Tuesday 16 January 2018

நூல் விமர்சனம் : தாண்டவராயன் கதை

பாகீரதியின் வாசிப்பிற்குப் பின்னுண்டான உந்துதல் பா.வெங்கடேசனின் மற்றுமுள்ள படைப்புகளையும் வாசித்து விட வேண்டுமென்று ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரின் எந்த படைப்பும் அச்சில் இல்லை என்பதிருந்தாலும் நம்பிக்கை ஒரு பக்கமிருக்க அதன் பலம் என் பக்கம் என்னவோ எப்போதுமே இருக்கிறது. புத்தகத்திற்காய் ஒரு கணிசமான தொகையை செலவழித்தாலும் அதை தேடிப் போய் கண்டடையும் பைத்தியத்தில் நான் இன்னும் சேரவில்லை என்றே கருதுகிறேன். சொல்லி வைத்த புத்தகக் கடையிலிருந்து எனக்கான புத்தகம் காலம் தாழ்த்தாமலே வந்து சேர்ந்ததும் ஒரு கதை தானென்றாலும் அந்த கதை சொல்லலுக்கான தளமிதுவில்லை என்ற எண்ணத்தில் புத்தகத்தின் நேரடி விமர்சனத்திற்கு சென்றுவிட எத்தனிக்கும் மனதில் என்ன எழுதுவது என்ற அச்சத்தோடே தொடங்கும் பாக்கியசாலியாக இருக்கிறேன். படித்த பிடித்த புத்தகத்தை விமர்சனம் செய்யாமல் கடப்பது அப்புத்தகத்தின் மீதான நமது வெளிப்பாடுகளை நம்முள் புதைத்து விடுவது போன்றதாகும்.

பாகீரதியின் மதியத்திற்குப் பின்னானத் தேடலில் எழுத்தாளனின் இந்தக் கதைக்கான ஒன்றிரண்டு விமர்சனங்கள் கண்ணில் தட்டுப்பட அதனை வாசிக்கும் போது அந்த புத்தகம் வெளியிட்ட காலப்பொழுதில் அப்புத்தகம் தானடைய வேண்டிய இடத்தை அடையவில்லை என்பதே இந்த விமர்சனங்களை வாசித்த பின்னான அனுபவமாய் காண நேர்ந்தது. அது என்னவோ இந்த எழுத்தாளனுடையப் படைப்புகளை வைத்திருக்கிறோம் அல்லது படிக்கிறோம் என்று சொல்லும் போதே அதற்குரிய பின்னூட்டங்கள் நம்முள் பிரமிப்பையோ பயத்தையோ செலுத்தி விடுவது வரவேற்பதற்குரிய அம்சமாய் படாமலும் இந்த புத்தகத்தை அந்த அச்சத்தினுள்ளே கடத்தி மறைத்து விடும் போக்கே இந்த புத்தக இடம் பெற வேண்டிய இடத்தை இழந்து விட்ட நம்பிக்கையை என்னுள் கொடுக்கிறது.

புனைவிற்குள் வரலாற்றின் நாயகர்களை நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளோடு புகுத்தி அந்த கதையை உயிர்பிக்கும் ஆசானாய் மாறுவதே எழுத்தாளனின் திறமாய் இந்தப் புத்ததகத்தில் என்னால் காண முடிகிறது. இத்தனை வரலாற்றுத் தரவுகளையும் இடங்களையும் தன் மனதினுள் கடத்தி அதனை தன்னெழுத்தின் மூலம் படிக்கும் நம்மையும் கொண்டு விடும் போது நிச்சயமாய் பிரமிப்பே மிஞ்சுகிறது.

