Tuesday 2 October 2018

காந்திக்கு பிறந்தநாள் பரிசு

மொழி வெறியாலும், இன வெறியாலும் , மத வெறியாலும், சுயநோக்கு அரசியல் தன்மைகளாலும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசம் இன்று சீழ்படிந்து போயிருக்கிறது. இந்த தேசத்திற்கு அந்த மகாத்மா அளித்த கொடைகள் அஹிம்சை, உண்மை, எளிமை ஆகியன காற்றிலே கலந்து தூசு மண்டி எங்கோவொரு இடத்தில் புதைந்திருக்கலாம். இந்திய சுதந்திரமும், காந்தியும் வீழ்ந்து எழுபது ஆண்டுகள் கழிந்து விட்டது. காந்தியின் ஆதரவு பெற்ற அரசாங்கம் தான் பொறுப்பேற்றும் காந்தியின் ஆசை கொண்ட அரசு தான் நடந்ததா என்பதில் கேள்வி மட்டுமே பாக்கி நிற்கிறது. 

அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று  வரை காந்திக்கான இடம் என்ன வெறும் வாழ்த்துக்களும் அவரின் நினைவு கூறலோடு முடிந்து போகிறது. தேசத்தந்தை, மகாத்மா, அஹிம்சாவாதி என்றெ ல்லாம் போற்றப்பட்ட அந்த ஆதர்சன நாயகனின் சரித்திரமும் வாழ்வியல் கோட்பாடுகளையும் இன்று கேட்பார் யாருமில்லை படிப்பார் யாருமில்லை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் யாருமில்லை (அடைப்புக் குறிகளுக்குள் ஒரு சிலரைத் தவிர்த்துக் கொள்வோம் ).

இதற்கான காரணம் என்ன நிச்சயம் இங்கு வாழ்ந்த ஆட்சியா ளர்களின் தொலைநோக்கு சித்திரம் மேலை நாடுகளின் நாகரீகத்தையும், அண்டை நாடுகளின் அரசியல் வாழ்வினையும் நகல் படுத்தி பிரகடனபடுத்தியதில் நாம் இழந்து போனது,  நம்முடைய பன்முகத் தன்மையில் அங்கமாகியிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தைத் தான். அது காலத்தின் தேவை என்று சிலர் அதன் பின் நிற்கலாம் ஆனால் வரலாறு நமக்கு நிச்சயமான மற்றொரு கோர முகத்தை நம்மிடம் இன்று காட்டிக் கொண்டு நிற்கிறது. காலத்தின் தேவை என்று சொல்லும் ஆளுமைகள் மக்களுக்கான இசங்களுடன் அரியாணை ஏறிய பின் தம் மக்களைக் கொன்று குவித்த இரத்தத்தால் அந்த வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் வேலையைத்தான் பார்க்க முடிகிறது.

1939 ல் காந்தியின் பிறந்தநாளிற்காக உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகள் மற்றும் அவர் மீதான விமர்சனங்களை புத்தகமாகத் தொகுத்து  (மகாத்மா காந்தி- சர்.எஸ்.இராதாகிருஷ்ணன்/ அன்னம் பதிப்பக வெளியீடாகக் கிடைக்கிறது) காந்திக்கு பரிசாக கொடுத்தார். அது காந்தியின் கோட்பாட்டினை வெகுவாக புகழ்கிறது, இன்னொரு இயேசுவாக , கருணை நிறைந்த மனிதராக இருக்கிறார் என்றெல்லாம் பார்க்க முடிகிறது. போர் மேகம் சூழ்ந்த அந்த காலத்தில் காந்தியின்  கொள்கைக்கான தேவை மிக அவசியமானதெனச் சொல்வதைப் படிக்கும் போது காந்தியை இந்திய மக்களை விட அவர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.

அன்றையக் காலக்கட்டத்தில் மேற்கத்திய மக்களையும் கிழக்கத்திய மக்களான இந்திய மக்களையும் சேர்த்த ஒப்பீடானது  இந்தியர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும் பொறுமை நிறைந்தவர்களாகவும், போதுமென்ற மனம் படைத்தவர்களாகவும் மேற்கத்தியர்கள் நினைக்க ,(மேற்கத்தியர்களின் தூற்றல்களைத் தவிர்த்திருக்கிறேன்)  அவர்கள் அதற்கெதிரான ஆடம்பரமான ,பொறுமையற்றவர்களாக, நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பவர்களாகத்தான்  இருந்திருக்கிறார்கள். காந்தியுன் இந்தக் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தையும் ஆன்மாவையும் சிதைத்து விடும் அதனால் அந்த கலாச்சாரத்தை  ஒரு போதும் அனுமத்திக்கவோ ஆக்கிரமிக்கவோ கூடாது என்ற அச்சமும் கொண்டிருந்தார்.

அவரது நூற்றைம்பதாவது பிறந்தநாளில் நாமும் நமது மக்களும் என்ன மாதிரியான வாழ்க்கையை தேர்ந்தேடுத்திருக்கிறோம் என்பதை காந்தி மீண்டும் வருவாரானால் நிச்சயம் அவரது மனம் தன்னிலை மறந்து அழத்தொடங்கியும் விடலாம். மேற்கத்திய கலாச்சாரப் பேய்களின் ஆதிக்கம் இங்கு ஒட்டுண்ணியாக மெல்ல மெல்லப் பரவி இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த கலாச்சாராத்தின் அடையாளத்தையும் புரட்டிப் போட்டது மட்டுமில்லாமல் மேற்கத்திய நுகர்வுபோதையின் அடிமைகளாக்கியிருக்கிறது.

ஏன் இந்த மாற்றம் என்பதை யாரும் கேள்விகள் கேட்கக் கூட நேரமில்லை. காரணம் அந்த கேள்விக்கான சிந்தனை நம்மிடம் பரவிடக் கூடாது என்பதில் எல்லா ஆளும் நிறுவனங்கள் தத்தமது முயற்சிகளால் சிந்தனையறிவை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று காந்தியை பற்றிய வாழ்த்தையோ விமர்சனத்தையோ வைப்பவன் ஒரு தீண்டத்தகாதவனாயிருக்கிறான். சந்தர்ப்பவாத அரசியல்கள் செய்பவர்களாலும், அறிவார்ந்த சமூகத்தாலும்  எந்தெந்த ஜீவன்களுக்காய் அந்த ஆன்மா போராடியதோ அந்த ஒட்டுமொத்த இனங்களே அவரை வெறுத்தொதுக்கியிருப்பதுதான் இன்று அவருக்கு நாமளிக்கப் போகிற பிறந்தநாள் பரிசு....

No comments:

Post a Comment