Friday 25 May 2018

நூல் விமர்சனம் : ஒரு புளியமரத்தின் கதை




1966 ல் வெளிவந்த இந்த புதினம் சமகாலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமென்ன ? புனைவா ? இந்திய தத்துவார்த்த சிந்தனையா ? வலது சாரியத்தின் பக்கமா அல்லது இடது சாரியத்தின் பக்கமா? உருவகமா , இன வரைவியலா , சூழலியல் சார்ந்ததா ? என்ற கேள்விகள்தான் இன்று நூல் விமர்சனங்களில் தொக்கி நிற்கிறது.

படிக்கும் எல்லா நூல்களுக்கும் விமர்சனங்களை நம்மால் எழுத முடிவதில்லை அதற்கான காரணம் அதிகமாக பேசப்படுகிறதே என்ற ஈர்ப்புடன் வாங்கி படிக்கும் எல்லாப் புத்தகங்களும் நம்மை ஈர்ப்பதில்லை. மேலும் அது சொல்லும் விசயமென்ன என்பதும் புலப்படுவதுமில்லை. அதே நேரம் நான்கு அல்லது ஐந்து வாசிப்பாளர்களிடையே கலந்துரையாடும் போது ஒவ்வொரு புத்தகத்திற்கு நம்மைக் கடந்து பல விளக்கங்களும் கிடைக்கின்றன. அது எதைச் சார்ந்த்து என்பது படிக்கும் வாசகனின் அதிகப் பட்சமான சிந்தனையோட்டத்தில் அது கலந்து விடுகிறது. புளியமரத்தின் கதையும் அப்படித்தான். கிட்டத்தட்ட அரை  நூற்றாண்டைக் கடந்த பிறகு பல புத்தகங்களின் சிந்தனைகளும் மரபுகளும் சொல்லாடல்களும் கலாச்சார நிகழ்வின் நிழல்களும் தடம் மறந்து போய் விடுகின்றன. அதெல்லாம் தாண்டி சமகாலத்திலும் என்னால் பல விசயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்ற நிமிர்தலோடு தான் இந்த புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்திற்கு சொல்வழக்கு மிக மிக இன்றியமையாததாகும். காரணம் அது அந்த ஊரின் தன்மையை மொழியின் திரிபுகளை நமக்கழகாய் உணர்த்தும். இந்த வகையில் இந்த புத்தகத்தை அணுகும் போது அது நாகர்கோவில் கன்யாகுமரியை ஒட்டிய தென் தமிழக நிலப்பரப்பே இதன் களம். ஆகவே இதில் சிறிதாய் மலையாளம் வாடை வீசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கு இந்த மொழிநடை கொஞ்சம் கடினமானதாக தோன்றலாம். அதற்கு முன் பின்பக்கத்தில் வழக்காடு சொற்களின் விளக்கங்களைப் படித்துவிட்டு தொடங்கும் நேரம் அதன் அழகியலை உணர முடியும்.

நாவலின் காலக்கட்டம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலக்கட்டம். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு புளியமரத்தின் வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த இடத்தில் அரங்கேறிய மனித இனத்தின் நாகரீக வளர்ச்சிக்கும் , வாழ்வியல் முறைக்கும் , அரசியல் நிகழ்வுகளுக்கும், அதிகார வர்க்கத்தின் ஆளுமைகளுக்கும் , போலியான மனிதர்களின் குயுக்திகளுக்கும் இந்த மரம் ஒரு சர்வ சாட்சியாய் நின்று விடுவதால் என்னவோ சுயநலப் போக்கில் உச்சம் பெற்ற மனித இனத்தாலேயே அதற்கான அழிவும் நிச்சயிக்கப்படுகிறது என்றே சொல்வேன்.

