Tuesday 30 January 2018

எங்கே காந்தி..

காலம் எழுபது கடந்து விட்டது.இன்று நாம் சுவாசிக்கும் காற்றிற்கும் சுதந்திரமுண்டு. சுதந்திரமில்லா அந்நாளில் அந்நியருடன் அன்பொன்றே விடுதலைக்கான இலக்கணம் என்றாக்கி அதனை செயல்படுத்தி சுதந்திர காற்றை ஸ்பரிசிக்கச் செய்த அந்த ஆளுமையை வீழ்த்திய தினம். 

ஏதோ சாதீயத்தையும் மொழியையும் தூக்கி பிடித்த தலைவர்களை இன்று நாம் ஆதர்சன புருஷனாக்கி அன்றைய தலைமையை அனாமதேயக் கேள்விகளால் அநாதையாக்கி இன்று களிப்புடன் நம் வாழ்வை நகர்த்திக் கொண்டு வரும் நமக்கு, அவரின் நினைவுகளை மறப்பதொன்றும் அசாதாரண விசயமில்லை. காரணம் அவர் மிகச்சாதாரணர், எளிமையின் ஆளுமை. மனிதநேயத்தை உண்மையாகவே நேசித்தவர். அடிமை பெற்ற மானுடக் குலத்தை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தவர். 

இன்று அவரைப் பற்றிய பேச்சுக்களே தம்மை தாழ்த்தி விடுமோ என்ற தாழ்வு மனப்பான்மையும் போலி எண்ணங்களும் நம்முடனிருந்து அவரை அகற்றியே வைப்பதும் இன்றையத் தேவைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளுக்கு அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை மறுக்க முடியாத சூழலில் நாம் சிக்கித் தவித்து வருகிறோம்.

சுட்டு வீழ்த்திய நாளுடன் இந்திய அரசியலும் அதன் தன்மைகளும் மாகத்மாவின் எண்ணத்திற்கு நேரெதிராக பயணம் செய்யத் தொடங்கவும் என்றும் அவர் அரசியல் ஆதாயத்திற்கான பிம்பமாக மட்டும்  மாறிப்போனதுமே இந்த எழுபதாண்டுகால அரசியலில் அவரை கடத்தி வந்த சாதனை. 

அவருடைய நினைவு நாளில் அவரை நினைக்கக் கூட அருகதையற்றவராகி விட்ட நம்மிடம் அவரை மறக்க உள்ள உண்மையான விபரங்கள் யாதென்று யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மவர்களுக்கு ஆட்டுமந்தை போல் ஒருவர் சொல்லியதை அடியொற்றி அவரைத் தூற்றுவதற்குகான போலித் தரவுகளை மட்டுமே கண்டு வைத்துள்ளோம்.

போற்ற மனமில்லாத போனாலும் தூற்றுவதை தவிர்க்கக் கூட நம்மிடம் மனதில்லாத மாக்களாய் மாறிப் போன சூழல். அன்றே அவரின் சந்தேகம் மேனாட்டுக் கல்வியின் களவாணித்தனம் நம் மனதை மனித நேயத்தோடோ அல்லது மகாத்மாக்களை நினைவு படுத்தி பார்க்கவோ சொல்லித் தராது  என்ற தாரக மந்திரத்தை நினைவுக்குட்படுத்துவது அவசியமாகிறது.

இன்றைய கல்வி இனவெறியையும் மொழி வெறியையும் தூக்கிப் பிடிக்கும் களவாடிகளை தலைவராகக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்வது நம்முன் உள்ள ஒரே வழியாக மாறிக்கொண்டே வருகிறது. அவர்களின் ரத்தவெறியின் வரலாறு ஓரிடத்தில் முடிந்து இன்னொரு இடத்தில் முளைவிட்டிருக்கிறது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கி வைக்கப்பட்டிருக்கும்  வெறியாட்டப் போராட்டங்களும், அந்த கொலைக் களத்தில் விருந்துண்ண காத்துக் கொண்டிருக்கும் மதியிழந்த மானுடப் பதர்கள் நாக்கை தொங்க விட்டு காத்துக் கொண்டிருக்க, சுதந்திரம் வேண்டிய அந்நாளிலும் இந்த நாட்டை பிளவுப்படுத்த நினைத்த சக்திகள் அண்டை அயலாரின் இசம் வசம் வீழ்ந்து மேற்சொன்ன ரத்த வெறிக்கு தூபமிட்டு கொண்டிருக்கும் சாபத்தின் நிழலில் நம் வாழ்வை நகர்த்துவதும், ஜனநாயகத்தில் எல்லாவற்றிற்கும் சுதந்திரம் என்று சொல்லி வரம்பு மீறிய செயல்களை வாக்கு தகிடுதத்தத்தில் புரிந்து பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை சிதைத்து அதன் வெறுப்பில் ஏதாவது இரத்தம் கிடைக்காதா என்ற காத்துக் கொண்டிருக்கும் ஓநாய்களின் மனம் படைத்த அரசியல்வியாதிகளோடு நம் வாழ்வு கடக்கும் நிலையில் நாம் உறுதி எடுக்க அவரின் போதனைகளும் , வாழ்வியல் சாதனைகளும் மட்டுமே நம்மை நாமாக திருப்பி எடுக்கக் கூடிய ஆயுதமாகும்.  

அந்நிய தேசத்தின் பிடியில் வீதிக்கொரு தேசமாய் சிதறுண்டிருந்த தேசம் வாழ்வியல் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒரே இனமாய் பாரதத்தின் பிள்ளைகளாக அங்கீகரிக்கபட்டு மகாத்மாவின் மூலம் வாங்கிய சுதந்திரத்தை  ஓநாய்களின் உளறல்களுக்கும் அவர்களால் திருத்தப்பட்ட வரலாறுகளுக்கும் நாம் இரையாக்கப் பட்டு இந்திய தேசத்தின் இறையாண்மையை கூறு வாங்கத் துடிப்பதை தடுக்க உறுதி பூண்டு அந்த புல்லுருவிகளை தேசத்திற்கு இனம் காட்டி தூக்கியெறிய கடமை பட்டுள்ளோதோடு தொலைந்து போன காந்தியையும் காந்தியத்தையும் நம் வாழ்வியலில் ஒரு பகுதியாக கொண்டு வர ஒரு சிறிய முயற்சியை மேற்கொள்வோம்.

வாழ்க காந்தி... 


No comments:

Post a Comment