Tuesday 29 October 2019

மோகமுள்

புதினம் : மோகமுள்
பதிப்பு .. காலச்சுவடு
ஆசிரியர் : தி.ஜானகிராமன்

அனுபவங்களின் விளைச்சலில் தத்துவங்கள் பிறக்கின்றன. எல்லாத் தத்துவங்களும் எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போக வேண்டிய அவசியமில்லை. கால வெள்ளத்தில் தத்துவங்கள் படித்தோ சிலது அனுபவித்தோ அறியப்பட்டுக் கொண்டே தானிருக்கிறது. முற்போக்கோடு தத்துவங்கள் முரண்பட்டு கொண்டேயிருக்கின்றன. தத்துவங்கள் தீர்வுகளைக் கொள்வதில்லை ஆனால் நியாயமான வாழ்க்கைக்கான சமாதானங்களை விதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன. 

தத்துவங்களோடமைந்த எழுத்திற்கான உயிர்ப்பு, அதன் காலமும் அன்றைய வாழ்வியல் நடைமுறைகளும்தான் நிர்ணயிக்கின்றன. சிலவை காலத்திற்கொவ்வாதவையாகி நம்மிலிருந்து அகண்டு விடுகிறது..

தி.ஜா என அழைக்கப்படும் தி.ஜானகிராமனின் "மோகமுள் ". ளை வாசித்ததில் என்னுள் படர்ந்தது பிரமிப்பின் உச்சமே. 

கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியில் (1955) எழுதப்பட்ட இப் புதினம்  21 ம் நூற்றாண்டின் கால் பகுதியில் வாழும் ஒரு வாசகனை சிலிர்க்கவோ பிரமிக்கவோ வைப்பது என்றால் அதற்கு தி ஜா வின் தனித்தன்மைமிகு முற்போக்கு எண்ணங்களே.

சில விமர்சனங்களை இணையத்தில்  வாசித்த போது பொருந்தா காமம் எனச் சித்திரிப்பது எப்படி என்ற ஐயுறல் சாதாரணமாகவே தோன்றியது. இயற்கையில் மாற்றப்படாத நியதி ஆணுக்குப் பெண் அவ்வளவே. அதில் வயது வித்யாசம், அழகு இவையெல்லாம் சமூகத்தின் பார்வைக்கு போடும் போலித் தீனி தான். பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் வறட்டுப் பார்வைக்கும், பழங் கொள்கைகளுக்கும் ஒட்ட வாழ்ந்து சலித்து விடுகிறார்கள். காரணம் அங்கு அழகும், வயதும் இன்ன பிற இத்யாதிகள் யாவும் பிரதிநுதப்படுத்தபடுவதே.

இக்காலத்தில் வாசிக்கின்றவர்களுக்கு இதன் மொழி நடை மீது பெரிய தர்க்கத்தை ஏற்படுத்தலாம். இப் புதினம் வேண்டுமென்று வலிய அம்மொழி நடையில் எழுதப்படவில்லை என்பதே என் பார்வை. ஒவ்வொரு மொழிநடையும் அதற்குரிய அழகைப் பெற்றேயிருக்கின்றன. கதையின் களனையும், கதை மாந்தர்களையும் சார்ந்தே மொழி நடை பிரதானமாகிறது. எதற்கு எது தேவையோ அதற்கு அது தேவை அதுவே கதையின் யாதார்த்தக் உரிமை.

கதைக்களன் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வாழ்ந்த பிராமண குடும்பங்களைச் சார்ந்தது. காலக்கட்டம் 1930 க்கும் 50 க்கும் இடையில் நடந்த உண்மைச் சார்ந்த புனைவுகளின் தொகுப்பு. அதில் கர்நாடக சங்கீதம் பிரதான இடத்தைப் பெற்று கதை முழுதும் மெல்லிசைப் போல படர்கிறது.

கதையின் நாயகனான பாபு குழந்தை பருவத்திலிருந்தே கர்நாடக சங்கீதத்தின் மீது ஆசை கொள்ளலும் அதனையொப்ப அவரின் அப்பா (வைத்தி)  அவனின் ஆசைக்கு ஒத்த சுயநல கொள்கைகளை திணிக்காத பெரும் சுதந்திரத்தை வழங்கும் தாராளபாங்குமிக்க பாத்திரமாக வலம் வருகிறார். அவரின் பார்வை இன்றைய பெரும்பான்மை அப்பாக்களால் கூட பார்க்க முடியாத தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொருளில் இருக்கிறது.
 
முதியவரை மணந்த தங்கம்மாள் பாத்திரம் தன் வயதிற்கேற்ற உந்துதலால் பாபுவால் கவரப்படுவதும் தன் மோகத்தை தீர்க்க மேற்கொண்ட யுக்திகளும் அதன் பின்னவளின் மரணமும் பேரிளம்பருவத்தை தொட்ட  பாபுவை நிலைத் தடுமாறச் செய்தாலும் பாபுவின் உள்ளுக்குள் அப்பாவின் உபதேசங்களும், நண்பனான ராஜிவின் உரையாடல்களும், குருவான ரங்கண்ணாவின் உபதேசங்களும் காப்பாகவே இருக்கிறது.