வரலாறுகள் எப்போதும் இனிமையாக இருப்பதில்லை என்பதில் என்னுள் மாற்றுக்கருத்துகள் பிறந்ததில்லை.கதைக் களம் சொல்லும் விசயம் காலனியாதிக்க சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளோடே ட்தொடங்கும் புதினம் நம்மை கொண்டு போவது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இங்கிலாந்தில் துவங்கி பிரெஞ்சு புரட்சியினுள்ளே நம்மை கொண்டு சென்று அங்கிருந்து நம்மை ஆளப்போகின்ற ஆங்கில ஆதிக்கத்தின் தொடக்கமான கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்தியாவில் தன்னாதிக்கத்தை நிலை நிறுத்த முயல வேண்டி திப்பு சூல்தானின் பேசவோ போரிடவோ முயன்ற தருணத்தின் கதையாக மாற்றி நிற்க விடாமால் நீலவேணி என்ற குதிரையின் ரதத்தூடே காலச்சக்கரத்திற்குள் புகுத்தி விடுகிறது. அதன் பின்னான நம்மின் நிலை படிப்பதிலிருந்து வரலாற்றையும் புனைவில் நீளும் கற்பனைகளில் கதை, கதைக்குள் கதைகளாக விரிந்து செல்கிறது.

பரிச்சயப்படாத என்று சொல்லக் கூடிய ஆனால் படிக்க முடிகின்ற ஒரு எழுத்தைக் கொண்டு நம்மில் வியாபிக்கும் எழுத்தாளனை பாராட்ட வேண்டாம் அதற்கு பதில் அந்த எழுத்தை எல்லோரும் வாசிக்கவும் அதை விவாதிக்கவுமான முயற்சிகளை செய்வதில் நானும் முனைகிறேன் என்பதில் எனக்கும் சிறிய மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்கிறேன்.

படிக்கும்  புத்தகங்கள் வெறுமனே நம்முள் புகுந்து நம்மை கடந்து விடாமல் சொல்லும் செய்தியையோ அல்லது சொல்ல முற்படுகின்ற வரலாற்றில், நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை புனைவின் சாதுர்யத்தில் படிக்கும் மனதின் திடச் சித்தத்தில் நிச்சயம் பதிந்து விடும் கதாப்பாத்திரங்களாக எலினாரும், ட்ரிஸ்ட்ராமும், ஷெல்லியும், கெங்கம்மாவும், விபூதியும், துயிலார் பூசாரியும், சொக்க கௌடவும் , நீலவேணியும், தாண்டவராயனும், கோணய்யனும் இருப்பார்கள்.

இந்த புத்தகம் படித்த முடித்த போது எந்த தாக்கமும் என்னுள் ஏற்படவில்லை என்று சொல்லி விட முடியாமல் கதையில் வரும் நீலவேணியின் பாதைக்கான நீளும் கதைப்பாடலும் ,ஷெல்லியின் கதையும், துயிலார் இனத்தின் அழிப்பும் நாடோடி வாழ்க்கையும் , கிழக்கிந்திய மற்றும் திப்பு சூல்தானின் ஆளுமைக்குள்ளில் மனித வாழ்வியலும் நம்முன் கடந்து போகிறது.

நாவலின் குறை படிக்கும் போது சில இடங்களில் தோன்றிய சலிப்பும் சில  நேரம் கதை களத்திலிருந்து கடந்து சென்று விடுகிறதோ என்ற தோணலிருந்தாலும் கடந்து போன களமும் படித்துச் செல்லும் நேரம் கதைக்கான ஒரு அம்சமாய் மாறி போய் விடும் என்பது என் நம்பிக்கை.

சிக்கலான நீண்ட கதையம்சத்தை கொண்ட நாவலை ஒரு முறை வாசித்து விட்டு விமர்சனம் எழுதுவது ஆகச் சிறந்த முறையல்ல காரணம் கதையைப் படிக்கும் மனம் அதன் முடிவை மட்டுமே
மனதில் கொண்டு நகரும் போது விடுபடும் பல நிகழ்வுகளும் அதனுள் இருக்கலாம். நிச்சயம் மீண்டும் படிக்கும் போது நம்முள் வேறு பல சிந்தனைக்குள்ளும் இட்டு செல்லும் என்ற எண்ணவோட்டத்தில் நல்ல விமர்சனத்திற்காய் மீண்டுமொரு முறையோ அல்லது அதற்கு மேலுமோ படிக்க உகந்த இடத்தில் தாண்டவராயன் கதை இருப்பதாகவே உணர்ந்து இது போன்ற பிரமாண்ட கதையைக் கொடுத்த பா.வெங்கடேசனிற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .






No comments:

Post a Comment