற்ற அடிமைகளாய் மாறிப் போய் அதற்கான சுயமதிப்பீட்டையும் போலியாய் இட்டு வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் கவனம் இந்த மாயத்தோற்றத்திலிருந்து மெதுவான ஒரு பின்னோக்கிய நகர்தலை தொடங்க ஒரு துவக்கத்தை ஆர்கானிக் என்ற பெயரில் துவக்கியிருப்பதே. ஆனால் இதுவும் ஒரு மாயத் தோற்றத்தைக் கொண்ட ஒரு நுகர்வே என்பது இதன் விலைகள் நமக்குணர்த்தும். இந்த விதமான மாய நுகர்வுகளைப் புறந்தள்ளி உண்மையான எளிமையான நுகர்விற்கான வழிகளைத் தேடவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுமான தேவைகளை துவக்க வேண்டிய தருணத்தில் இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய ஒரு நிறைவானத் தேடலுக்கு இந்த புத்தகம் நமக்கு உதவியாய் இருக்கலாம்.
எளிமைக்கு முன்னோடியே இந்த மகாத்மா என்பதில் என்னளவில் சந்தேகமில்லை. அவரது வாழ்வில் சில முரண்பட்ட நிகழ்வுகளை அவரே சொல்லியிருக்கிறார் அவை கடத்தி விட வேண்டியவைகளே. அதை தவிர்த்த அந்த எளியவரின் பார்வை மிக மகத்தான ஒரு கண்ணோட்டத்தை இந்த புத்தகம் நமக்கு கொடுக்கலாம்.
அஹிம்சை போராட்டத்தின் வெற்றியின் இடைச்செருகலாய் சுபாஸ் சந்திர போஷை பலரும் தூக்கிக் கொண்டாடும் நேரத்தில் அவருடைய படையால் இந்தியாவின் சுதந்திரம் நிர்ணயிக்கப் பட்டிருக்குமா என்பதில் எனக்கிருந்த கேள்விகளுக்கான விடைகளும் தெளிவும் பெற முடிந்தது.
இன்றைய சமகாலத்தில் இனங்களாய், மதங்களால், மொழியால் நாம் அடையாளப் படுத்தப்படுகிறோம். இதன் மூலம் இன்றையத் தலைமுறையினரை ஒரு இனவெறி குழுவாய் மாற்ற நடக்கும் அரசியல் கேலிக் கூத்துக்களை பார்த்துக் கொண்டிருக்க இந்த கூத்துகளுக்கு நம் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியே அவர்களின் ஜீவாதாரத்தை பெருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.  மொழி வெறியின் உதாரணத்திற்கு ஒப்பீட்டளவில் இலங்கையில் தனி ஈழப் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து கட்டமைக்கப் பட்ட ஒரு கூட்டத்தின் எழுச்சியின் அகால முடிவிற்கும் அதில் மாண்ட லட்சக் கணக்கான மக்களுக்கும் யார் பொறுப்பாக முடியும்.
ஹிம்சைதான் எல்லா முடிவுகளுக்கும் தீர்வென நகரும் இந்த மாய லோகத்தில் அதன் பலனையும் அதன் விளைவுகளையும் யார் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுவது காந்தியப் பார்வையே. இதில் எதிரிகளையும் பணிய வைக்கும் ஆயுதமிருக்கிறது என்பதே இதன் மிகச்சிறந்த விசயம். இனியொரு காந்தி பிறக்கப் போவதில்லை இதிலிருந்து நாம் கற்க வேண்டியது ஆயிராமாயிரம் உயிர்களைக் காப்பாற்றலாம். இனியாவது காந்தீயக் கோட்பாடுகளை தோற்கடிக்கும் எண்ணத்தை விட்டு அதை இளைஞர்கள் மத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணத்தைக் கையிலெடுக்கலாம்.

பதிப்பகம் : தமிழினி

ஆசிரியர் : ஜெயமோகன்.