புனைவுகள் எப்போதும் வாழ்வியல் முறையோடு ஒத்துப்போகுமா என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருக்கும். காரணம் எழுதப்படும் எல்லா விசயங்களும் ஆசிரியரின் மிகையுணர்விற்காய் இலக்கியப் போக்கிலிருந்து கடந்து எதார்த்த வாழ்வியலை விட்டு விலகும் நேரம் அது இலக்கியத் தன்மை கெட்டு சார்பியல் தத்துவ நோக்கத்தைக் காட்டிவிடுகிறது. பல நேரங்களில் புனைவுகள் மிகையுணர்வின் உச்சங்களாகி அந்த மிகையுணர்வில் தடம் மாறும் வாய்ப்பைத் தான் இன்று கொண்டிருக்கிறோம். இப்புதினம் நான் அப்படியில்லை என்று சொல்வதோடு சார்பியல் இல்லாத ஒரு நடையோடு வரலாற்றின் ஒரு சில நிகழ்வுகளோடு புனையப்பட்டுக் காலத்தின் தன்மைக்கேற்ற கதாப்பாத்திரங்களோடு நம்மை பயணிக்க வைக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்னதான திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையிலிருந்து இந்திய ஆளுமைக்கு மாறும் காலத்தில் ஒரு சாமானியன் அரசிற்கெதிராய் போர்க் கொடி உயர்த்துவதில்லை. அதனால் அவனால் எல்லாக் காலக்கட்ட்த்திலும் தன்னை தகவமைத்துக் கொண்டு தான் வாழ்க்கையை செம்மை படுத்தி ஓட்டி விட முடியும். ஆனால் ஒரு தலைவனோ அல்லது போராளியோ அப்படித் தன் வாழ்வை அடிமை நிலைக்குப் பின்னான வாழ்வில் சாதரணமாய் தகவமைத்துக் கொள்ள முடியுமா என்ற புதிய கேள்வியை எனக்குக் கொடுத்து அதற்கான பதிலையும் கொடுத்து விடுகிறது,

அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் இன்றைய சமகால அரசியலோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இன்று அரசியல் என்ன செய்துக் கொண்டிருக்கிறதோ அதே தான் அன்றைய நிலைமையும் என்பதை படிக்கும் போதே எனக்குள் இந்த நாவலைப் பற்றி எழுதவேண்டுமென தோன்றியது. இன்றைய அரசியலில் எப்படி மதம் இனம் மொழி முன்வைக்கப்படுதலையும், ஊடகங்கள் எப்படி தன் நிறங்களை மாற்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுதலும் அரசியலில் ஓட்டிற்காய் மக்களை எப்படி பிரிக்கலாம் என்ற சூது கொண்ட அரசியல்வாதிகளும், இனத்திற்கு இன மக்களையே எதிரிகளாக்கி ஓட்டுக்களை பிரிக்கும் வஞ்சனையும், வெற்றிப் பெறுவதற்காய் நிறுத்தப்படும் டம்மி வேட்பாளர்களும் , ஏதோ விபரீத்த்தால் நிலவும் அரசியல் சூழ்நிலையில் டம்மிகள் ஜெயிக்கும் போது ஏற்படும் நிலை மாற்றத்தையும் பார்த்திருக்கும் நாம் அதை அரை நூற்றாண்டிற்கு முந்தைய நாவலில் படிக்கும் போது நிச்சயம் எழுத்தாளர் ஒரு தீர்க்கத் தரிசியா அல்லது இந்திய மனம் இது போன்ற சூழ்நிலைக் கோட்பாடுகளில் தான் வளர்ந்து வந்திருக்கிறதா என்ற ஆச்சர்யத்தையும் கொடுத்து விடுகிறது.

இதில் புளியமரத்திற்கான பங்கு என்ன என்பதைப் பார்க்கும் சமயம் வாழ்ந்த காலத்தில் அது சுயநலமில்லாத தன்மையையே வெளிப்படுத்துகிறது. அது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் மனிதனால் புனையப்படும் யட்சிகளுக்கும், தெய்வங்களுக்கும் தன்னை ஒப்புக் கொடுக்கிறது. அதன் வாழ்வை காக்க அதனை (இயற்கையை) நேசிக்கும் ஒருவனால் தான் முடியும் ஆம் அதனை இரண்டு கதாப்பாத்திரங்கள் தன் புனைவின் சாமர்த்தியத்தால் காப்பாற்றினாலும் கடைசியில் ஜெயிப்பது மனிதனின் சுயநலப் போக்கு மட்டும் தான் என்பதை உணரும் நேரம் நம்மில் இன்று வாழும் எந்த இயற்கை ஜீவராசிகளையும் மனிதக் கண் கொண்டு பார்க்காமல் அதன் இதயத்தின் வழி பார்க்கும் சமயமே அதன் இழப்பின் வழி நமக்கு அகப்படும். இழப்பின் அருகில் இருப்பவனுக்கும் மட்டும் தான் இழப்பை மிக வேகமாயும் ஆழமாயும் உணர முடியும்.

மிக உன்னதமான அழகியல் மிகுந்த சிந்திக்க வைக்கக் கூடிய நாவலைக் தன் முதல் நாவலாக்க் கொடுத்த சு.ரா என்கிற சுந்தரா ராமசாமிக்கு வாழ்த்துகள்.



No comments:

Post a Comment