இந்த பாதுகாப்பு வளையங்கள் எல்லா இடங்களிலும் எடுபடுவதில்லை.  சூழலும், சம்பவங்களும் அதை தீர்மானிப்பதோடு பாபுவும் தன்னிலை மாறி தாண்டிய சூழலும் நடப்பதுதான் கதை மேலும் நகரும் விதையாகிறது.

யமுனா என்ற நாயகியின் பாத்திரம் பொருந்தாத இரு வேறு (பிராமண, மராட்டியர்) சமூகத்தினிடையில் (( சுப்ரமண்ய  ஐயர், பார்வதி ) (இரண்டாம் மனைவியாக ) )திருமண பந்தத்தில் பிறக்கிறது.   நிலக்கிழாராக வாழும் சுப்ரமண்ய ஐயரின் திடீர் இறப்பும் அதன் பின் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேரும் படிப்படியான அடியின் வீழ்ச்சியில் வாழ்வே அற்றுப் போகும் யமுனாவின் வாழ்வில்  திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு வித காரணத்தால் தடைப்பட்டு கொண்டிருக்க நாயகனான பாபுவின் நேச உணர்வை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இரு குடும்பத்திற்கிடையேயான அறுந்து போகாது பிணைப்பு, அகால சந்தர்ப்பத்தில் பாபுவின் மனதிலிருந்து  வெளிப்படும் ஆசை யமுனாவை சோர்வடையச் செய்வதாலும் தன் முடிவை அறிவித்து விடுகிறாள்.

வளரிளம் பருவத்திலிருந்து பேரிளம் பருவத்திற்கு மாறும் பாபுவின் வேட்கை  ஒருதலைக்காதலா, இல்லை  உடல் சார்ந்த பிரச்சினையா என்ற கேள்விகளெல்லாம் கடந்து கதையின் ஏதோவொரு புள்ளியில் இருவரையும் தொடர்ந்து இணைத்து கொண்டே காலத்தையும் கடத்தி விடுகிறது.

காலம் முதிர்வதேயில்லை ஆனால் கதாபாத்திரங்கள் அடையும் மூப்பும் பக்குவமும் இழப்பும் எதிர்பார்ப்பும்   இருவருக்குமிடையேயான முடிவுறாப் பந்தத்தை  அறுபடாமல் கெட்டிப் படுத்துகிறதா அல்லது நைத்து விடுகிறதா என்ற புதிரோடு விடுகிறேன்.

காலம் காலமாக திருமண பந்தத்தின் மூலம் தான் பாலியல் பந்தம் சரி என்ற தவறான கலாச்சார ஒழுக்கை தி ஜாவின் கதாபாத்திரங்கள் மீறுவதும் அதுவே சங்கீத வாழ்வியலின் எவரும் காணாத உச்சத்தை அடையப் போகும் வாயிலின் சாவியாகப் போகிற கருதுகோளாவதும் அக்கால கொள்கை முரண்பாடுகளை தகர்ப்பதே நாவலின் அதீதம் . 

தி ஜா வின் பாலியல் விவரிப்புகள் விரசமில்லாத  புனைவின் நீந்தலில் நம்மை கடத்தி விடுவது எழுத்தாளுமைத்தனத்தின் உச்சமே.

இன்றைய பாலியல் விவரிப்புகள் காட்டாற்று வெள்ளத்தை போல கரடு முரடாகவும், விரசமும் , வன்மத்தின் மீதுள்ள மோகத்தில் குறியீடுகளால் சாதிகளோடு கொச்சைப்படுத்தி திருப்தியடைந்து விடுகிறது. அம்மாதிரியான எழுத்தாளுமைகள் விருதின் உச்சத்தை அடைவது என்பது எழுதும் கலையின் போதாமை மட்டுமே.

கலையை நேசித்து உச்சத்தை தொட நினைக்கும் கதாபாத்திரத்தோடே அரைகுறை கலையும், அதை விற்றுக் காசாக்கும் வித்தையோடமைந்த அறிவின் எள்ளலும்,  குழந்தைத் திருமணம் அதைச் சார்ந்த சமூக பிரச்சினைகள், நிலப்பிரபுத்துவ, குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்ட காலத்தில் பெண்களின் நிலை, கலப்புத் திருமணமும் அது சார்ந்து நிகழும் சமூகப் பிரச்சினைகளோடே பயணிக்கிறது.
இந்த சமூகப் பிரச்சினைகள் யாவும் அவர் காலத்தில்  அவர் பார்த்த மனிதர்கள்  அவர்களின் வாழ்வியல் முறைகளில் நடந்தேறிய நல்லதுகள் அவலங்கள் என உண்மைகளை, தனக்குரிய புனைவு களத்தில்  ஒன்றையொன்று ஒட்டும் பாத்திரமாக மாற்றி இணைத்திருப்பதாக தி.ஜா வின் பின்னுரையில் அறிய முடிகிறது. 

காலம் கடந்தும் மோகமுள் மறையாது இருப்பதற்கான ஆணிவேர் போலியான கலாச்சார ஒழுக்கை மீறுவது என்பது மட்டுமல்ல அதற்குரிய கதாப்பாத்திரங்களின் தனித்துவம் கொண்ட காத்திரமான நேர்மையான வெளிப்படுத்தலே. இறுதியாக, வாசிப்பில்  மோகமுள் குத்துவதில்லை.

No comments:

Post a Comment